நவம்பர் 29 : நற்செய்தி வாசகம்

இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 29-33

அக்காலத்தில் இயேசு ஓர் உவமை சொன்னார்: “அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும்போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள்.

அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
லூக்கா 21: 12-19

அறிவோம்; ஆயத்தமாய் இருப்போம்

நிகழ்வு

ஆர்தர் டோன்னே (Arthur Tonne) என்ற பிரபல எழுத்தாளர் சொல்லக்கூடிய ஒரு வரலாற்று உண்மை இது: கிபி. ஐந்தாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டர் என்றொரு துறவி இருந்தார். அவரிடம் முன்னூறு இளைஞர்கள் சீடர்களாக இருந்தார்கள். அந்த முன்னூறு பேர்களையும் ஆறு குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் நான்கு மணிநேரம் என ஒதுக்கி, ஒரு குழுவைத் தொடர்ந்து இன்னொரு குழு என்று இருபத்து நான்கு மணிநேரமும் ஆயத்தமாகவும் விழிப்பாகவும் இருந்து இறைவனிடம் மன்றாடச் சொல்வார். அவர்களும் அவர் சொன்னதற்கு இணங்க விழித்திருந்து இறைவனிடம் மன்றாடுவர்.

இதற்கு அலெக்ஸாண்டர் என்ற அந்தத் துறவி சொல்லக்கூடிய விளக்கம் இதுதான்: “மானிட மகன் எந்த நேரத்திலும் வருவார். அதற்காக நாம் ஆயத்தமாகவும் விழிப்பாகவும் இருக்கவேண்டும்.”

இந்த வரலாற்று உண்மை நமக்குகொரு முக்கியமான செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அது வேறொன்றுமில்லை, நாம் ஒவ்வொருவரும் மானிடமகனுடைய வருகைகாக ஆயத்தமாகவும் விழிப்பாகவும் இருக்கவேண்டும் என்பதாகும். இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. எனவே, நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

அறிவோம்

ஆண்டவர் இயேசு, மானிட மகனுடைய வருகையை, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டதைக் குறித்துப் பேசுவதற்காக அத்திமரத்தை உருவகமாகப் பயன்படுத்துகின்றார். திருவிவிலியத்தில் அத்திமரமானது இஸ்ரயேல் மக்களைக் குறிப்பதாக இருக்கின்றது (ஓசே 9:10; லூக் 6-10). இங்கு இயேசு, அத்திமரம் தளிர்த்ததும் கோடைகாலம் நெருங்கிவந்துவிட்டது என்று அறிந்துகொள்கிறீர்கள். அதுபோன்று மண்ணுலகில் ஏற்படும் போர்கள், கலகங்கள் இயற்கைப் பேரிடர்கள் ஆகியவற்றின் மூலமாக இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என அறிந்துகொள்ளுங்கள் என்று கூறுகின்றார்.

இதன்மூலம் நம்முடைய நம்பிக்கை வாழ்க்கையில் ‘அறிவது’ அல்லது ‘அறிந்துகொள்வது’ என்பது முதன்மையான இடம் வகிக்கின்றது என்று இயேசு அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். வழக்கமாக நாம் இயற்கையில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களை கண்டு இவையெல்லாம் நடக்கும் என்று கூறுகின்றோம் (லூக் 12: 54-57) இதையே நம்முடைய நம்பிக்கை வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கின்றபோது, நிகழும் அடையாளங்களையும் மாற்றங்களையும் கண்டுணர்ந்து நாம் ஒவ்வொருவரும் இறையாட்சி நெருங்கி வருவதையும் மானிட மகனுடைய வருகையும் அறிந்துகொள்ளும் தெளிந்த பார்வையை பெற்றுக்கொள்ளவேண்டும்.

ஆயத்தமாக இருப்போம்

ஆண்டவர் இயேசு, தளிர்விடும் அத்திமரத்தை உருவகமாகப் பயன்படுத்துவதன் இன்னொரு முக்கியமான நோக்கம், இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது, ஆதலால், நாம் ஒவ்வொருவரும் அதற்காக ஆயத்தமாகவும் தயாராகவும் இருக்கவேண்டும் என்பதை உணர்த்துவதற்குத்தான்.

மானிடமகன் வரும் நாளோ வேளையோ உங்களுக்கும் தெரியாது (மத் 25:13) எனக்கும் தெரியாது, தந்தை ஒருவருக்கு மட்டுமே தெரியும் (மத் 24: 36) என்று சொல்லும் இயேசு, அதற்காக நாம் ஒவ்வொருவரும் விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருக்கவேண்டும் என்று கூறுகின்றார். விழிப்பாய் இருப்பது அல்லது ஆயத்தமாய் இருப்பது என்பது நம்பிக்கை வாழ்வின் அடுத்த கட்டமாக இருக்கின்றது. பலர் நிகழுகின்ற மாற்றங்களையும் அடையாளங்களையும் வைத்து இறையாட்சி நெருங்கிவிட்டது என்பதை அறிந்துகொண்டாலும், அதற்காக ஆயத்தமாக இருப்பதில்லை.

நோவாவின் காலத்தில் வாழ்ந்தவர்களும் லோத்துவின் காலத்தில் வாழ்ந்தவர்களும் நோவாவின் வழியாக, லோத்துவின் வழியாக வரப்போகிற அழிவைக் குறித்து அறிந்துவைத்திருந்தார்கள். ஆனால், ஆயத்தமாக இருக்கவில்லை. அதனால்தான் அவர்கள் வெள்ளப்பெருக்கின் மூலமும் நெருப்பு மற்றும் கந்தக மழையின் மூலமும் அழிந்துபோனார்கள். ஆதலால், நம்பிக்கை வாழ்வில் அறிவதோடு மட்டுமல்லாமல், ஆயத்தமாக இருப்பதும் முக்கியம் என்பதை நாம் உணரவேண்டும்.

வாக்குறுதி மாறாத இறைவன்

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்றாவது ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கின்றது. அது என்னவெனில், இறைவன் வாக்குமாறாதவர் என்பதாகும். இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு சொல்லக்கூடிய, “என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா’ என்ற வார்த்தைகள் நமக்கு அதைத்தான் உணர்த்துகின்றன. ஒழியவே மாட்ட என்பதை மாறாது என்றும் நம் பொருள்படுத்திக்கொள்ளலாம். இதை உறுதிசெய்யும் வகையில் இருப்பதுதான் யோசுவாப் புத்தகத்தில் வருகின்ற, ‘உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்த எல்லா நல்ல வாக்குறுதிகளிலும் ஒன்றுக்கூடத் தவறவில்லை’ (யோசு 23: 14) என்ற வார்த்தைகள். ஆம், கடவுள் மனிதர்களைப் போன்று முன்னுக்குப் பின் முரணாகவோ, மாற்றி மாற்றியோ பேசிக்கொண்டிருப்பதில்லை; அவர வாக்கு மாறாதவர். அப்படிப்பட்டவர் மானிடமகனுடைய வருகையைக் குறித்து பேசுகின்றார் என்றால், அது நிச்சயம் நிகழும் என்பதுதான் உண்மை.

ஆகையால், நாம் மானிடமகனைக் குறித்து அறிந்து, அவருடைய வருகைக்காக ஆயத்தமாகவும் விழிப்பாகவும் இருப்போம்.

சிந்தனை

‘இதோ நான் திருடனைப் போல வருகின்றேன். விழிப்பாய் இருப்போர் பேறுபெற்றோர்’ (திவெ 16: 15) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் மானிட மகனுடைய வருகைக்காக விழிப்பாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.