காலத்துக்கேற்றவாறு மக்கள் நன்மைபயக்கக்கூடிய திட்டங்களை அமைப்பதே சிறந்தது- ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ

கடந்த காலங்களில் இப்படி இருந்தது இப்படியிருக்கவில்லை என்பதை விடுத்து
காலத்துக்கேற்ற விதத்தில் மக்களுக்கு நன்மைபயக்கக்கூடிய திட்டங்களை
மேற்கொள்ள வேண்டும் என மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை
இவ்வாறு தெரிவித்தார்.

-மன்னார் மறைமாவட்டத்தில் வருடந்தோறும் நடைபெற்றுவரும் அருட்பணி
திட்டமிடல் மாநாடு 21,22,23.11.2019 மூன்று தினங்களாக மன்னார்
மறைமாவட்டத்தின் குடும்ப பொதுநிலையினரின் அருட்பணி மையத்தில் மாநாட்டுச்
செயலாளர் அருட்பணி ப.பி.டெஸ்மன் குலாஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

இவ் மாநாட்டில் மன்னார், வவுனியா நிர்வாகத்துக்குட்பட்ட மன்னார்
மறைமாவட்டத்தின் 46 பங்குகளிலிருந்தும் அருட்பணியாளர்கள், துறவிகள்,
பங்குகளின் மேய்ப்புப்பணி சபை பிரதிநிதிகள் சுமார் இருநூறு பேர் இதில்
கலந்து கொள்ளுகின்றனர்.

வியாழக் கிழமை (21.11.2019) மாலை ஆரம்பிக்கப்பட்டு மூன்று தினங்களாக
நடைபெற்ற இவ் நிகழ்வை ஆரம்பித்துவைத்து மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல்
பெர்னாண்டோ ஆண்டகை இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

நமது மன்னார் மறைமாவட்டத்தில் 90 ஆயிரம் கத்தோலிக்கர் இருக்கின்றார்கள்.
இந்த மாநாடுக்கு வந்திருக்கும் நீங்கள் அவர்களை பிரநிதிப்படுத்திதான்
சமூகமளித்துள்ளீர்கள்.

இவ்வாறு நோக்கும்போது பங்கு தந்தையினர், உதவி பங்கு தந்தையினர் மற்றும்
பங்கு பேரவையினராகிய நீங்கள், ஆனைக்குழுக்களின் அருட்பணியாளர்கள்
உறுப்பினர்கள், பொதுநிலையினர் பிரதிநிதிகள் பக்தி சபையினரின்
பிரதிநிதிகள் ஆகியோயேர இங்கு வருகை தந்துள்ளீர்கள்.

நாம் அன்பிய வாழ்வின் ஊடாக கிறிஸ்தவ வாழ்வின் முதிர்ச்சியை நோக்கி என்ற
விருதுவாக்குக்கு அமைவாகவே எமது மறைமாவட்டம் நகர்த்தப்பட்டு வருகின்றது.

எமது மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோயேப்பு ஆண்டகையின்
வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது தற்பொழுது வெற்றிநடையுடன்
இடம்பெற்று வருகின்றது.

நாம் 2019 ஆம் ஆண்டின் கருப்பொருளாக புதுப்பித்தலைத்தான்
மேற்கொண்டிருந்தோம். இதுவிடயமான தொகுப்பு மற்றும் மீளாய்வு இவ் அமர்வில்
இடம்பெறுகின்றது.

இதன்மூலம் நாம் புதுப்பித்தல் மூலம் எவ்வாறு செயல்பட்டோம் என்பதை
கண்டுகொள்ள முடியும்.

புதுப்பித்தல் என்பது இலகுவாக முடியும் காரியமல்ல. புதுப்பித்தல் என நாம்
ஆரம்பிக்கும்போது அதில் பல விடயங்கள் அமைய வேண்டும்.

இதற்காகத்தான் நாம் இவ்வருடமும் புதுப்பித்தலுக்கு முக்கியத்துவம் வழங்கி
விஷேடமாக அன்பியத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகின்றது.

நாம் இம்முறை அன்பியத்துக்கு முக்கியத்துவம் வழங்கி சிந்திப்பதன் காரணம்
அன்பியம் இலங்கையில் ஆரமப்பமாகி 25 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
இதற்காகவே இதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகின்றது.

நான் இலங்கை ஆயர்களின் பேரவையிலிருந்துதான் தற்பொழுது இங்கு வந்துள்ளேன்.
இந்த பேரவையில் 2021 ஆம் ஆண்டு இலங்கை முழுதும் அன்பியத்துக்கு சிறப்பு
கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அவ் ஆண்டு ஆயார்களின் சுற்றுமடலும் வெளியிடப்படும். ஆகவே அவ் ஆண்டு
நாம் அன்பியத்துக்கு சிறப்பு கவனம் செலுத்த இருப்பதால் இதை நோக்கிய
கவனமாகவே இவ் வருடமும் நாம் இதை முன்னிருத்தி இருக்கின்றோம்.

ஆயர் ஒவ்வொருவருக்கும் திருந்தந்தையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிதாக
வெளியிடப்பட்டுள்ள சுற்றுமடல் வழங்கப்பட்டுள்ளது.

அந்த திருமடலில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிறு திருவழிபாட்டிலும்
விவிலிய நாளாக கொண்டாடி விவிலயத்தைப்பற்றி ஒவ்வொருவரும் அறியப்பட
வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நாம் இந்த புதுப்பித்தல் ஆண்டிலே இதை சிறப்புடன் செய்ய
முயற்சிக்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு பங்குதளங்களிலும் நாம் உங்கள்
ஒத்துழைப்பை நாடி நிற்கின்றோம்.

நான் கலந்தாலோசித்ததுக்கு அமைய எமது மறைமாவட்டத்தில் மேய்ப்புப்பணி பேரவை
ஒன்று நிறுவ வேண்டும். இதற்கான நடவடிக்கை தற்பொழுது எடுக்கப்பட்டு
வருகின்றது. இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு மிக அவசியமானது.

இவ் மன்னார் மறைமாவட்டம் ஆரம்பமாகி 38 வருடங்கள் ஆகிவிட்டன. நாம் இவ்
மறைமாவட்டத்தில் இன்னும் அதிகமான விடயங்களை செய்ய வேண்டியவர்களாக
இருக்கின்றோம்.

கடந்த காலங்களில் இப்படித்தான் இருந்தது நாம் இப்படித்தான் தொடர்ந்து
செய்ய வேண்டும் என்று இருந்தால் நாம் புதுப்பித்தலை செய்ய முடியாது.

அப்படி இருக்கவில்லை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று செயல்படுவதும்
சிறந்ததல்ல. ஆனால் காலத்துக்கு ஏற்ப எமது மக்களுக்கு ஏற்ப எமது
மறைமாவட்டத்துக்கு ஏற்ப நாம் திட்டங்களை வகுத்து புதுப்பித்தலை
ஏற்படுத்துவோம் என இவ்வாறு தெரிவித்தார்.

Comments are closed.