இறைமக்களின் செபத்தை நாடும் கான்கிளேவ்
வருகின்ற மே 7 புதனன்று தொடங்க உள்ள கான்கிளேவ் கடவுளின் விருப்பத்தையும் அருளையும் நாடும் விதமாகவும், ஆன்மிக தெளிந்து தேர்தலை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்க இறைமக்கள் அனைவரும் செபிக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளது திருப்பீடம்.
திருஅவையை வழிநடத்த இருக்கும் 267-ஆவது திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக கர்தினால்கள் அனைவரும் உரோமில் ஒன்று கூடி கான்கிளேவ் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நேரம் அவர்கள் அனைவருக்காகவும் இறைமக்கள் அனைவரும் சிறப்பான முறையில் செபிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது திருப்பீடம்.
புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் கடமையும் கொண்ட இந்நேரத்தில் இறைமக்களின் வல்லமையுள்ள செபம் கர்தினால்கள் அவைக்குத் தேவை என்றும், திருஅவையில் கிறிஸ்துவின் ஒரே உடலின் உறுப்பினர்கள் நாம் அனைவரும் என்ற ஒற்றுமையை வளர்க்கும் உண்மையான ஆற்றலினை செபத்தின் வழியாகப் பெற முடியும் என்றும் கர்தினால்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
விண்ணகத் தந்தையின் எல்லையற்ற ஞானமும் மற்றும் அருளும் பெற்றவர்களாய் தாழ்ச்சியின் கருவிகளாக நம்மை மாற்றிக் கொள்வது அவசியம் என்றும், திருஅவை செவிசாய்க்கின்ற, இறைமக்களது வாழ்வின் மையமாக இருக்கின்ற தூய ஆவியின் குரலுக்கு, செயலுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் கர்தினால்கள்.
Comments are closed.