இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்.” என ஆண்டவர் ஆகாய் நூலில் கூறியதை வாசித்தோம்.
அன்று மீண்டும் கட்டி எழுப்பப்பட வேண்டிய எருசலேம் நகர ஆலயத்தை ஆண்டவர் குறிப்பிட்டது போல் இன்று பாவங்களினால் சீர்குலைந்திருக்கும் உடல் என்னும் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.
நமது உடலையும், உள்ளத்தையும் ஆண்டவர் குடிகொள்ளும் ஆலயமாக நாம் மாற்றிட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் புனிதரும், முதல் மறைசாட்சியுமான இன்றைய புனிதர் புனித லோரென்ஸோ ரூயிஸை திருச்சபைக்குத் தந்த இறைவனுக்கு நன்றியாக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
உலகம் முழுவதும் இயேசுவின் நற்செய்தியைப் பரப்பிக் கொண்டிருக்கும் இறைப்பணியாளர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த மூன்றாவது 10 மணியைக் ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
கர்நாடகாவில் குறிப்பாக காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்னும் அதிகமான தென் மேற்கு பருவ மழை பெய்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.