உத்தரிக்கிற ஆண்மாக்கள் வணக்கம் மாதம் 24.11.2019

இருபத்துநான்காம் தேதி

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற மூன்றாவது வழி தவக்கிரியையாம்

தியானம்

சர்வவல்லபமுள்ள சர்வேசுரனுடைய நீதியின்படியே எந்தப்பாவமும் பரிகாரமாக வேணும் . பாவத்துக்குச் செய்யத்தகும் பரிகாரம் இருவகை உண்டு. அதாவது: தவத்தினால் செய்யப்பட்ட பரிகாரமும், ஆக்கினையால் செய்யப்பட்ட பரிகாரமும் ஆகிய இவ்விருவகையாம். அதெப்படியெனில், மனுஷனானவன் மனந்திரும்பிதான் செய்த பாவத்துக்குத் தவத்தைப் பண்ணினால், அந்தத் தவமே அவனுடைய பாவத்துக்குப் பரிகாரமாகும். தன்னுடைய பாவத்துக்குத் தவம் பண்ணாத பாவியானவன் நரகத்திலேயாவது, உத்தரிக்கிற ஸ்தலத்திலேயாவது ஆக்கினைப்பட தீர்வையிடப்படுவான்.

இந்த ஆக்கினையே அவன் செய்த பாவத்துக்குப் பரிகாரமாகும். தவமும் ஆக்கினையும் இணையாயிருக்கிறதென்று எண்ணத்தகும். அதெப்படியென்றால் ஆக்கினையாவும் வருத்தமுள்ளதாம் இருக்கிறது போலவே, தவக்கிரியையும் வருத்தமாயிருக்கும். இந்த வருத்தத்தினாலேதான் பாவத்துக்குப் பரிகாரம் உண்டாகிறதென்று சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள். அதனால் பாவியானவன் தனக்கு வரப்போகும் ஆக்கினையைத் தவத்தினால் விலக்குவானென்று அநேகமுறை வேத புஸ்தகங்களிலே எழுதியிருக்கிறது.

அப்படியே முற்காலத்தில் மகாப்பாவிகளாயிருந்த நினிவென்ற பட்டணத்தார் தங்களுடைய பட்டணத்துக்கு வரவிருந்த சர்வ சங்காரத்தைத் தாங்கள் செய்த தவத்தினால் விலக்கினார்கள். அதனால் தான் நமது ஆண்டவரான சேசுக்கிறிஸ்து நாதர் கூடியிருந்த ஜனங்களை நோக்கி நீங்கள் செய்த பாவங்களுக்கு தபசு செய்யாவிட்டால் எல்லோரும் கெட்டுப்போவீர்கள் என்பார். உயிரோடிருக்கும்போதே தவம் செய்யவேணுமே தவிர செத்தபிற்பாடு தவத்துக்குக் காலமில்லை. செத்தபிறகு ஆக்கினைமாத்திரமிருக்கும்.

தவத்தால் பாவத்துக்குப் பரிகாரம் பண்ணுவது எளிது, ஆக்கினையினால் செய்யும் பரிகாரம் மிகவும் வருத்தக் கூடியதாகும். இதிப்படியிருக்கிறபடியினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்கள் ஆக்கினைப்பட்டுத்தான் தங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம் பண்ணுவர். ஆயினும் உயிரோடிருக்கிற மனுஷர் தவக்கிரியைகளைச் செய்து, அத்தவத்தால் உண்டாகும் பரிகாரத்தை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு மனம் பொருந்தி ஒப்புக்கொடுத்தால், அந்த பரிகாரம் அந்த ஆத்துமாக்களுக்கு உதவுமென்கிறதற்குச் சந்தேகமில்லை. அதனாலே உத்தரிக்கிற ஆத்துமாக்கள் படுகிற தண்டனைகளை நம்முடைய தவத்தால் குறைக்கலாம். முடியப்பண்ணலாம்.

ஆகையினாலே உத்தரிக்கற
ஆத்துமாக்களின்பேரில் பக்தியுள்ளவர்கள் அந்த ஆத்துமாக்களுக்காக நானாவித தவக்கிரியைகளைப் பண்ணுவார்கள்.
கிறிஸ்துவர்களே! உங்களுடையவர்களின்ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து சீக்கிரமாய் மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகவேணுமென்று நீங்கள் விரும்பினால் அவர்களுக்காகத் தவம் பண்ணுங்கள். தவமென்கிற பேரைக் கேட்டவுடனே அநேகம்பேர்கள் அது பெரிய வருத்தமென்றும், பெரிய ரிஷிகளுக்கும் சந்நியாசிமார்களுக்கும் மாத்திரமே செல்லுங்காரியமென்றும் பயந்து பின்வாங்குகிறார்கள். தவத்தைப்பற்றி உண்டாகும் இந்த அச்சமானது பசாசினாலே வருகிறதொழிய மற்றப்படியல்ல.

அதெப்படியென்றால், நல்ல மனதும் நல்ல கருத்தும் இருக்குமேயாகில் வெகு எளிதாய் தவம் பண்ணலாம் . அதாவது:

தவக்கிரியை பலவுண்டு. இவைகளெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயாக ஒப்புக்கொடுக்கலாமென்பது நிச்சயம் .

முதலாவது பசாசினுடைய சோதனைகளை விலக்கி, பாவம் செய்யாதபடிக்கு படுகிற பிரயாசமும், புண்ணிய நெறியில் உறுதியாய் நடக்கத்தக்கதாகப் படுகிற வருத்தமும் நல்ல தவக் கிரியைக்கு இணையாயிருக்கிறபடியினாலே இவையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக் கொடுக்கலாம்.

இரண்டாவது திருச்சபை கற்பிக்கிற கடன் சுத்தபோசனமும் கடனொருசந்தியும் இவை முதலான கடமையான காரியங்கள் மெய்யான தவக்கிரியைகளாயிருப்பதால், இவை யாவற்றையும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுத்தால் அவர்களுக்கு உதவுமென்பதற்குச் சந்தேகமில்லை.

மூன்றாவது இவ்வுலகத்தில் சஞ்சரிக்கிற மனுஷனுக்கு இடைவிடாமல் பல துன்பங்களும் கஷ்டங்களும் வருகிறதென்பது எல்லோருக்குந் தெரிந்த காரியமல்லவா ?சரீரத்தை உபாதிக்கும் வியாதிகளுக்கும் நோக்காடுகளுக்கும் கணக்கில்லாததினாலே இந்தச் சரீரம் எப்போதும் நொந்து வருத்தப்படுமென்பதற்குச் சந்தேகமில்லை. மனசிலே வருகிற அச்சம் பயமும் கஷ்ட துயரமும் கிலேசு கவலையும் மனுஷனை இடைவிடாமல் வருத்தப்படுத்தும் புத்தியிலே உண்டாகும் இருளந்தகாரமும், அறியாமை சந்தேகமும் தங்களுக்குள்ளே ஒவ்வாத யோசனைகளும் எத்தனையென்று சொல்லுவாரில்லை.

ஆத்துமத்தில் கிளம்பும் பற்பல தந்திரங்களையும், தகாத விசாரங்களையும், ஏற்காத சோதனைகளையும் அறியாதவருண்டோ ? புறத்தி மனுசரால் வருகிற விரோதங்களும் விக்கினங்களும் பிராது
வியாச்சியங்களும் போர்ச்சண்டைகளும் அவதூறுகளும் ஆவலாதிகளும் துரோகங்களும் மனுஷனை மிகவும் காற்று பனி குளிர் மழையினாலும், பஞ்சம் முதலான பொல்லாப்புகளினாலும் யாவருக்கும் வருகிற துன்பம் எத்தனையென்று சொல்லி முடியாது. இவையெல்லாம் மகா வருத்தமுள்ளதாகையால் இவைகளைப் பொறுமையோடு சகித்தால், உத்தம தவக்கிரியைகளைப்போலே மனுஷனுடைய பாவப் பரிகாரத்துக்கு உதவும். இவைகளையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் செய்யவேண்டிய பரிகாரத்துக்கு ஒப்புக்கொடுத்தால், அதனாலே அவர்களுடைய உத்தரிப்பு குறைவதுமன்றியே வெகு சீக்கிரமாய் முடியுமென்பது பெரிய நம்பிக்கைதான்.

ஆயினும் எத்தனையோ பேர் இவை எல்லாவற்றையும் பொறுமையின்றி, நல்ல கருத்தின்றி, முறையிட்டு, முறுமுறுத்து அநுபவித்துக்கொண்டு வருவதால் , யாதொரு பிரயோசனமும் பலனும் அடையாமல் போகிறார்கள் . உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுவதற்கு ஏற்ற அவ்வளவு நல்ல உபாயத்தை இத்தகையோர் விட்டு விடுகிறபடியினாலே ,அந்த ஆத்துமாக்களுக்கு யாதொரு ஆறுதலும் வருகிறதில்லை.சகோதர,சகோதரிகளே ! நீங்கள் அப்படி அசட்டையாய் இருக்க வேண்டாம் . உங்களுக்கும் ஆத்துமாக்களுக்கும் பலனை அடைய இதுவே வருத்தமில்லாத வழியென்றறிந்து பொறுமையோடும் தேவ சித்தத்துக்குக் கீழ்ப்படிதலோடும் இவையெல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து வருவீர்களாக.

Comments are closed.