இளையோர், கடவுளின் புதிய வளமான நிலம்

இளையோர், இயேசு என்ற மனிதர் பற்றிய அறிவில் அதிகமதிகமாய் வளருமாறு ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பெரு நாட்டில் நடைபெற்றுவரும், இலத்தீன் அமெரிக்க தேசிய இளையோர் மேய்ப்புப்பணியாளரின் 20வது கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு, நவம்பர் 19, இச்செவ்வாயன்று செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர், கடவுளால் வழங்கப்பட்ட வளமான புதிய பூமி என்று கூறியுள்ளார்.

இளையோர் நம்மிடம் பேசுகின்றனர் மற்றும், நமக்குச் சவாலாக உள்ளனர் என்றும், அவர்கள் தங்களின் ஆர்வத்தால், இக்காலத்தின் சவால்களுக்குப் பதிலளிக்க நம்மை ஊக்கப்படுத்துகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, இளையோரின் ஆளுமையை  வளர்க்கும் முயற்சியில், அவர்களை விசுவாசத்திலும் ஆழப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

இளையோர் மறைப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கென, பெரு நாட்டு ஆயர் பேரவை ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்தில் கலந்துகொள்வோரிடம், இயேசுவின் நட்பில் கிடைக்கும் மகிழ்வை இளையோர் அனுபவிக்க அவர்களை வழிநடத்துமாறும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 18, இத்திங்களன்று துவங்கிய இக்கூட்டம், நவம்பர் 23, வருகிற வெள்ளி வரை நடைபெறுகின்றது. “இளையோராகிய நாங்கள், புனித நிலம், கடவுளின் இன்றைய மக்கள்” என்ற தலைப்பில் நடைபெறும் இக்கூட்டத்தில், இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் பகுதியின் பல நாடுகளிலிருந்து ஏறத்தாழ 150 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

Comments are closed.