பிப்ரவரி 22 : நற்செய்தி வாசகம்

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

அக்காலத்தில்

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள்.

“ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார். அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————————-

மறையுரைச் சிந்தனை

திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் விழா

மறையுரைச் சிந்தனை (பிப்ரவரி 22)

இன்று திருஅவையானது பேதுருவின் தலைமைப்பீட விழாவை நினைவுகூர்ந்து கொண்டாடுகிறது.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பேதுருவிடம், உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்கிறார் (மத் 16:18,19). இவ்வாறு சொல்வதன் வழியாக இயேசு பேதுருவைத் திருச்சபையின் தலைவராக ஏற்படுத்துகிறார். அதனடிப்படையில் பேதுருவின் தலைமைப்பீட விழாவை நாம் கொண்டாடுகின்றோம்.

கி.பி. 354 ஆம் ஆண்டிலிருந்து இவ்விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நாம் பேதுருவின் தலைமைத்துவத்தை சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கிறோம். அதோடு குருத்துவத்தின் மேன்மைகளை உணர்ந்து பெருமைப்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம்.

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு பேதுருதான் திருச்சபையின் தலைவராக இருந்து, அதனை கட்டிக்காத்தார் என்று சொன்னால் மிகையாகாது. பெந்தேகோஸ்தே நாளில் பேதுருதான் யூதர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் முன்பாக எழுந்து நின்று இயேசுவைப் பற்றி உரையாற்றுகிறார். ஒரு சாதாரண, படிக்காத, பாரமராக இருந்த பேதுரு இப்படித் துணிவுடன் மக்களுக்கு முன்பாக பேசுகிறார் என்றால் அது கடவுளின் அருளால் அன்றி, வேறொன்றும் இல்லை.

மேலும் விவிலியத்தை நாம் ஆழமாகப் படிக்கும்போது பேதுரு ஆண்டவர் இயேசுவைப் போன்று செயல்பட்டார் என்ற உண்மையை நாம் உணர்த்துகொள்ளலாம். இயேசு கால் ஊனமுற்றவரைக் குணப்படுத்தியது போன்று, பேதுருவும் கால் ஊனமுற்றவரைக் குணப்படுத்துகிறார் (திப 3:6). இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டவர்கள் நலமடைந்தது போன்று, பேதுரு வீதிகளில் நடக்கின்றபோது, அவரது நிழல்பட்டவர்கள் குணமடைந்தார்கள் (திப 5:15). இயேசு இறந்தவர்களை உயிர்பித்ததுபோன்று பேதுருவும் தப்பித்தா என்ற பெண்ணை உயிர்ப்பிக்கின்றார். இவ்வாறு பேதுரு ஆண்டவர் இயேசுவின் பதிலாளாக, அவருடைய பிரதிநிதியாகச் செயல்படுகின்றார்.

பேதுருவின் தலைமைப்பீட விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிக்கக்கேட்பது போன்று கடவுளின் மந்தையைப் பேணிப் பாதுகாக்கவேண்டும். கடவுளின் மந்தையைப் பேணிக் காப்பது நமது தலையாய கடமையும்கூட. ஆண்டவர் இயேசு உயிர்த்தபின்பு தன்னுடைய சீடர்களுக்கு மூன்றாம் முறையாக காட்சியளிக்கும்போது பேதுருவைப் பார்த்துச் சொல்வார், “என் ஆடுகளைப் பேணி வளர்” என்று. (யோவான் 21) ஆம், பேதுரு ஆண்டவர் இயேசு, தனக்குக் கொடுத்த அழைப்பின் பேரில் தொடக்கத் திருச்சபையை சிறப்பாகப் பேணி வளர்த்தார். திருச்சபை பல்வேறு துன்பங்களையும், இன்னல்களையும் சந்தித்தபோது பேதுரு உடனிருந்து அதனை பேணி வளர்த்தார்.

இன்றைய வாசகங்கள் தரும் இரண்டாவது பாடம். மந்தைக்கு, மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதே ஆகும். பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிக்கின்றோம், “உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல், மந்தைக்கு முன்மாதிரியாக இருங்கள்” என்று.

ஆகவே, நாம் ஒவ்வொருவரும், குறிப்பாக தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் பிறருக்கு முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து காட்டவேண்டும்.

Comments are closed.