நற்செய்தி அறிவிப்பு என்பது தகவல் தொடர்பே

ருஅவையின் சமூகத்தொடர்பு அமைப்புக்களில் அதிக அளவில் பெண்கள் மற்றும் இளையோரின் பங்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டிருக்கும் மணிலா பேராயர், கர்தினால் தாக்லே அவர்கள், இச்செவ்வாயன்று மணிலாவில் நடைபெற்ற ஆசிய ஆயர்கள் கூட்டமைப்பின் சமூகத்தொடர்புத்துறைக் கூட்டத்தில் உரையாற்றியபோது,  மக்களிடையேயும் சமூகங்களிடையேயும் நம்பிக்கையை உருவாக்குவதற்கு, தொடர்பு அம்சங்களுள் ஒன்றான செவிமடுத்தல் இன்றியமையாதது என்று கூறினார்.

சமூகத்தொடர்புத் துறையில் சிறந்த பங்கேற்பாளர்களாக பெண்களால் செயலாற்றமுடியும் என்றுரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், தொழில் நுட்பம் சார்ந்த துறையிலும், நற்செய்தியிலும், சிறந்த பயிற்சி பெற்ற பெண்களும், இளையோரும், திரு அவையில் சிறப்புப் பங்காற்ற முடியும் என உரைத்தார்.

தகவல் துறையில், பெரிய கட்டடங்களை எழுப்புவது நம்பிக்கையை வழங்குவதில்லை, மாறாக,  அத்துறையில் வழங்கப்படும் பயிற்சியே, மக்களை உருவாக்குகின்றது என்று, கர்தினால் தாக்லே அவர்கள் கூறினார்.

நற்செய்தி அறிவிப்பு என்பது தகவல் தொடர்பே என்று கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், நாம் பிறருக்கு அறிவிக்கும்போது, உரையாடும்போது, மற்றவர்களுக்கு செவிமடுக்கும் பண்பையும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றார்.

கடவுளுக்கும், அடுத்திருப்பவர்களுக்கும், காலத்தின் அடையாளங்களுக்கும் செவிமடுக்க வேண்டியது அவசியம் என மேலும் கூறினார் கர்தினால் தாக்லே.

தங்கள் பிரச்சனைகளை, உணர்வுகளை பகிர்ந்துகொள்ள, எண்ணற்ற மக்கள் காத்திருக்கும் இன்றைய நிலையில், பிறருக்குச் செவிமடுப்பதை, நம் சமூகத்தொடர்பின் முதல் நிலையாகக் கொள்வோம் எனவும் எடுத்துரைத்தார், கர்தினால் தாக்லே. (UCAN)

Comments are closed.