தவக்காலம் மனமாற்றத்தின் காலம்

40 நாட்கள் தவக்காலத்தில் நாம் நமது தவறான பழக்க வழக்கங்களை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். இவ்வுலக சக்திகளின் போதனைகளாலும் விண்ணரசின் உயர் கூறுகளாலும் உள்ளம் நிறைந்திட வேண்டிய காலம்தான் தவக்காலம். (எரே 1:10) ஏனெனில் உண்மையைக் கடைப்பிடிப்போர் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பர் (தொபி 4:6).
ஒவ்வொரு விசுவாசியும் பரிசுத்த ஆவியானவர் வாழும் கோவில் என்பதால் பரிசுத்தமற்றவை அனைத்தையும் அங்கிருந்து தவறானவைகளை நீக்கம் செய்ய வேண்டும். வாழும் கடவுளின் கோவில் நாமே (2 கொரி 6:16) என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் என்று ஆண்டவர் சொன்னதை நினைவில் கொள்வோம் (யோவா 2:16).
இறைவனின் திருவுளத்திற்கேற்ப பண்படுத்தப்பட்ட இதயத்தில் இறை மாட்சிமை தங்கும். இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைவிடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும் (ஆகா 2:9). அந்நாளில் உன்னை என் அரச இலட்சினையாய் அணிந்து கொள்வேன். ஏனெனில் உன்னையே நான் தெரிந்து கொண்டேன் என்கிறார் படைகளின் ஆண்டவர் (ஆகா 2:23).
தவக்காலம் என்பது தனி மனிதரும், குடும்பங்களும், திருச்சபைகளும் தங்களுடைய சொந்த விருப்பங்களைக் கைவிட்டு ஆண்டவரை வணங்கி ஆராதனையும் அன்பும் செய்ய வேண்டிய காலமாகும்.
அப்போது விசுவாசிகள் உலகை விட்டு ஆண்டவரிடம் திரும்புகின்றனர். அத்திருப்பயணத்தின் போது அவர்கள் ஆண்டவரின் அளவற்ற அன்பைத் தூய்த்துணர்ந்து கொள்கின்றனர்.
அவர்கள் தங்களை நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் ஆண்டவரை, மடியில் உட்காரவைத்து வயிறார உணவளிக்கும் ஆண்டவரை, தமது இறக்கைகளில் சேர்த்து வைத்து பரலோகத்திற்கு அழைத்துச் செல்லும் ஆண்டவரை, தமது பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டு வாழ்வளிக்கும் ஆண்டவரை, தாகம் தீர்க்க தண்ணீர் தந்து ஆறுதல் அளிக்கும் ஆண்டவரை, மருந்து தடவி குணமாக்கும் ஆண்டவரை, தைலம் தடவி கல்லான இதயத்தைச் சதையாலான இதயமாக மாற்றும் ஆண்டவரை, சுவாசங்களில் உயிர்மூச்சை ஊதி உயிர் உள்ளவன் ஆக்கும் ஆண்டவரைக் காண்கின்றனர். கேட்கின்றனர்.
மற்றும் தொட்டுணர்கின்றனர்.
என்னிடம் மன்றாடு; உனக்கு நான் செவிசாய்ப்பேன்; நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன் (ஏரே 33:3)
நோன்பு காலத்தில் நாம் ஆண்டவரைக் குறித்து கூடுதலாக ஆழமாக அறிந்து கொள்ள முயற்சி செய்யும் போதுதான் மறைபொருள்களின் விளக்கம் வெளிப்படுத்தப்படும். உண்மையை வெளிப்படுத்தும் பரிசுத்த ஆவியானவர் நம்மீது பொழியப்படும் காலமான தவக்காலத்தில் நம்மால் நிறைவை நோக்கிச் செல்ல இயலும் (யோவா 16:13).
படைகளின் கடவுளாகிய ஆண்டவர் மீது பேரார்வம் கொண்டவராய் இருக்க முடியும். (1 19:9 – 14). கலகங்களின் பள்ளத்தாக்குகளிலிருந்து இறை மாட்சிமையின் மலைமேல் ஏற இயலும் (மத் 17:1-2). பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28).
ஆறுதலான வாழ்வை, மகிழ்ச்சியான வாழ்வை, நிலையான வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கான அழைப்புத்தான் தவக்காலம். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலை வாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள் (யோவா 6:27). தவம் வேதனை தரலாம், ஆனால் அது நிலைவாழ்வுக்கான வழியாக இருக்கும் என்று ஆண்டவர்தாமே கூறுகின்றார்.
மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா! (லூக் 24:26). துன்பங்களால்தான் மாட்சி அடைய இயலும் என்று திருத்தூதர் பவுலும் போதிக்கின்றார். கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெரு மகிழ்வும் கொள்ள முடிகிறது.
அதுமட்டும் அல்ல துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில் துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். அந்த எதிர்நோக்கு ஒரு போதும் ஏமாற்றம் தராது ( உரோ 5:2-5).
தவக்காலத்தில் துன்பங்களைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்பவர்களுக்கு இயேசு கிறிஸ்து வெளிப்படும் போது அவர்களுடைய நம்பிக்கை புகழும் மாண்பும் பெருமையும் கிடைக்கும் (1 பேது 1:6-8). கிறிஸ்துவின் பாடுகளின் பங்கு பெறும் நாம் உயிர்ப்பிலும் பங்காளராவோம்.
ஆமென்

Comments are closed.