நற்செய்தி வாசக மறையுரை (பிப்ரவரி 24)

பொதுக்காலம் ஏழாம் வாரம்
திங்கட்கிழமை

மாற்கு 9: 14-29

“நான் நம்புகிறேன்”

நிகழ்வு

1961 ஆம் ஆண்டு, தன்னை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டார் என்பதற்காக இளைஞன் ஒருவன் அவருடைய வீட்டையே தீயிட்டுக் கொழுத்திவிட்டான். இதனால் அந்த இளைஞனுக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த இளைஞன், எல்லாமே மாறியிருப்பதைக் கண்டு குழம்பிப் போனான். ஒருசிலரிடம் அவன் வேலை கேட்டபொழுது, அவர்கள் அவனுடைய கடந்த கால வாழ்வைச் சுட்டிக்காட்டி வேலை தரமுடியாது என்று சொல்லி வெளியே துரத்தினார்கள். இன்னும் ஒருசிலர் அவனிடம் கடுஞ்சொற்களைச் சொல்லிக் காயப்படுத்தினார்கள். இதனால் மிகுந்த வேதனையடைந்த அவன் சிறைச்சாலைக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என்று முடிவு செய்தான்.

இந்நிலையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் அவன்மீது முழுமையான நம்பிக்கை வைத்து, அவனுக்குத் தன்னுடைய வீட்டில் ஒரு வேலை போட்டுக் கொடுத்தார். அவனும் அதற்கு நம்பிக்கைக்குரியவனாய் இருந்து, வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்தான். பின்னாளில் அவன் சமூகத்தில் ஓர் உயர்ந்த இடத்தை அடைந்தபொழுது கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தான். “ஒருவேளை அந்தக் கல்லூரிப் பேராசியர் மட்டும் என்மீது நம்பிக்கை வைக்காமல் இருந்திருந்தால், என்னுடைய வாழ்க்கையே சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் சீரழிந்திருக்கும். அவர் என்மீது நம்பிக்கை வைத்தார். அந்த நம்பிக்கைதான் என்னை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கின்றது” என்று எண்ணிப் பெருமைகொண்டான்.

ஆம், நம்பிக்கை என்பது சாதாரண ஒரு சொல்லல்ல; அது ஒருவருடைய வாழ்வே மாற்றிப்போடும் மந்திரச் சொல். அதற்குச் சான்றாக இருப்பதுதான் மேலே உள்ள நிகழ்வு. இன்றைய நற்செய்தி வாசகம் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

சீடர்களால் பேயை ஓட்ட முடியாமல் போதல்

ஆண்டவர் இயேசு, தோற்றமாற்ற நிகழ்விற்குப் பிறகு மலையிலிருந்து கீழே இறங்கிவருகின்றார். அப்பொழுது சீடர்களோடு சிலர் வாக்குவாதம் செய்துகொண்டிருப்பதைக் கண்டு, என்ன என்று கேட்கின்றார். அப்பொழுது பேய்பிடித்துப் பேச்சிழந்த சிறுவனின் தந்தை இயேசுவிடம் வந்து நடந்ததைச் சொல்கின்றார்.

இயேசுவின் சீடர்களோடு மறைநூல் அறிஞர்கள் எதைக் குறித்து வாதாடியிருப்பார்கள் என்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது. பேய்பிடித்துப் பேச்சிழந்த சிறுவனை, அவனுடைய தந்தை இயேசுவின் சீடரிடம் கொண்டுவந்திருக்கவேண்டும். அவர்களால் அந்தச் சிறுவனிடமிருந்து பேயை ஓட்ட முடியாமல் போனதால், அங்கு வருகின்ற மறைநூல் அறிஞர் சீடர்களின் அதிகாரத்தையும் ஆற்றலையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கவேண்டும். இதுதான் நடந்திருக்கும்.

இங்கு ஒரு கேள்வி எழலாம். அது என்ன கேள்வி எனில், சீடர்கள்தான் பேய்களை ஓட்டியதாக இதற்கு முன்பு (மாற் 6: 7,13) வாசித்தோமே…! பிறகு ஏன் அவர்களால் இந்தச் சிறுவனிடமிருந்து பேயை ஓட்ட முடியவில்லை என்பதாகும். இதற்கு முக்கியமான காரணம், அவர்கள் இறைவனுடைய வல்லமையில் நம்பிக்கை வைக்காமல், தங்களுடைய வல்லமையில் நம்பிக்கை வைத்ததுதான். இதை ‘அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?’ என்ற சீடர்களின் கேள்வியிலிருந்து அறிந்துகொள்ளலாம். மேலும் அவர்கள் இறைவனோடு இறைவேண்டலிலும் நோன்பிலும் நிலைத்திருக்கவில்லை. இதனாலும் அவர்களால் பேயை ஓட்ட முடியாமல் போகிறது.

சிறுவனின் தந்தையின் நம்பிக்கை

சீடர்களால் சிறுவனிடமிருந்து பேயை ஒட்டமுடியாமல் போகிற நேரத்தில்தான் இயேசு மலையிலிருந்து கீழே இறங்கி வருகின்றார். அவரிடம் சிறுவனின் தந்தை நிகழ்ந்தவற்றைச் சொல்லி, “உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவுகொண்டு எங்களுக்கு உதவி செய்யும்” என்கிறார். அதற்கு இயேசு அவரிடம், “இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்’ என்று சொல்ல, சிறுவனின் தந்தை, “நான் நம்புகிறேன்…” என்று கூறுகின்றார். உடனே இயேசு அந்தச் சிறுவனிடமிருந்து பேயை ஓட்டுகின்றார்.

இங்கு இயேசு, சிறுவனின் தந்தை தன்னிடம் ‘நான் நம்புகிறேன்’ என்று சொன்னபின்னரே, சிறுவனிடமிருந்து பேயை ஓட்டுவதாக வாசிக்கின்றோம். அப்படியானால், நாம் இறைவனிடமிருந்து நலமும் வளமும் பெறுவதற்கு, அவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. பல நேரங்களில் நாம் இறைவனிடமும் நம்மிடமும் நம்பிக்கையின்றி இருக்கின்றோம். இதனாலேயே நம்முடைய வாழ்வில் எந்தவோர் அதிசயமும் நிகழாமல் இருக்கின்றது. ஆகையால், நாம் இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழும்மக்களாக இருக்க முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘ஆண்டவரை நம்புங்கள்’ (திபா 4:5) என்கிறார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் ஆண்டவரை நம்புவோம்; அதன்படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.