நம் முழு இதயத்தோடு இறைவனிடம் திரும்பி வருவோம்!

இந்தத் தவக்காலத்தில் நம் முழு இதயத்தோடு மீண்டும் இறைவனிடம் திரும்பி வர இயேசு நம்மை அழைக்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 14, புதனன்று, மாலை 5 மணிக்குப் புனித சபீனா பேராலயத்தில் நிகழ்ந்த திருநீற்றுப் புதன் திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தவக்காலத்தின் தொடக்கத்தில், இயேசு நம் ஒவ்வொருவரையும் நம்முடைய உள்ளறைக்குச் செல்ல அழைக்கிறார் என்றும் உரைத்தார்.

உங்கள் உள்ளறைக்குச் செல்வது என்பது இதயத்திற்குத் திரும்புவதாகும் என்று விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியில் இருந்து உள்ளே செல்லும்போது, அதாவது, நம் இதயத்திற்குத் திரும்பும்போது,  நமது முழு வாழ்க்கையும், கடவுளுடனான நமது உறவின் உண்மைத்தன்மையும் நம் உள்ளத்தில் வெளிப்படுகிறது என்றும் எடுத்துரைத்தார்.

தவக்காலம், நாம் அடிக்கடி அணியும் முகமூடிகள் மற்றும் பொய்த்தோற்றங்களை அகற்றி, நமது உண்மையான இயல்பை நோக்கி திரும்பிச் செல்ல வாய்ப்பளிக்கிறது என்று கூறிய திருத்தந்தை, இதன் காரணமாகவே, இறைவேண்டல் மற்றும் பணிவுடன், நம் தலையில் சாம்பலைப் பெறுகிறோம் என்று அவர் விளக்கினார்.

மேலும் நாம் நெற்றியில் பூசும் சாம்பல், நாம் தூசி என்பதை நமக்கு நினைவூட்டுகிறது  என்றும், ஆனால் இந்தத் தூசி, கடவுளால் விரும்பப்பட்டு பாதுகாக்கப்படுகிறது என்றும் உரைத்த திருத்தந்தை, அதனால்தான், இறைவேண்டல் மற்றும் மனத்தாழ்மையின் உணர்வில்,  நமது நெற்றியில் பூசப்படும் சாம்பல் வாழ்க்கையின் இரகசியத்தை மீண்டும் கண்டுபிடிக்க நம்மை அழைப்பதுடன், கடவுள் நம்மை என்றுமுள்ள அன்புடன் அரவணைத்துக்கொள்கின்றார் என்பதையும் உணர வைக்கின்றது என்றும் விவரித்தார்.

நாம் கடவுளால் அன்புகூரப்படுகிறோம் என்பதை அங்கீகரிப்பது, நாம் மற்றவர்களையும் அன்புகூர அழைக்கப்படுகிறோம் என்பதைக் காண உதவும் என்று கூறிய திருத்தந்தை இறைவேண்டல், உண்ணாநோன்பு மற்றும் தர்மம் ஆகியவை நமது பாரம்பரிய நோன்பு நடைமுறைகள், அவை வெறும் வெளிப்புற நடைமுறைகள் அல்ல என்றும், ஆனால் இவைகள் நம் இதயத்திற்கும், நமது கிறிஸ்தவ வாழ்க்கையின் மையத்திற்கும் செல்லும் பாதைகள் என்றும் சுட்டிக்காட்டினார்.

உங்கள் உள் அறைக்குள் செல்லுங்கள், உங்கள் இதயத்திற்குத் திரும்புங்கள் என்று அழைக்கும் இறைவனின் குரலுக்குச் செவிமடுக்குமாறு விசுவாசிகள் அனைவருக்கும் அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாமே வெளிவேடமாகிவிட்ட இவ்வுலகில் இறைவேண்டல் செய்வதற்கு நமக்கென்று உள்ளறை ஏதும் நாம் ஒதுக்குவதில்லை என்றும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள இந்த உள்அறையில்தான், நம்மைக் குணப்படுத்தவும் தூய்மைப்படுத்தவும் இயேசு இறங்கி வருகின்றார் என்றும் குறிப்பிட்டார்.

ஆகவே, இந்த உள்ளறைக்குள் நுழைவோம் என்று அழைப்புவிடுத்த திருத்தந்தை, அங்கேதான் இயேசு வாழ்கிறார், நமது பலவீனம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது மற்றும் நாம் எவ்வித நிபந்தனையுமின்றி இறைவனால் அன்புகூரப்படுகின்றோம் என்றும் விளக்கினார்.

இத்தவக்காலத்தில் அமைதிநிறைந்த மனதுடன் வழிபடவும், இறைவனின் குரலை நம் வாழ்வில் கேட்கவும், அச்சமின்றி இருக்கவும், உலகுக்குரிய காரியங்களை அகற்றிவிட்டு, இன்றியமையாதவற்றிற்கு அதாவது, இறைவனுக்குரிய செயல்களில் நம் இதயங்களைத் திருப்பவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இறுதியாக, நாம் வெறும் தூசு என்பதையும், இந்தத் தூசு கடவுளால் பாதுகாக்கப்படுகிறது என்பதையும் ஒப்புக்கொள்வோம் என்பதை மீண்டும் நினைவூட்டிய திருத்தந்தை, நாம் பாவத்தின் சாம்பலில் இருந்து இயேசு கிறிஸ்துவிலும் தூய ஆவியிலும் புதிய வாழ்க்கைக்கு மீண்டும் பிறப்போம் என்றும் நம்பிக்கையூட்டினார்.

முன்னதாக, மாலை 4.30 மணிக்கு, உரோம் நகர், அவெந்தீனோ எனுமிடத்தில் அமைந்துள்ள புனித ஆன்செல்ம் கோவிலிலிருந்து பாவமன்னிப்பு பவனியை வழிநடத்திய திருத்தந்தை, பவனியின் இறுதியில், மாலை 5 மணிக்கு புனித சபீனா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலியை நிறைவேற்றி மறையுரை வழங்கினார்.

Comments are closed.