டிஜிட்டல் உலகில் குழந்தையின் மாண்பு காக்கப்படவேண்டும்

சமூக வலைத்தளங்கள், சிறுவர் சிறுமியரை தவறான முறையில் பயன்படுத்தாமல், அவர்களுக்கு உரிய மாண்பை வழங்கும் முயற்சியில், அனைத்துத் துறைகளும் இணைந்து செயலாற்றவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு உறுப்பினர்களிடம் கூறினார்.

“டிஜிட்டல் உலகில் குழந்தையின் மாண்பு” என்ற தலைப்பில், நவம்பர் 14, மற்றும் 15 ஆகிய இரு நாள்கள், வத்திக்கானில் நடைபெறும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களை, நவம்பர் 14, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளைக் காக்கும் பொறுப்பு அனைத்துத் துறைகளையும் சார்ந்த கடமை என்பதை வலியுறுத்திக் கூறினார்.

இதே மையக்கருத்துடன், 2017ம் ஆண்டு, அக்டோபர் 3ம் தேதி முதல் 6ம் தேதி முடிய உரோம் நகரில் நடைபெற்ற கருத்தரங்கைப் பற்றியும், அக்கருத்தரங்கில் கலந்துகொண்டோரை தான் சந்தித்தது குறித்தும் திருத்தந்தை தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

சிறுவர், சிறுமியர் அடைந்துள்ள துன்பங்கள் குறித்து அண்மைய ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருஅவை சந்தித்துள்ள வேதனைகளும், சவால்களும் மிகப் பெரியவை என்பதை தன் உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நெடுநாள் நீடிக்கும் தீர்வுகள் தேவை என்பதை வலியுறுத்திக் கூறினார்.

டிஜிட்டல் உலகம் கண்டுபிடித்துவரும் பல்வேறு தொழில்நுட்பங்கள், மக்களுக்கு, குறிப்பாக, இளையோருக்கு பெரும் உதவியாக உள்ளன என்பதை நாம் மறுக்கமுடியாது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இதே தொழில்நுட்பங்கள், இளையோரை பெரும் தீமைகளுக்கும் அழைத்துச் செல்வதை உணர்ந்து, அத்தீமைகளிலிருந்து அவர்களைக் காப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குழந்தைகளைக் கொண்டு உருவாக்கப்படும் ஆபாச வலைத்தளங்கள், மனித வர்த்தகம், பாலியல் கொடுமைகள் ஆகியவற்றை வளர்க்கின்றன என்பதை தன் உரையில் கவலையுடன் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகையக் கொடுமைகளுக்கு உள்ளாகும் குழந்தைகளும், சிறுவர் சிறுமியரும் தங்கள் வாழ்வு முழுவதையும் வேதனையில் கழிக்கும் தண்டனைக்கு உள்ளாகின்றனர் என்று கூறினார்.

Comments are closed.