பிப்ரவரி 21 : நற்செய்தி வாசகம்

இத்தீய தலைமுறையினர்க்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.

இத்தீய தலைமுறையினர்க்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32

அக்காலத்தில்

மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிடமகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்.

தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!

தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————————

ஆண்டவரோ மன்னிப்பு அளிப்பவர்

தவக் காலத்தின் முதல் வாரம் புதன்கிழமை

I யோனா 3: 1-10

திருப்பாடல் 51: 1-2, 10-11, 16-17 (17b)

II லூக்கா 11: 29-32

ஆண்டவரோ மன்னிப்பு அளிப்பவர்

மனம் மாறுவோருக்கே மன்னிப்பு!

தவறு செய்யாத மனிதரில்லை; தவற்றைத் திருத்திக் கொள்ளாதவர் மனிதரே இல்லை என்று சொல்வதுண்டு.

ஒருங்கிணைந்த இஸ்ரயேலின் அரசராக இருந்தவர் தாவீது. ஆண்டவரின் நெஞ்சத்திற்கு நெருக்கமாக இருந்த இந்தத் தாவீது, உரியாவின் மனைவியோடு பாவம் செய்தார் (2 சாமு 11, 12). தொடக்கத்தில் இப்பாவத்தை தாவீது மறைக்க நினைத்தாலும், இறைவாக்கினர் நாத்தான் வழியாக ஆண்டவர் இதை வெளிப்படுத்தியதும், தன் பாவத்ததை உணர்ந்து மனம் வருந்தி அழுகின்றார் தாவீது. அத்தகைய சூழலில் பாடப்பட்டதுதான், இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 51.

தாவீது பத்சேபாவிற்கு எதிராகவே பாவம் செய்திருந்தாலும், அதை ஆண்டவருக்கு எதிராகச் செய்ததாக நினைத்து, “நொறுங்கிய உள்ளத்தை நீர் அவமதில்லை” என்று ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்கின்றார். ஆண்டவரும் அவரது பாவத்தை மன்னித்து, அவரை ஏற்றுக்கொள்கின்றார்.

இறைவாக்கினர்களிலியே பிறவினத்து மக்களுக்கு நற்செய்தி அறிவித்த இறைவாக்கினர் என்றால், அவர் இறைவாக்கினர் யோனாதான். இவர் நினைவே நகர மக்களுக்கு நற்செய்தி அறிவித்து, அவர்கள் மனம் மாறுவதற்குக் காரணமாக இருக்கின்றார். தொடக்கத்தில் நினிவே நகருக்குப் போதவதற்கு யோனா முரண்டு பிடித்தாலும், பின்னர் ஆண்டவருக்கு இரண்டாம் வாய்ப்பு அளித்ததும், அங்கே சென்று, “இன்னும் நாற்பது நாளில் நினவே அழிக்கப்படும்” என்று இறைவாக்கு உரைக்கின்றார். அவர் உரைத்த இறைவாக்கைக் கேட்டு, நாட்டில் இருந்த அரசன் தொடங்கி, சிறியோர் முதல் பெரியோர் வரை யாவரும் சாக்கு உடை, உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து மனம் மாறுகின்றார்கள். இதனால் ஆண்டவர் அவர்கள்மேல் அனுப்புவதாக இருந்த தண்டனையை அனுப்பாமல் விடுகின்றார்.

இறைவாக்கினர் யோனா பழைய ஏற்பாட்டில் வரும் ஒரு ‘சிறிய இறைவாக்கினர்’. அவர் அறிவித்த செய்தியைக் கேட்டே, பிறவினத்து மக்கள் மனம் மாறியிருக்கும்போது, இறைவாக்கினருக்கெல்லாம் பெரிய இறைவாக்கினரான இயேசு அறிவித்த செய்தியைக் கேட்டு மனம் மாறாமல், அவரிடம் அடையாளம் கேட்கின்றார்கள் பரிசேயர்கள். இதனால் இயேசு அவர்களிடம், “தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள்” என்கிறார்.

அறிவிக்கப்படும் செய்தியைக் கேட்டால்தான் நம்பிக்கை ஏற்படும் (உரோ 10:17), பரிசேயர்களோ இயேசுவின் வார்த்தையைக் கேட்கவும் இல்லை. அதனால் நம்பிக்கையும் கொள்ளவில்லை. மனம் மாறவும் இல்லை. மாறாக, நினிவே மக்கள் அறிவிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டார்கள்; மனம் மாறினார்கள். நாம் கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொள்வோம். மனம் மாறிப் போதியதொரு வாழ்க்கை வாழ்வோம்.

சிறிய பாவங்களும் பெரிய பாவங்களும்!

இரண்டு மனிதர்கள் துறவியிடம் வந்தார்கள். வந்தவர்களில் ஒருவர், “நான் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டேன். என்னை மன்னித்தருளும்” என்றார். இன்னொருவர், “நான் மன்னிப்புக் கேட்கின்ற அளவுக்குப் பெரிய பாவமெல்லாம் செய்யவில்லை. சின்னச் சின்ன பாவங்களைச் செய்திருக்கின்றேன்” என்றார்.

உடனே துறவி முதலாமவரிடம், “நீ பெரிய பாவம் செய்திருக்கின்றாய் அல்லவா! அதனால் ஒரு பெரிய பாறையைத் தூக்கிக் கொண்டு வா” என்றார். பின்னர் இரண்டாமவரைப் பார்த்து, “நீ சின்னப் சின்ன பாவங்கைச் செய்திருக்கின்றாய் அல்லவா! அதனால் ஒரு கோணிப் பையை எடுத்துக்கொண்டு, அதைச் சிறு சிறு கற்களால் நிரப்பிக் கொண்டு வா” என்றார்.

இருவரும் துறவி சொன்னது போல் செய்துவிட்டு, அவரிடம் திரும்பி வந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், “நீங்கள் எந்த இடத்தில் கற்களை எடுத்தீர்கள். அவற்றை எடுத்த இடத்தில் வையுங்கள்” என்றார். அதைக் கேட்டதும், முதலாமவர், தான் எந்த இடத்தில் பாறையை எடுத்தாரோ, அதே இடத்தில் அதை வைக்க விரைந்தார். இரண்டாமவர், “என்னிடத்தில் ஏராளமான கற்களை இருக்கின்றன. இத்தனைக் கற்களையும் நான் எங்கே எடுத்தேன் என்று எனக்குத் தெரியவில்லையே” என்று விழி பிதுங்கி நின்றார். அவரை அந்நிலையில் பார்த்துவிட்டுத் துறவி அவரிடம், “பெரிய பாவத்தைச் செய்தவருக்குத் தான் எந்தப் பாவத்தேன் என்ற நினைவிருக்கின்றது. மட்டுமட்டுமல்லாமல், அவர் தான் செய்த பாவத்தை நினைத்து மனம் வருந்துவதால், அவருக்கு மன்னிப்பு உண்டு. உனக்கோ செய்த பாவமும் நினைவில்லை. அதனால் மன்னிப்பும் இல்லை” என்றார்.

Comments are closed.