சனவரி 6 : நற்செய்தி வாசகம் நீயே என் அன்பார்ந்த மகன், உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்

நீயே என் அன்பார்ந்த மகன், உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 7-11
அக்காலத்தில்
யோவான், “என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்: அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறை சாற்றினார்.
அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————————
மறையுரைச் சிந்தனை (ஜனவரி 06)
“நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்.”
பிரிவினை சபையைச் (Protestant) சார்ந்த போதகர் ஒருவர் இருந்தார். அவர் எப்போது பார்த்தாலும் முழுக்கு ஞானஸ்நானத்தைப் பற்றியே போதித்துக்கொண்டு வந்தார். தொடக்கத்தில் அவருடைய போதனையைக் கேட்ட மக்கள், “முழுக்கு ஞானஸ்நானத்தைக் குறித்து இவர் எவ்வளவு அருமையாகப் போதிக்கின்றார்” என்று வியந்து பாராட்டி வந்தார்கள். ஆனால், நாட்கள் ஆக ஆக தொடர்ந்து அவருடைய போதனைக் கேட்டு வெறுப்படைந்த மக்கள் “இவருக்கு முழுக்கு ஞானஸ்நானத்தைத் தவிர வெறும் எதுவும் தெரியாது போலும்” என்று நக்கலாக பேசத் தொடங்கினார்கள்.
மக்கள் இவ்வாறெல்லாம் பேசத் தொடங்கியதைக் கேட்ட அந்த போதகருடைய உதவியாளர் அவரிடம் சென்று, “நீங்கள் எப்போதும் பார்த்தாலும் முழுக்கு ஞானஸ்நானத்தைப் பற்றியே போதித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று மக்கள் கேலியாகப் பேசிக்கொள்கிறார்கள். அதனால் தயவுசெய்து நீங்கள் முழுக்கு ஞானஸ்நானத்தைப் பற்றி போதிப்பதை நிறுத்துங்கள், வேறு எதையாவது, வேண்டுமானால் தொடக்க நூல் 1:1,2 ப் பற்றிப் போதியுங்கள்” என்றார். தன்னுடைய உதவியாளர் சொன்னதை கருத்தில் எடுத்துகொண்டு அடுத்த நாள் அவர் தொடக்க நூல் 1:1,2 ப் பற்றிப் போதிக்கத் தொடங்கினார்.
“தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது” என்று அந்த விவிலியப் பகுதியை வாசித்துவிட்டு நீர்த்திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது என்றால், இந்த உலகம் ஒருபகுதி நிலப்பரப்பாலும் மூன்று நீரினாலும் சூழப்பட்டிருக்கின்றது என்பது எவ்வளவு உண்மையாக இருக்கின்றது. உலகம் மூன்று பகுதி நீரினால் சூழப்பட்டிருக்கின்றது என்றால், தண்ணீரால் வழங்கப்படும் முழுக்கு ஞானஸ்நானம் எவ்வளவு முக்கியத்தும் வாய்ந்தது என்று அதைப் பற்றி மீண்டுமாகப் பேசத் தொடங்கினார். இதைக் கேட்டு மக்கள் தங்கள் நிலைமையை நினைத்து நொந்து கொண்டார்கள்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் போதகர் (முழுக்கு) ஞானஸ்நானத்த்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்து பேசினாரோ இல்லையோ, ஆனால் நற்செய்தி வாசகத்தில் வரக்கூடிய திருமுழுக்கு யோவான் ஞானஸ்நானம் அல்லது திருமுழுக்கின் முக்கியத்துவம் எத்தகையது என்பதை உணர்ந்து அதனை தன்னிடத்தில் வந்த மக்களுக்கு வழங்கிக்கொண்டு வருகின்றார்.
திருமுழுக்கு என்பது பிற சமயத்திலிருந்து யூத சமயத்தில் சேரக்கூடியவர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற ஒன்றாகும். பொதுவாக இதில் புறவினத்தவர்தான் பங்கு பெறுவார்கள். ஆனால், திருமுழுக்கு யோவான் தந்த திருமுழுக்கில் எல்லா மக்களும் கலந்துகொண்டார்கள். அப்படியானால் யோவான் தந்த திருமுழுக்கினை ஒரு புகுமுக சடங்காக மட்டும் பார்க்காமல், மக்கள் அதனை தங்களை தங்களுடைய பாவங்களிலிருந்து கழுவி ஆண்டவரோடு ஒப்புரவாக்கும் ஒரு கருவியாகத்தான் பார்த்தார்கள். அதனால்தான் யோவானிடத்தில் புறவினத்தார் மட்டுமல்லாமல் எல்லா மக்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். இவ்வாறு யோவான் தான் வழங்கி வந்த திருமுழுக்கின் வழியாக மக்களை ஆண்டவருடைய வருகைக்காகத் தயார் செய்தார்.
யோவான் திருமுழுக்குக் கொடுக்கின்றபோது சொல்கின்ற வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. “என்னைவிட வலிமைமிக்க ஒருவர் எனக்குப் பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாராய் அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியஈல்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்கு தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்”. இவ்வார்த்தைகள் திருமுழுக்கு யோவான் யார்? அவருடைய பணியென்ன? அவர் கொடுக்கின்ற திருமுழுக்கின் அர்த்தம் என்ன?, இயேசுவின் பணியென்ன என்பதையெல்லாம் நமக்குத் தெளிவாக எடுத்துக் கூறுக்கின்றன. “என்னைவிட வலிமைமிக்க ஒருவர் எனக்குப் பின் வருகின்றார் என்ற வார்த்தைகள், யோவான் மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயார்செய்யக்கூடியவர் என்பதையும் அதற்காக அவர் பயன்படுத்திய ஒரு கருவிதான் திருமுழுக்கு என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேலும் அவர் உங்களுக்கு தூய ஆவியினால் திருமுழுக்கு கொடுப்பார் என்னும் வார்த்தைகள், ஆண்டவர் இயேசு தூய ஆவியினால் நிரப்பப்பட்டு, தன்னுடைய பணியைச் செய்வார் (திப 10: 38) என்பதையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.
இங்கே நாம் நம்முடைய கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய செய்தி ஒன்றே ஒன்றுதான். அது யோவான் தான் வழங்கிய திருமுழுக்கின் வழியாக மக்களை ஆண்டவருடைய வருகைக்காகத் தயார் செய்தார் என்பதுதான். அவரைப் போன்று நாமும் மக்களை ஆண்டவரின் வருகைக்காகத் தயார் செய்யவேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டிய தலையாய பணியாக இருக்கின்றது.

Comments are closed.