93 வயதை நிறைவு செய்துள்ள முன்னாள் திருத்தந்தை

தன் 93வது வயதை நிறைவு செய்துள்ள முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு, தற்போது நிலவும் கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால், எவ்வித விழாவும் இடம்பெறவில்லை என்றும், அவர் மக்களின் எண்ணங்களிலும், செபத்திலும் இருக்கிறார் என்பதே முக்கியம் என்றும் முன்னாள் திருத்தந்தையின் உதவியாளர், பேராயர் Georg Gänswein அவர்கள் கூறினார்.

முன்னாள் திருத்தந்தையின் 93வது பிறந்தநாளையொட்டி வத்திக்கான் செய்தித்துறைக்குப் பேட்டியளித்த பேராயர் Gänswein அவர்கள், இந்த நன்னாளில், பெனடிக்ட் அவர்களின் மூத்த சகோதரரான அருள்பணி Georg Ratzinger உட்பட, பலர் திருத்தந்தைக்கு தொலைப்பேசி வழியே வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளன என்று குறிப்பிட்டார்.

தொற்றுக்கிருமியின் உலகலாவியப் பரவலைக் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து வரும் முன்னாள் திருத்தந்தை, இத்தாலியின் வட பகுதியில் இந்நோயின் தாக்கம் குறித்தும், குறிப்பாக, இந்நோயினால் இறந்த அருள்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் ஆகியோர் குறித்தும் முன்னாள் திருத்தந்தை வேதனையடைந்தார் என்றும், நோயினால் பாதிக்கப்பட்டோர் அனைவருக்காகவும் செபித்துவருகிறார் என்றும், பேராயர் Gänswein அவர்கள் கூறியுள்ளார்.

ஏப்ரல் 16 வியாழன் காலை, முன்னாள் திருத்தந்தை தங்கியிருக்கும் Mater Ecclesiae துறவு மடத்தில், இந்த பிறந்த நாள், திருப்பலியுடன் துவங்கியது என்பதைக் குறிப்பிட்ட பேராயர் Gänswein அவர்கள், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைக் குறித்து, ஜெர்மன் எழுத்தாளர் Peter Seewald அவர்கள் வடிவமைத்துள்ள வாழ்க்கை வரலாற்றின் முதல் பிரதி அவருக்கு பரிசாக அளிக்கப்பட்டது என்று கூறினார்.

“16ம் பெனடிக்ட் – ஒரு வாழ்க்கை” என்ற தலைப்பில், நான்கு பகுதிகளாக எழுதப்பட்டுள்ள இந்நூல், இவ்வாண்டு மே மாதம் 4ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.