மரணம், ஆண்டவரைச் சந்திக்கும் தருணம்

வாழ்வின் இறுதிவேளையில் ஆண்டவர் நம் கதவைத் தட்டும்போது, நம்பிக்கையுடன் அதைத் திறப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும், அதற்காக நாம் ஒருவர் ஒருவருக்காகச் செபிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இவ்வெள்ளியன்று கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், நவம்பர் 29, இவ்வெள்ளி காலையில் நிறைவேற்றிய திருப்பலியில், மரணம் பற்றி சிந்திக்க அழைப்பு விடுக்கும் லூக்கா (லூக். 21:33) நற்செய்தியை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நமது இறப்பு பற்றி ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்குமாறு அழைப்புப விடுத்தார்.

நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிடும், “விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா” என்ற இயேசுவின் வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி மறையுரையாற்றிய திருத்தந்தை, எல்லாமே முடிந்து வடும், ஆனால், ஆண்டவர் மட்டுமே நிலைத்திருப்பார் என்று கூறினார்.

இறப்பு எப்போது வரும் என்பது யாருக்குமே தெரியாது, நாம் நிரந்தரமானவர்கள் என்ற எண்ணத்தில் பல நேரங்களில் செயல்படுகிறோம், இந்த பலவீனமான நிலையை, வாழ்வில், எல்லாருமே கொண்டிருக்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை, விவிலியத்திலும், நற்செய்தியிலும், மரணம் நிச்சயம் வரும் என்பது பற்றி எழுதியிருப்பதைக் குறிப்பிட்டார்.

மரணம் என்பது, நம்மைச் சந்திக்க வரும் ஆண்டவரைத் தழுவிக் கொள்வதாகும், அவர் வந்து, நம்மை தம்மோடு அழைத்துச் செல்வார், எனவே, மரணத்திற்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று, இவ்வெள்ளி காலையில் திருப்பலியில் பங்குகொண்ட விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டுவிட்டர்

மேலும், இவ்வெள்ளி காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், நிறைவேற்றிய திருப்பலியை மையப்படுத்தி, #OmeliaSantaMarta என்ற ஹாஸ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.  “விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா (லூக்.21,33)”. இந்த நம்பிக்கை நம் வாழ்வை ஒளிரச் செய்கின்றது மற்றும், ஆண்டவரோடு வாழச் செய்கின்றது, அவரோடு எப்போதும் வாழச் செய்கின்றது என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

Comments are closed.