திருத்தந்தை: மார்ச் 27, சிறப்பு ஊர்பி எத் ஓர்பி ஆசீர்
உலகில் கொரோனா தொற்றுக்கிருமி முற்றிலும் அழியவும், அக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களைப் பராமரிப்போர், மற்றும், இந்த நெருக்கடியால் துன்புறும் அனைவருக்காகவும் செபிக்கும் நோக்கத்தில், மார்ச் 27, வருகிற வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் செபித்து, ஊருக்கும் உலகுக்கும் வழங்கப்படும் ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீரை வழங்கவிருப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று அறிவித்தார்.
வத்திக்கான் மாளிகையிலுள்ள தன் நூலகத்திலிருந்து, மார்ச் 22, இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு, மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன்பின்னர், மனிதர் நடமாட்டமின்றி காலியாக இருக்கும் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், மார்ச் 27, வருகிற வெள்ளியன்று தான் தலைமையேற்று நடத்தும் செபத்தில், சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக ஆன்மீக முறையில் பங்குகொள்ளுமாறு எல்லாருக்கும் அழைப்பு விடுப்பதாகக் கூறினார்.
விவிலியத்திலிருந்து வாசகங்கள், மன்றாட்டு செபங்கள், திருநற்கருணை ஆராதனை ஆகியவை இச்செப நிகழ்வில் இடம்பெறும் எனவும், அதன் முடிவில், ஊர்பி எத் ஓர்பி ஆசீரை, தான் வழங்குவதாகவும் அறிவித்த திருத்தந்தை, பல்வேறு சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக இந்நிகழ்வில் பங்குகொள்பவர்கள் எல்லாரும் பரிபூரண பலனைப் பெறுவதற்காக, இந்த சிறப்பு ஆசீரை வழங்குவதாகவும் அறிவித்தார்.
இச்செப நிகழ்வு பற்றி அறிவித்த, திருப்பீட தகவல் தொடர்பு இயக்குனர், இதன் நேரடி ஒளிபரப்பு வத்திக்கானிலிருந்து உரோம் நேரம் மாலை ஆறு மணிக்குத் தொடங்கும் என்றும், ஊர்பி எத் ஓர்பி ஆசீரால் கிடைக்கும் பரிபூரண பலனைப் பெறுவதற்கு, பரிபூரண பலன் குறித்து திருப்பீட மனசாட்சி பேராயம் அறிவித்துள்ள வரையறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தார்.
ஊருக்கும் அதாவது உரோம் நகருக்கும், உலகுக்கும் வழங்கப்படும் திருத்தந்தையின் ஊர்பி எத் ஓர்பி ஆசீர், வழக்கமாக, கிறிஸ்மஸ் மற்றும், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா நாள்களில் மட்டும் வழங்கப்படுகின்றன.
குரோவேஷியாவுக்கு செபங்கள்
மார்ச் 22, இஞ்ஞாயிறு காலையில் குரோவேஷியாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் பற்றியும் இம்மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, அந்நாட்டு மக்கள், இந்த இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ள சக்தியையும், ஒருமைப்பாட்டையும் பெற இறைவனிடம் செபிப்பதாக உறுதியளித்தார்
Comments are closed.