இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். காயினைப்போல் நீங்கள் இராதீர்கள்; அவன் தீயோனைச் சார்ந்தவன்;” என திருத்தூதர் யோவான் கூறுகிறார்.
நேர்மையாளனாக இருந்த அன்புள்ளம் கொண்ட ஆபேலாக நாம் எப்பொழுதும் இருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், “பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்.” என திருத்தூதர் யோவான் கூறுகிறார்.
நம்முடைய ஒவ்வொரு செயல்களும் பிறரன்பைப் பறைசாற்றும் விதத்தில் இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்து கூறினார்.” என வாசித்தோம்.
நத்தனியலைப் போல நாமும் நம் வாழ்வில் கபடற்றவர்களாக இருக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
முதல் புனிதராக அருட்பொழிவு செய்யப்பட்ட அமெரிக்க ஆயரும், கத்தோலிக்க கல்வியின் பாதுகாவலருமான இன்றைய புனிதர் ஜான் நியூமன் வழியாக நமது மறைக்கல்வி பயிலும் குழந்தைகளுக்காக வேண்டுவோம். அவர்கள் கற்கும் மறைகல்வி சிறந்த ஞானத்தை அவர்களுக்கு அளித்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
மறைந்த நமது முன்னாள் திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பரின் நல்லடக்கம் இன்று நடைபெறுகின்ற வேளையில் ஆண்டவர் அவரது ஆன்மாவை தனது சிறகுகளில் அணைத்துக் கொள்ள வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.