கோவிட் 19 – புனித வெள்ளியன்று சிறப்பு மன்றாட்டு
இவ்வாண்டு ஏப்ரல் 10ம் தேதி, புனித வெள்ளியன்று நடைபெறும் வழிபாட்டில், எழுப்பப்படும் சிறப்பு மன்றாட்டுக்களில், உலகெங்கும் பரவியுள்ள கோவிட் 19 தொற்றுக்கிருமி நெருக்கடியையொட்டி ஒரு சிறப்பு மன்றாட்டை, திருவழிபாட்டு பேராயம் உருவாக்கியுள்ளது.
கோவிட்-19 தொற்றுக்கிருமியிலிருந்து காக்க…
புனித வாரத்தின் வெள்ளியன்று நடைபெறும் ஆண்டவருடைய பாடுகள் மற்றும் திருச்சிலுவை வணக்கம் ஆகிய வழிபாட்டு நிகழ்வுகளில், திருஅவை, திருத்தந்தை, திருமுழுக்கு பெற தயாரிப்போர் உட்பட பல்வேறு தேவைகளுக்காக எழுப்பப்படும் மன்றாட்டுக்களில், இவ்வாண்டு, குறிப்பாக, கோவிட்-19 தொற்றுக்கிருமியின் தாக்கத்திலிருந்து இறைவன் இவ்வுலகைக் காக்கவேண்டுமென்ற ஒரு சிறப்பு மன்றாட்டை இணைக்கும்படி, திருவழிபாட்டு பேராயம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த தொற்றுநோயின் உலகளாவிய பரவலால் துன்புறுவோரை, இறைவன் தன் கருணையால் காத்தருளுமாறும், அவர்களின் வேதனைகளைத் தீர்க்குமாறும், இந்த நோயினால் இறையடி சேர்ந்தோருக்கு நித்திய சாந்தி அளிக்கவும், நோயுற்றோரைப் பராமரிப்போருக்கு இறைவன் சக்தி வழங்கவும் இந்த வேண்டுதல் எழுப்பப்பட்டுள்ளது.
சிறப்புக் கருத்து திருப்பலி
மேலும், இந்த தொற்றுநோயை முடிவுக்குக் கொணர இறைவனிடம் மன்றாடும் ஒரு சிறப்புக் கருத்து திருப்பலியை திருவழிபாட்டுப் பேராயம் பரிந்துரைத்துள்ளதோடு, இந்த திருப்பலியின் துவக்கத்தில் சொல்லப்படும் சபை மன்றாட்டை இப்பேராயம், பின்வருமாறு வடிவமைத்துள்ளது:
“என்றென்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, எங்கள் நெருக்கடிகளிலும், ஆபத்துக்களிலும் எங்கள் தஞ்சமாய் இருப்பவரே, நம்பிக்கையுடன் உம்மிடம் வேண்டுகிறோம், நோயினால் தாக்கப்பட்டோரை கருணையுடன் நோக்குவீராக, இறந்தோருக்கு முடிவில்லா அமைதி வழங்குவீராக, அழுது புலம்புவோருக்கு ஆறுதலும், நோயுற்றோருக்கு நலமும், இறக்கும் நிலையில் இருப்போருக்கு அமைதியும், நலப்பணியாளர்களுக்கு சக்தியும், எங்கள் தலைவர்களுக்கு ஞானமும், அனைவருக்கும் அன்புடன் உதவி செய்யும் துணிவும் வழங்கியருளும். இவற்றின் விளைவாக, நாங்கள் உமது புனித பெயருக்கு மகிமை தருவோமாக.”
மார்ச் 30, இத்திங்களன்று, திருவழிபாட்டு பேராயம் வெளியிட்ட இந்த மன்றாட்டுக்கள் அடங்கிய அறிக்கை, உலகெங்கிலும் உள்ள ஆயர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Comments are closed.