ஏப்ரல் 6 : நற்செய்தி வாசகம்

உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.

அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார். இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்றுரைத்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————–

படைப்பிற்கெல்லாம் நற்செய்தி

I திருத்தூதர் பணிகள் 4: 13-21

திருப்பாடல் 118: 1, 14-15, 16, 18, 19-21 (21a)

II மாற்கு 16: 9-15

படைப்பிற்கெல்லாம் நற்செய்தி

துணிவுடன் நற்செய்தி

இயேசுவின் சீடர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாதவர்கள்; மீன் பிடிக்கும் தொழிலைச் செய்து வந்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் துணிவுடன் உயிர்த்த ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவித்ததைப் பார்த்து யூதர்களின் தலைமைச் சங்கத்தில் இருந்தவர்கள் வியந்து போகிறார்கள். மட்டுமல்லாமல், அவர்கள் திருத்தூதர்களிடம் இயேசுவைப் பற்றி அறிவிக்கக் கூடாது என்று எச்சரிக்கின்றார்கள். அப்போது பேதுருவும் யோவானும் சொல்லக்கூடிய, “நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்ற வார்த்தைகள் மிகவும் துணிச்சலானவை.

படிப்பறிவற்ற பாமரர்களான பேதுருவாலும் யோவானாலும் இவ்வளவு துணிச்சலாகப் பேச முடிந்தததற்குக் காரணம், உயிர்த்த ஆண்டவர் இயேசு தந்த வல்லமைதான். இன்றைய நற்செய்தியில் தம் சீடர்களுக்குத் தோன்றும் உயிர்த்த இயேசு, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று அன்புக் கட்டளை கொடுக்கின்றார். அத்தோடு அவர் அவர்களுக்கு வல்லமையையும் ஆற்றலையும் தருகின்றார். இந்த வல்லமையைக் கொண்டுதான் திருத்தூதர்கள் இயேசுவைப் பற்றித் துணிவோடு நற்செய்தியை அறிவித்தார்கள்.

இயேசு கிறிஸ்து தன்னுடைய நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க நமக்கு ஆற்றலைத் தருகின்றார் எனில், அவருக்கு நன்றி செலுத்துவதுதான் முறை, இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 118 இல் அதன் ஆசிரியர், “ஆண்டவரே, என் மன்றாட்டை நீர் கேட்டதால், நான் நன்றி செலுத்துகின்றேன்” என்கிறார்.

கடவுள் நமக்கும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க ஆற்றலையும் வல்லமையும் துணிவையும் தந்திருப்பதால், அவருக்கு நன்றி சொல்வோம். அவரது உண்மையான சீடர்களாவோம்.

நற்செய்தியை அறிவிப்பதே பெரிய ஆசி

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இருபதாவது அதிபராகப் பதவி ஏற்றவர் ஜேம்ஸ் கார்பீல்ட். இவர் 1881 ஆம் ஆண்டு, மார்ச் 4 ஆம் நாள் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட பிறகு. இவரைச் சந்திக்க ஒருவர் வந்தார்.

அவர் இவரிடம், “உலகிலேயே மிகப்பெரிய பொறுப்பு எது?” எனக் கேட்டார் அவர் இவ்வாறு கேட்டதற்குக் காரணம், ஜேம்ஸ் கார்பீல்ட். ‘அமெரிக்க அதிபர்’ என்று சொல்வார் என்பதால்தான்; ஆனால், ஜேம்ஸ் கார்பீல்ட், “நற்செய்திப் பணியாளராக இருப்பதுதான் உலகிலேயே மிகப்பெரிய பொறுப்பு” என்றார்.

இப்படியொரு பதிலை எதிர்பார்த்திராத அந்த மனிதர், “அமெரிக்க அதிபரால் , உலகையே கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்போது, அதுதானே பொறுப்பாக இருக்கும். அப்படியிருக்கையில், நற்செய்திப் பணியாளராய் இருப்பதுதான் பெரிய பொறுப்பு என்கிறீர்களே. அது எப்படி?” என்றார். உடனே ஜேம்ஸ் கார்பீல்ட், “அமெரிக்க அதிபர் என்பது பெரிய பொறுப்புதான். ஆனால், அவரை விடவும் பெரியவர் இயேசு. அதனால் அவரைப் பற்றி நற்செய்தி அறிவிப்பது பெரிய பொறுப்புதானே! ஒரு காலத்தில் நான் நற்செய்திப் பணியாளராகப் பெரிய பொறுப்பில் இருந்தேன். இப்போது நான் அமெரிக்க அதிபராகி, அந்தப் பொறுப்பிலிருந்து கீழே இறங்கிவிட்டேன்” என்றார்.

அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்டைப் பொறுத்தவரையில் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிப்பதுதான் மிகப்பெரிய பொறுப்பு, பதவி எல்லாம். அதனால் நாம் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, இயேசுவின் நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம்.

ஆன்றோரின் வார்த்தை

Comments are closed.