கருணையின் ஆன்மீகத்தை ஊக்குவித்தலின் இன்றியமையாத தேவை

விசுவாசத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதில் உருவாகும் உறவுநிலை, கருணையின் ஆன்மீகத்தை ஊக்குவித்தல், இளையோரின் கேள்விகளுக்கு சரியான பதிலுரை போன்றவைகளின் முக்கியத்துவத்தை நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபடுவோரிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தி அறிவிப்பு திருப்பீடத் துறையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டோரை மார்ச் 15, வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய தலைமுறையினர் வாழ்வின் அர்த்தத்தைக் கண்டுகொள்ள உதவும் வகையில் சரியான பதிலுரை வழங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

ஜூபிலி ஆண்டின் தயாரிப்பில் இரக்கத்தின் ஆன்மீகம் அதிகம் இடம்பெறவேண்டியதன் அவசியத்தையும், திருஅவையிலிருந்து ஒதுங்கி வாழ முயலும் புதிய தலைமுறையின் கேள்விகளுக்கு பலன்தரும் பதில்மொழிகளை வழங்கவேண்டியதன் தேவை குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, குடும்பங்களுடனும் பயிற்சி இல்லங்களுடனுமான உறவு புதுப்பிக்கப்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

உயிர்த்த இயேசுவிலான விசுவாசம் குடும்பங்களின் வாழ்வு நடவடிக்கைகள் வழியாக நற்செய்தி அறிவிப்புக்கு உதவுகிறது என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதில் மறைக்கல்வி ஆசிரியர்களின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டினார்.

திருத்தலங்களின் மேய்ப்புப்பணி அக்கறையில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், கருணையின் மறைப்பணியாளர்களின் சேவை குறித்தும், ஜூபிலிக்கான தயாரிப்புக்கள், ஜெபத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் கண்டுகொள்ளல் என்பவை குறித்தும் தன் கருத்துக்களை நற்செய்தி அறிவுப்புக்கான நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோரிடம் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.