இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், “நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.” எனக் கூறப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் கூறியதைப் போல நாம் பெற்றுக் கொண்ட அழைப்பிற்கேற்ப நாம் வாழ வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

இன்று நற்செய்தியாளர் புனித மத்தேயுவின்

விழாவினைக் கொண்டாடும் நாம், மனம் மாறிய மத்தேயுவைப் போல நாமும் முழுமையாக மனம் மாற வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,

“இயேசு “என்னைப் பின்பற்றி வா” என்றார். மத்தேயுவும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்” என வாசித்தோம்.

இயேசு நம்மை அழைத்தால், மத்தேயுவைப் போல அனைத்தையும் விட்டு விட்டு இயேசுவைப் பின்தொடர நாம் தயாராக இருக்கின்றோமா? என சிந்திக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

திருத்தூதர் மத்தேயு எழுதிய நற்செய்தி நூல் ‘இறையாட்சி நூல்’ என்றும் அழைக்கப்படுகிறது. காரணம் இறையாட்சி என்ற வார்த்தையானது 51 முறை வருகிறது.

இறைவனின் இறையாட்சியில் நாம் அனைவரும் பங்கு கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.