மார்ச் 24 : நற்செய்தி வாசகம்

உடனே அம்மனிதர் நலமடைந்தார்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-3a, 5-16
யூதர்களின் திருவிழா ஒன்று வந்தது. இயேசுவும் எருசலேமுக்குச் சென்றார். எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்கு வாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப்படுத்துக் கிடப்பர்.
முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார். இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்டார். “ஐயா, தண்ணீர் கலங்கும்போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று உடல்நலமற்றவர் அவரிடம் கூறினார். இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார்.
அன்று ஓய்வுநாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், “ஓய்வுநாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்” என்றார்கள். அவர் மறுமொழியாக, “என்னை நலமாக்கியவரே ‘உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்’ என்று என்னிடம் கூறினார்” என்றார். “ ‘படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்’ என்று உம்மிடம் கூறியவர் யார்?” என்று அவர்கள் கேட்டார்கள். ஆனால் நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய்விட்டார்.
பின்னர் இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, “இதோ பாரும், நீர் நலமடைந்துள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்” என்றார். அவர் போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார். ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
“இனிப் பாவம் செய்யாதீர்”
நிகழ்வு
குருவானவர் ஒருவர் இருந்தார். இவர் தன்னுடைய போதனைகளில் அடிக்கடி பாவத்தைக் குறித்தும் பாவத்திற்குக் கிடைக்கும் தண்டனையைக் குறித்தும், அதனால் பாவம் செய்யாமல் இருக்கவேண்டும் என்றும் போதித்து வந்தார்.
இவருடைய போதனையைத் தொடர்ந்து கேட்டு வந்த பெரியவர் ஒருவர் இவரிடத்தில் சென்று, “சுவாமி! உங்களுடைய போதனைகள் மிகவும் அருமையாக இருக்கின்றன; ஆனால், நீங்கள் அடிக்கடி பாவத்தைக் குறித்துப் போதிப்பதால், பாவம் செய்வது குறைவதற்குப் பதில், பெருகிவிடுமோ என்று அச்சமாக இருக்கின்றது. பேசமால் பாவத்தைக் குறித்துப் போதிப்பதை நிறுத்திவிடுங்கள். பாவமும் குறைந்துவிடும்” என்றார்.
அந்தப் பெரியவர் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த குருவானவர் மெல்லப் பேசத் தொடங்கினார்: “ஐயா! உங்களுக்கு ஒரு நோய் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் – ஒரு பேச்சுக்குத்தான். அதைப் பற்றி நீங்கள் யாரிடத்திலும் பேசாமல், மருத்துவரிடமும் காட்டாமல், அப்படியே உங்களுக்குள் வைத்திருந்தால், அந்த நோய் உங்களை விட்டு நீங்கிவிடுமா…? நீங்காதுதானே! உங்களிடம் இருக்கின்ற நோய் உங்களை விட்டு நீங்கவேண்டும் என்றால், அதை நீங்கள் மருத்துவரிடம் காட்டவேண்டும். அப்பொழுதான் அந்த நோய் உங்களை விட்டு நீங்கும். அதுபோன்றுதான் பாவமும். பாவத்தைக் குறித்துப் பேசாமல் இருந்துவிட்டால்மட்டும் பாவம் குறைந்துவிடாது அல்லது பாவம் இந்த உலகத்தை விட்டு நீங்கிவிடாது. பாவத்தைக் குறித்துப் பேசவேண்டும். அதுகுறித்த விளக்கத்தைச் சொல்லி, மக்களை மனமாற்றத்திற்கு அழைக்கவேண்டும். அப்பொழுதான் பாவம் குறையும்; பாவம் இந்த உலகத்தை விட்டு நீங்கும்.”
குருவானவர் கொடுத்த இந்த விளக்கத்தைக் கேட்டு பெரியவர் வாயடைத்து நின்றார். அப்பொழுதுதான் அவர் பாவத்தைக் குறித்துப் பேசுவதன், போதிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார்.
ஆம், பாவம் குறித்த விழிப்புணர்வையும் பாவம் செய்யக்கூடாது என்ற அழைப்பினையும் மக்களுக்குத் தரவேண்டும். அது மிகவும் முக்கியமானது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த மனிதரை நலப்படுத்திய பின்பு, “இனிப் பாவம் செய்யாதீர்” என்று சொல்கின்றார். இயேசு சொல்லும் இவ்வார்த்தைகளுக்குப் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
முடக்குவாதமுற்றவரின் விருப்பத்தோடு இயேசு அவரை நலப்படுத்துதல்
யூதர்கள் பாஸ்காப் பெருவிழா, பெந்தக்கோஸ்துப் பெருவிழா மற்றும் கூடாரப் பெருவிழா என்று மூன்று பெருவிழாக்களைக் கொண்டாடுவார்கள். இப்பெருவிழாக்களில் கலந்துகொள்வதற்கு யூதர்கள், அதிலும் குறிப்பாக பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வோர் ஆணும் எருசலேமுக்கு வருவர்; இயேசுவும் எருசலேமிற்கு வருகின்றார். அப்பொழுதுதான் பெத்சதா குளத்தருகே முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவர் இருப்பதைக் கண்டு இயேசு அவரிடம், “நலம்பெற விரும்புகிறீரா?” என்று கேட்கின்றார். அவரும் தன்னுடைய விரும்பத்தைத் தெரிவிக்கவே, இயேசு அவருக்கு நலமளிக்கின்றார்.
இயேசுவால் அந்த மனிதரை, அவருடைய விருப்பமின்றி நலப்படுத்த முடியும் என்றாலும், அவருடைய விருப்பத்தைக் கேட்டறிந்த பின்பே இயேசு அவரை நலப்படுத்துகின்றார். இந்நிகழ்வு கடவுள் நம்முடைய விருப்பத்திற்கு, சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கின்றார் என்ற உண்மையை எடுத்துக் கூறுவதாக இருக்கின்றது.
பாவம் செய்யாதீர் என்று அறிவுறுத்துதல்
இயேசு அந்த மனிதரை நலப்படுத்திய பின்பு, மீண்டுமாக அவரைச் சந்திக்கின்றபொழுது, “இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்” என்கிறார். யூதர்கள் நடுவில் ஒருவருக்கு வரும் நோய்க்கும் பாவத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது (யோவா 9:3) என்ற நம்பிக்கை இருந்தது. இயேசு அந்த நம்பிக்கையைச் சீர்குழைக்காமல், இதைவிடக் கேடானது எதுவும் நிகழாமல் இருக்கப் பாவம் செய்யாதீர் என்று அவரிடம் கூறுகின்றார்.
ஆம், நாம் பாவம் செய்கின்றபொழுது, கடவுளை விட்டு வெகுதொலைவு செல்கின்றோம். இதனால் கடவுளின் அருளையும் ஆசியையும் இழக்கின்றோம். கடவுளின் ஆசியை இழக்கின்றபோது, நமக்குக் கேடானதுதானே நடக்கும்! அதனால்தான் இயேசு பாவம் செய்யதீர் என்று அந்த மனிதரைப் பார்த்துச் சொல்கின்றார். ஆகையால், கடவுளின் ஆசி நமக்குத் தொடர்ந்து கிடைக்க, பாவத்தைத் தவிர்த்து அவருடைய வழியில் எப்பொழுதும் நடப்போம்.
சிந்தனை
‘பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு’ (உரோ 6: 23) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் பாவம் செய்து, இறந்துவிடாமல் அல்லது அருள் வாழ்வை இழந்து விடாமல், ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.