வெள்ளிக் கிழமை. நற்செய்தி வாசகம்.

இயேசு சீடர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-14
அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றார். அவர்கள் “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்று, போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.
படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்” என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், “உணவருந்த வாருங்கள்” என்றார். சீடர்களுள் எவரும், “நீர் யார்?” என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
” சீடர்களுக்கு ஊக்கமூட்டிய உயிர்த்த இயேசு”
ஃபோர்ட் வாகன நிறுவனத்தின் நிறுவனர் ஹென்றி ஃபோர்ட் என்பவர். இவர் 1896 ஆம் ஆண்டு, ஒரு விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதே விருந்திற்கு தாமஸ் ஆல்வா எடிசனும் வந்திருந்தார். தாமஸ் ஆல்வா எடிசனையும் ஹென்றி ஃபோர்ட்டையும் நன்கு அறிந்த ஒருவர், ஹென்றி ஃபோர்டைத் தாமஸ் ஆல்வா எடிசனிடம், “இவர்தான் பெட்ரோலால் இயங்கக்கூடிய வாகனங்களைத் தயாரிப்பவர்” என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார். இதைக் கேட்டு தாமஸ் ஆல்வா எடிசன், ஹென்றி ஃபோர்டை வெகுவாகப் பாராட்டிவிட்டு, “மின்சாரத்தால் வாகனங்களை இயக்கத்தை விடவும், பெட்ரோலால் வாகனத்தை இயக்குவது மிகவும் நல்லது” என்று ஊக்கமூட்டிவிட்டுச் சென்றார்.
அதுவரைக்கும் பெட்ரோலால் ஓடக்கூடிய வாகனங்களைத் தயாரிப்பது சரியாக இருக்குமா என்று குழம்பிக்கொண்டிருந்த ஹென்றி ஃபோர்ட், தாமஸ் ஆல்வா எடிசன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும், உற்சாகமடைந்து, தான் சென்றுகொண்டிருக்கின்ற பாதை சரியானதுதான் என்று அந்தப் பாதையிலேயே தொடர்ந்து பயணம் செய்யத் தொடங்கினார்.
இது நடந்து பல ஆண்டுகள் கழித்து, ஹென்றி ஃபோர்ட் ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்பொழுது, “என்னுடைய இந்த வளர்ச்சிக்கு தாமஸ் ஆல்வா எடிசனையும் ஒரு முக்கியமான காரணமாகச் சொல்வேன். ஏனென்றால், வாகனங்களைப் பெட்ரோலில் ஓடும்படி தயாரிப்பதா? வேண்டாமா? என்று குழம்பிக் கொண்டிருந்த சூழ்நிலையில், அவர், ‘பெட்ரோலில் ஓடும்படி வாகனங்களைத் தயாரிப்பது மிகவும் நல்லது’ என்று சொல்லி, எனக்கு ஊக்கமூட்டினார். அவர் அளித்த ஊக்கமும் உற்சாகமும்தான், என்னை மோட்டார் வாகனத் துறையில் இவ்வளவு சாதிக்க முடிந்தது” என்றார்.
ஆம், ஒருவர் மற்றவருக்கு அளிக்கக்கூடிய ஊக்கமூட்டும் வார்த்தைகள், அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டுபோகும். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, சோர்வுற்று இருந்த சீடர்களுக்குத் தன்னுடைய உடனிருத்தல் மூலமாக, வார்த்தைகள் மூலமாக ஊக்கமூட்டி, அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு போகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பழைய வேலைப் பார்க்கப்போன சீடர்கள்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, திபேரியக் கடலருகே தன் சீடர்களுக்குத் தோன்றுவதைக் குறித்து வாசிக்கின்றோம். ஆண்டவர் இயேசு உயிர்த்த பின் தன்னுடைய சீடர்களுக்கு எருசலேமையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்த்து, ஆறுமுறைக்கும் மேல் தோன்றினார். அதன் பிறகு அவர் தன் சீடர்களுக்குக் கலிலேயாவில் தோன்றுகின்றார்.
இயேசு தன் சீடர்களைக் கலிலேயாவில் சந்திப்பதாகச் சொல்லியிருந்தார் (மத் 28:10; மாற் 14: 28). அதன்படி சீடர்கள் கலிலேயாவிற்கு வந்திருந்தார்கள்; ஆனால், கலிலேயாவிற்கு வந்தபின்பு அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால்தான் அவர்கள் முன்பு செய்த மீன்பிடித் தொழிலைச் செய்யத் தொடங்குகின்றார்கள். சீடர்கள் முன்புசெய்த மீன்பிடித் தொழிலைச் செய்யத் தொடங்கியது என்பது, அவர்களிடம் இருந்த சோர்வையும் உற்சாகமின்மையும் காட்டுவதாக இருக்கின்றது. இப்படிப்பட்ட சூழலில் இயேசு அவர்களுக்குத் திபேரியக் கடலருகே தோன்றுகின்றார்.
தன்னுடைய உடனிருப்பினால் சீடர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டிய இயேசு
உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு ஏற்கெனவே இரண்டு முறை தோன்றி, அவர்களை ஊக்கமூட்டியபொழுதும், அவர்கள் இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை இல்லாமலேயே இருந்தார்கள். இதனால் இயேசு மீண்டுமாக அவர்களுக்குத் தோன்றுகின்றார். இயேசு அவர்களுக்குத் தோன்றுவதற்கு முன்பாக, அவர்கள் இரவெல்லாம் பாடுபட்டு மீன் ஒன்றும் கிடைக்காமல் இருந்தார்கள். இந்நிலையில் இயேசு அவர்களிடம், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்” என்று சொல்கின்றார். அவர்களும் அவர் சொன்னது போன்று வலையை வீச, வலை கிழிகின்ற அளவுக்கு மீன் கிடைக்கின்றது.
இந்நிகழ்வு சீடர்களுக்கு லூக்கா நற்செய்தி 5 ஆம் அதிகாரத்தில் இடம்பெறும் நிகழ்வினை (லூக் 5: 1-11) நிச்சயம் நினைவுபடுத்தியிருக்கும். மட்டுமல்லாமல், தங்களோடு பேசுபவர் இயேசுதான் என்பதை அவர்களுக்கு உணர்த்தி இருக்கும். இதன்மூலம் அவர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். ஆம், உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு மீண்டும் மீண்டுமாக தோன்றியதற்குக் காரணம், அவர்கள் இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொள்ளவேண்டும்; அவர்கள் தங்களிடம் இருக்கின்ற அச்சத்தையும் நம்பிக்கையின்மையும் போக்கி, நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் இருக்கவேண்டும் என்பதற்குத்தான்.
இயேசுவின் வார்த்தைகளும் அவர் சீடர்களுக்கு மீண்டும் மீண்டும் தோன்றியதும் சோர்வுற்றிருந்த சீடர்களுக்குக் உற்சாகமூட்டி, அவர்கள் இயேசுவின் உயிர்ப்பை மக்களுக்கு மிகுந்த வல்லமையோடு அறிவிக்கச் செய்தன. நாமும் இயேசுவின் வார்த்தைகளால் உற்சாகமடைந்து, அவரைப் பற்றி மக்களுக்கு மிகுந்த வல்லமையோடு எடுத்துரைப்போம். அவரது உண்மையான சீடர்கள் ஆவோம்.
சிந்தனை.
‘தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்’ (எரே 12: 12) என்பார் இறைவாக்கினர் எரேமியா. ஆகையால், நாம் உடலளவிலும் உள்ளத்தளவிலும் தளர்ந்துபோய் இருக்கின்ற மக்களைத் திடப்படுத்துவோம். அதற்கு முன்பு நாம் திடமாய் இருப்போம். இயேசுவுக்கு மிகுந்த வல்லமையோடு சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.