மார்ச் 16 : நற்செய்தி வாசகம்
கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?
கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 40-53
யூதர்களின் திருவிழா கூட்டத்தில் சிலர் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, “வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றனர். வேறு சிலர், “மெசியா இவரே” என்றனர். மற்றும் சிலர், “கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்? தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?” என்றனர். இப்படி அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது. சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால் யாரும் அவரைத் தொடவில்லை.
தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பியிருந்த காவலர்கள் அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலர்களிடம், “ஏன் அவனைப் பிடித்துக் கொண்டு வரவில்லை?” என்று கேட்டார்கள். காவலர் மறுமொழியாக, “அவரைப்போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர். பரிசேயர் அவர்களைப் பார்த்து, “நீங்களும் ஏமாந்து போனீர்களோ? தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை நம்புவோர் யாராவது உண்டா? இம்மக்கள் கூட்டத்துக்குத் திருச்சட்டம் தெரியாது. இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்றனர். அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம், “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக, “நீரும் கலிலேயரா என்ன? மறைநூலைத் துருவி ஆய்ந்து பாரும். அப்போது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றுவதில்லை என்பதை அறிந்துகொள்வீர்” என்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————————————
“கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?”
தவக் காலத்தின் நான்காம் வாரம் சனிக்கிழமை
I எரேமியா 11: 18-20
II யோவான் 7: 40-53
“கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?”
வெளிதோற்றத்தை வைத்து மதிப்பிடுதல்:
அந்தக் கோயிலில் இருந்த பெரிய ஆர்மோனியத்தில் பயிற்சி எடுத்துகொண்டிருந்தார் கோயிலில் வழக்கமாக ஆர்மோனியம் வாசிக்கும் இளைஞர்.
தற்செயலாகக் கோயிலுக்குள் நுழைந்த ஒருவர் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்த அந்த இளைஞர் அருகில் வந்து, “சிறிது நேரம் நான் இந்த ஆர்மோனியத்தை வாசிக்கலாமா?” என்று கேட்டார். இளைஞர் அந்த மனிதரை மேலிருந்து கீழ்வரை பார்த்தார். அவர் உடுத்தியிருந்த ஆடை ஆங்காங்கே கிழிந்திருந்தது. தலை வாரப்படவில்லை; தாடி மழிக்கப்படாமல், நீண்டு வளர்ந்திருந்தது. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு இளைஞர் அந்த மனிதரிடம் “முடியாது” என்று மறுத்தார்.
வந்தவர் மீண்டும் மீண்டுமாகக் கேட்டார். இதனால் அவருடைய தொல்லை தாங்க முடியாமல் இளைஞர் அவரை ஆர்மோனியத்தை வாசிக்க அனுமதித்தார்.
இதையடுத்து அந்த ‘அழுக்கு மனிதர்’ ஆர்மோனியத்தின் முன்பு அமர்ந்து வாசிக்கத் தொடங்கினார். ஆர்மோனியத்தில் அவரது விரல்களை நடனமாடுவதையும், அதிலிருந்து மிக அற்புதமான இசை வழிந்தோடுவதையும் பார்த்துவிட்டு இளைஞர் மெய்ம்மறந்து நின்றார். ‘அழுக்கு மனிதர்’ ஆர்மோனியத்தை வாசித்து முடித்ததும் இளைஞர் அவரிடம், “ஐயா நீங்கள் யார், உங்களுடைய பெயர் என்ன?’ என்று கேட்டதற்கு, அவர், “பெலிக்ஸ் மெண்டல்சன் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வேகமாக நகர்ந்தார்.
ஜெர்மனியைச் சேர்ந்த மிகப்பெரிய இசைக் கலைஞர் பெலிக்ஸ் மெண்டல்சன். அவரது அருமை தெரியாமல், அவரது வெளித்தோற்றத்தைப் பார்த்து இளைஞர் அவரை உதாசீனப்படுத்தியது எவ்வளவு வேதனையான செயல்! நற்செய்தியில், கலிலேயாவிலிருந்து மெசியா வருவாரா? என்று சொல்லி இயேசுவைப் புறக்கணிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அது பற்றி நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நான் தந்தையிடமிருந்து வந்தவன் என்று இயேசு சொன்னதைத் தொடர்ந்து, ஒருசிலர், “வரவேண்டிய இறைவாக்கினர் இவர்தான்” என்றும், “மெசியா இவர்தான்” என்றும் அவரை ஏற்றுகொள்கின்றனர். வேறு சிலரோ, “கலிலேயாவிலிருந்தா மெசியா வருவார்?” என்று அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றார்கள்.
யூதர்களைப் பொறுத்தளவில் பிறவினத்தார் மிகுதியாக வாழ்ந்த கலிலேயாவிலிருந்து நல்லது எதுவும் வராது, இறைவாக்கினர் யாரும் தோன்றியதில்லை என்ற எண்ணம் இருந்தது. ஆனால், இயேசுவை அடையாளபடுத்தும் இறைவாக்கினர் யோனா கலிலேயாவிலிருந்துதான் வந்தவர் என்பதை அவர்கள் வசதியாக மறந்து போனார்கள். இந்நிலையில்தான் பரிசேயர் தலைவர்களில் ஒருவரான நிக்கதேம், “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என்று கேட்கின்றார். உண்மையில் இயேசுவுக்கு நடந்ததும் இதுதான். பரிசேயர்கள் இயேசுவின் வாக்குமூலத்தைக் கேளாமல், அவர் என்ன செய்தார் என்று அறியாமல் அவருக்குத் தீர்ப்பளித்தார்கள்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியாவிற்கு எதிராக அவரது சொந்த ஊர் மக்களே சூழ்ச்சி செய்கின்றார். இதனால் அவர் அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்குமாறு கடவுளிடம் மன்றாடுகின்றார்.
மக்கள் இயேசுவுக்கு எதிராகவும், இறைவாக்கினர் எரேமியாவிற்கு எதிராகவும் தீர்ப்பிட்டாலும், கடவுள் அவர்களோடு உடனிருந்தார் என்பதுதான் உண்மை. எனவே, நாம் மக்களிடமிருந்து வரும் எதிர்ப்புகள், புறக்கணிப்புகளைக் கண்டு கலங்காமல், தொடர்ந்து, இறையாட்சிப் பணியைச் செய்வோம்.
Comments are closed.