இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 14.10.2024

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

செபமாலை மாதமான இம்மாதத்தின் பதிமூன்றாம் நாளான இன்று நித்திய வாழ்விற்கு வழிகாட்ட தனது ஒரே மகனை நம் அனைவருக்கும் கொடையாகக் கொடுத்த நம் நித்திய தந்தைக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,

“ஞானத்தோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்.” என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்.

நமது பிள்ளைகள் அனைவருக்கும் இறைவன் நல்ல ஞானத்தைத் தந்தருள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

இன்றைய நற்செய்தியில்

“என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.” என இயேசு கூறுகிறார்.

இறைவனுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்ட அனைவருக்கும் விலை மதிப்பற்ற நித்திய வாழ்வை இறைவன் அளிப்பார் என்ற உண்மையை உணர வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

இன்று ஞாயிறு திருப்பலியில் நாம் கேட்கும் இறைவார்த்தைகள் நமக்குள் நல்லதொரு மாற்றத்தினை உருவாக்கிட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.