அமைதி என்னும் பாலைவனத்திற்குள் நுழைவோம்

இயேசுவைப் போல நாமும் அமைதி, உள்ளார்ந்த உலகத்திற்குள் செல்லுதல், இதயத்தின் குரலுக்கு செவிசாய்த்தல், உண்மையுடன் தொடர்பு கொள்ளுதல் என்னும் பாலைவனத்திற்குள் நுழைய இத்தவக்காலத்தில் அழைக்கப்படுகின்றோம் என்றும்,  தீயொழுக்கங்கள், செல்வத்தின் மீதான பற்று, வீண் விருப்பம், புகழ், பேராசை என்னும் காட்டுவிலங்குகளிடையே நாம் வாழ்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலத்தின் முதல் வார நற்செய்தி வாசகமான இயேசு சோதிக்கப்படுதல் என்னும் பகுதி குறித்த தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.

வானதூதர்களால் இயேசு பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது போல நாமும் அமைதி என்னும் பாலைவனத்திற்குள் செல்ல இத்தவக்காலத்தில் அழைக்கப்படுகின்றோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு காட்டு விலங்குகளிடையே இருந்தார், வானதூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தனரென்றும் எடுத்துரைத்து, நாமும் தீயொழுக்கங்கள் என்னும் காட்டுவிலங்குகளிடையேயும் நல்லெண்ணங்கள் மற்றும்  நல்லுணர்வுகள் என்னும் வானதூதர்களால் பணிவிடை செய்யப்படுகின்றோம் என்றும் கூறினார்.

சோதனைகள் நம்மை இறைவனிடம் இருந்து பிரிக்கின்றன என்றும், நல்ல தெய்வீக முயற்சிகள் நம்மை ஒருங்கிணைத்து நல்லிணக்கத்திற்கு கொண்டு வருகின்றன, அவை இதயத்தை அமைதிப்படுத்துகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

விண்ணகத்தின் சுவையை, கடவுளின் சுவையை ஆற்றலை நாம் இன்னும் அதிகமதிகமாகப் புரிந்துகொள்வதற்கு அமைதிக்குள் நுழைய வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலம் இதைச் செய்வதற்குஉகந்த காலம் என்றும், கடவுளின் குரலானது நமது இதயத்தோடு உரையாட, நம்மை நாம் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Comments are closed.