தவக்காலச் சிந்தனைகள் 6 : ஒருத்தல் முயற்சிகள் செய்ய வழிகள் தொடர்கிறது

1. உணவை மருந்தைப் போல உண்ண வேண்டும். மருத்துவர் சொன்ன அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ யாரும் மருந்தை உட்கொள்வதில்லை. அதுபோல உணவையும் ஒரு குறிப்பிட்ட அளவு உட்கொள்வது ஒரு தவ முயற்சி.
2. பசிக்காக உண்பதும், ருசிக்காக உண்ணாதிருப்பதும் ஒரு தவ முயர்சி.

3. இரு உணவு வேளைகளுக்கு மத்தியில் நொறுக்குத் தீனியைத் தவிர்ப்பது ஒரு தவ முயற்சி.
4. உங்களுக்கு ஆண்டவர் எதைத் தருகிறாரோ அதைப் பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்று பிரிக்காதீர்கள். ஆண்டவருக்குத் தரப்பட்ட கசப்பான காடியை விட அதிக கசப்பான ( நமக்குப் பிரியமில்லாத) எந்த உணவையும் ஆண்டவர் நமக்குத் தரவில்லை.

5. எப்போது எழுவது, எப்போது தூங்குவது என்பதை முடிவு செய்து கண்டிப்பாக செயல்படுத்துங்கள்.
6. சும்மா படுத்திருப்பது தீமைக்கு வழிவகுக்கும்.
7. ஏதேனும் சிறிதளவு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஆர்ப்பாட்டம் செய்து நம்மைச் சுற்றி இருப்போரை தொந்தரவு செய்யாதிருப்பது ஒரு தவ முயற்சி.

8. சுகவீனம் என்ற ஒரு நிலை வருமானால் அதை அமைந்த மனதுடனும், தாழ்மையுடனும், பொறுமையுடனும் தாங்குவது ஒரு தவ முயற்சி. ஆனால் உரிய மருத்துவம் செய்வது நம் கடமை.
9. தெருவில் எதிர்படும் ஒருவர் எவ்வளவு அழகாக இருக்கிறார், அல்லது அழகற்றவராயிருக்கிறார் என்று உற்றுப் பார்க்காதீர்கள்.

10. யாராவது உங்களைப் புகழ்ந்தால் அல்லது பிறரைப் பற்றி உங்களிடம் குறை சொன்னால் காதைப் பலமாக மூடிக்கொள்ளுங்கள்.
11. உங்கள் அருகில் இருப்பவரிடம் இருந்து நோய் காரணமாக அல்லது வேறு காரணங்களுக்காக ஒரு துர்வாடை வருகிறதென்றால் மூக்கை மூடாதீர்கள், அவரது ஆன்மா கடவுள் முன்னிலையில் மதிப்பு மிக்கது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

12. அநாவசியமாக யாரையும் தொடாதீர்கள்.
13. குளிர் காலத்திலும் சரி கோடை காலத்திலும் சரி, தரையில் படுத்தாலும் சரி பாயில் படுத்தாலும் சரி வசதி குறைவு பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள்.
14. எதிர்காலத்தில் நடக்க இருப்பதைப் பற்றி கற்பனை செய்யாதீர்கள். ஆண்டவரின் பராமரிப்பை முழுவதுமாக நம்புங்கள்.

Comments are closed.