பிப்ரவரி 25 : செவ்வாய்க்கிழமை. நற்செய்தி வாசகம்.

ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால், அவர் அனைவரிலும் கடையராக இருக்கட்டும்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 30-37
அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் மலையை விட்டுப் புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஏனெனில், “மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள். அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்தபொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார். பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, “இத்தகைய சிறு பிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச்சிந்தனை.
யார் பெரியவர்? யார் சிறியவர்?
நம்முடைய இந்தியத் திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். ஒருமுறை இவர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்தபொழுது, பலர் இவரிடம் வந்து பேசினார்கள். அப்பொழுது ஒருவர் இவரிடம், “எங்களுடைய நாட்டில் இருக்கின்ற எல்லாரும் ஒரே மாதிரி அதாவது, ஒரே நிறத்தில் இருக்கின்றார்கள். உங்களுடைய நாட்டில்தான் வேறு வேறு நிறத்தில் இருக்கின்றார்கள். அப்படியானால், உங்களை விட நாங்கள்தானே பெரியவர்கள், உயர்ந்தவர்கள்” என்று ஆணவத்தோடு பேசினார்.
இதற்கு இராதாகிருஷ்ணன் அவரிடம், “கழுதைகள் ஒரே நிறத்தில் இருக்கின்றன. குதிரைகள்தான் வேறு வேறு நிறத்தில் இருக்கும். கழுதைகள் ஒரே நிறத்தில் இருக்கின்றன என்பதற்காக அவை குதிரைகளை விடப் பெரியவை ஆகிவிடுமா?” என்றார். கேள்வி கேட்டவரால் எதுவும் பேச முடியவில்லை.
இன்றைக்கு மனித சமூகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய நோய் யார் பெரியவர்? யார் உயர்ந்தவர்? என்ற ஆணவம்தான். இயேசுவின் சீடர்கள் நடுவிலும் இப்படியொரு வாதம் ஏற்படுகின்றது. இதற்கு இயேசு என்ன மறுமொழி கூறினார்? உண்மையில் யார் பெரியவர்? ஆகிய கேள்விகளுக்கான விடைகளை இப்பொழுது நாம் தெரிந்துகொள்வோம்.
யார் பெரியவர் என்று வாதித்துக்கொண்ட சீடர்கள்.
இன்றைய நற்செய்தி வாசகம் இரு பகுதிகளாக இருக்கின்றது. முதல் பகுதி இயேசு தன்னுடைய பாடுகளை முன்னறிவிப்பதாகவும் இரண்டாவது பகுதி சீடர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு இயேசு பதில்கூறுவதாகவும் இருக்கின்றது.
இயேசு தன்னுடைய சீடர்களிடம், மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கின்றார்… அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்… கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயர்த்தெழுவார்…” என்று சொல்கின்றார். இயேசு இவ்வாறு சொன்னது சீடர்களுக்கு நிச்சயமாகப் புரிந்திருக்காது; ஆனால், இது குறித்துச் சீடர்கள் இயேசுவிடம் எந்தவொரு கேள்வியையும் கேட்கவில்லை. கேட்கத் துணியவும் இல்லை. மாறாக, தங்களுக்குள் யார் பெரியவர் என்று வாதாடத் தொடங்குகின்றார்கள்.
இயேசுவின் சீடர்களுக்குள், தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் எதனால் ஏற்பட்டிருக்கும் என்று நாம் சிந்தித்துப் பார்த்தோமெனில், இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் மலைக்குக் கூட்டிச் சென்றதுதான் காரணமாக அமையும். ஆம், இயேசு மூன்று சீடர்களையும் மலைக்குக் கூட்டிச் சென்றது, மற்ற சீடர்களின் உள்ளத்தில் பொறாமையை ஏற்படுத்தியிருக்கும். அதே நேரத்தில் அது அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும். இது குறித்து அறியவரும் இயேசு நிச்சயம் வேதனையடைந்த வேண்டும். ‘நாமோ நம்முடைய பாடுகளைக் குறித்து அறிவித்துக் கொண்டிருக்கும்பொழுது, இவர்கள் இப்படித் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்களே!’ என்று இயேசு வேதனையடைந்தாலும், அதனை அவர் வெளியே காட்டிக்கொள்ளாமல், உண்மையில் யார் பெரியவர் என்பதற்கு விளக்கம் தருகின்றார்.
பணிவிடை செய்பவர் பெரியவர்.
இயேசுவின் சீடர்களாக இருக்கட்டும், யாராகவும் இருக்கட்டும், ஏன், நாமாகக்கூட இருக்கட்டும். அதிகாரத்திலும் உயர் பதவிகளிலும் இருந்துகொண்டு மக்களை அடக்கியாள்பவர்தான் பெரியவர் என்ற எண்ணமானது எல்லாரிடத்திலும் இருக்கின்றது; ஆனால், ஆண்டவர் இயேசு இந்த எண்ணத்தை மாற்றி புரிய சிந்தனையைத் தருகின்றார். பெரியவர் என்பவர் உயர் பதவியில் இருப்பவர் அல்லர்; மாறாக எந்த நிலையில் இருந்தாலும் மக்களுக்குத் தொண்டுகளும் சேவைகளும் செய்பவர் என்று யார் பெரியவர் என்பதற்கான விளக்கத்தினைத் தருகின்றார் இயேசு.
இதனை இயேசு பேச்சு வாக்கில் சொல்லிவிட்டுக் கடந்துபோய்விடவில்லை. மாறாக, வாழ்ந்து காட்டினார். அடிமைகள் செய்யக்கூடிய பணியாகிய பாதங்களைக் கழுவுகின்ற பணியைத் தன்னுடைய சீடர்களுக்குச் செய்து அவர்களும் அவ்வாறு இருக்கச் சொன்னார்.
சிறுபிள்ளையை ஏற்றுக்கொள்பவர் இயேசுவை ஏற்றுக்கொள்கின்றார்
இயேசு தான் சொல்லவந்த செய்தியை இன்னும் தெளிவாக்கும் விதமாக, ஒரு சிறு பிள்ளையைத் தம் கையில் எடுத்து, இச்சிறு பிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கின்றார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கின்றார் என்கின்றார்.
சிறுபிள்ளைகள், ‘நான்தான் பெரியவன்’ என்ற இறுமாப்பில் ஆடுவதில்லை; அவை கள்ளம் கபடற்ற உள்ளத்தினராய் இருக்கும். இப்படிப்பட்ட சிறுபிள்ளைகளைப் போன்று இருப்பவர்கள் பெரியவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். மேலும் இயேசுவை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவரை அனுப்பிய இறைவனையே ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆகையால், உள்ளத்தில் தாழ்த்தியோடு இருந்து, மற்றவர்களுக்குப் பணிவிடை செய்கின்றபொழுது நாம் இறைவனுக்கு முன்பாகப் பெரியவராக இருப்போம் என்பது உறுதி.
சிந்தனை.
‘மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே அழியாத அலங்காரமாய் இருக்கட்டும்’ (1 பேது 3:4) என்பார் புனித பேதுரு. ஆகையால், நாம் உள்ளத்தில் பணிவும் – தாழ்ச்சியும் அமைதியும் கொண்டு வாழ்ந்து, மக்களுக்குப் பணிவிடை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.