நற்செய்தி வாசக மறையுரை (ஏப்ரல் 03)

தவக்காலம் ஐந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை
யோவான் 10: 31-42
“நீங்கள் தெய்வங்கள்”
நிகழ்வு
அவர் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மகான். அவர் தன்னிடம் வந்த மக்களுக்கு நல்லவிதமாய் ஆலோசனைகளைச் சொல்லி, அவர்களுக்கு நல்வழி காட்டி வந்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மகானுக்கு நன்கு அறிமுகமான மருத்துவர் ஒருவர், இவரிடம் வந்து, தன்னுடைய வீட்டிற்கு விருந்துண்ண வருமாறு கேட்டார். மகானும் மருத்துவரின் அழைப்பை ஏற்று, அவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றார். மருத்துவருக்கு கடவுள்மீது நம்பிக்கை கிடையாது. அவர், மகான் தன்னுடைய வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக, வீட்டு முகப்பில் எழுதப்பட்டிருந்த ‘GOD IS NO WHERE’ (கடவுள் எங்கும் இல்லை) என்ற வார்த்தைகளைச் சுட்டி, “இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
மகன் ஒருநிமிடம் அமைதியாக இருந்தார். ‘இப்பொழுது இவர் மிகப்பெரிய சொற்பொழிவை ஆற்றப்போகிறார்’ என்று மருத்துவர் நினைத்துக் கொண்டிருக்கையில், மகான் பேசத் தொடங்கினார்: “நீங்கள் எழுதி இருப்பது மிகவும் நன்றாக இருக்கின்றது; ஆனால், இதில் ஒரே ஒரு பிழை இருக்கின்றது.” இப்படிச் சொல்லிவிட்டு, NO WHERE என்று இருந்ததை, NOW HERE என்று திருத்தினார். பின்னர் மகான் அவரிடம், “கடவுள் எங்கும் கிடையாது அல்லது கிடையவே கிடையாது என்று சொல்வது மிகப்பெரிய அபத்தம். கடவுள் இங்கு இருக்கின்றார்; அவர் உனக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கின்றார்” என்றார். மகான் இப்படியொரு விளக்கம் கொடுப்பார் என்று சிறிதும் எதிர்பார்த்திராத மருத்துவர் வாயடைத்து நின்றார்.
ஆம், கடவுள் நம் ஒவ்வொருவருக்குள் குடிகொண்டிருக்கின்றார். அப்படியானால், இதை இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கின்ற வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், ‘நாம் தெய்வங்கள்’. இயேசு இவ்வாறு சொன்னது யூதர்கள் நடுவில் மிகப்பெரிய எதிர்வினையை ஏற்படுத்தியது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
இயேசுவின் மீது கற்களை ஏறிய முயன்ற யூதர்கள்
இன்றைய நற்செய்தி வாசகத்தில், யூதர்கள் மீண்டுமாக இயேசுவின்மீது கற்களை எறிய முயன்றார்கள் என்பதாகத் தொடங்குகின்றது. இந்த நிகழ்விற்கு முன்பாக யூதர்கள் இயேசுவின் மீது இரண்டு முறை கற்களை எறிய முயன்றார்கள் (யோவா 5: 7-18; 8: 58-59); இது மூன்றாம் முறை. யூதர்கள் இயேசுவின் மீது கற்களை எறிய அவர்கள் சொன்ன காரணம், இயேசு தன்னைக் கடவுளாக்கிக் கொண்டார் என்பதுதான். லேவியர் புத்தகம் 24: 16 இவ்வாறு கூறுகின்றது: “ஆண்டவரின் திருப்பெயரை இகழ்பவர் கொலை செய்யப்படுவார்.” இதை அடிப்படியாகக் கொண்டு, யூதர்கள் இயேசு தன்னைக் கடவுளாக்கிக் கொண்டார் என்று அவர்மீது கற்களை எறிய முற்படுகின்றார்கள்.
நீங்கள் தெய்வங்கள்
இயேசு, தான் இறைமகன் என்பதைத் தன்னுடைய சொற்களாலும் செயல்களாலும் பல்வேறு சான்றுகளாலும் நிரூபித்தார். அப்படியிருந்தும் யூதர்கள் அவரை நம்பவில்லை. அதனால் இயேசு திருவிவிலியத்திலிருந்து அவர்களுக்குச் சான்று அளிக்கின்றார். “நீங்கள் தெய்வங்கள்; நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்” (திபா 82:6) என்ற திருப்பாடல் எண்பத்து இரண்டை மேற்கோள் காட்டிப் பேசும் இயேசு, “தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு, அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை இறைமகன் என்று சொல்லிக்கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கின்றாய்’ என் நீங்கள் எப்படிச் சொல்லலாம்” என்கின்றார்.
யூதர்கள் நடுவில் இருந்த நடுவர்கள் கடவுள் என அழைப்பட்டார்கள் (விப 4:16; 7:1). அப்படியிருக்கும்பொழுது, தான் இறைமகனாக இருக்கும்பொழுது, அவ்வாறு அழைப்பதில் என்ன பிழை என்றுதான் இயேசு யூதர்களிடம் கேட்கின்றார். இயேசு இவ்வாறு சொல்லக்கேட்ட, யூதர்கள் அவரைப் பிடிக்க முயல்கின்றார்கள். அவரோ யோர்தானுக்கு அப்பால் சென்று தன்னுடைய பணியைச் செய்யத் தொடங்குகின்றார்.
இயேசு யோர்தானுக்கு அப்பால் சென்று தங்கினார் என்பது அவர் மீண்டுமாக, அதே இறைப்பணியைத் தொடர்ந்து செய்தார் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. ஆம், இயேசு எத்தகைய எதிர்ப்புகள் வந்தபொழுதும், தன்னுடைய பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். நாமும் அவரைப் போன்று இறைப்பணியைத் தொடர்ந்து செய்து, அவருடைய உண்மையான சீடர்கள் ஆவோம்.
சிந்தனை
‘உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோயில் என்று தெரியாதா?’ (1கொரி 6: 19) என்பார் புனித பவுல். ஆகையால், தூய ஆவியார் – கடவுள் குடிகொண்டிருக்கும் கோயிலாகிய நாம், இயேசுவைப் போன்று எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், இறைப்பணியைத் தொடர்ந்து செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.