செப்டம்பர் 22 : நற்செய்தி வாசகம்

பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்

பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-3

அக்காலத்தில்

இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————————

யார் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக்கொள்கிறார்?

பொதுக்காலம் இருபத்து நான்காம் வாரம் வெள்ளிக்கிழமை

I திமொத்தேயு 6: 2-12

II லூக்கா 8: 1-3

யார் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக்கொள்கிறார்?

தனது கண்டுபிடிப்பிற்குக் காப்புரிமை வாங்காதவர்:

ஆபத்துமிகுந்த நிலக்கரிச் சுரங்கத்தில் தீப்பற்றாதபடி கொண்டுபோகக் கூடிய பாதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்தவர் சர் ஹம்பிரி டேவி என்ற விஞ்ஞானி.

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த இவர் பாதுகாப்பு விளக்கைக் கண்டு பிடித்ததும், இவரது நெருங்கிய நண்பரான ஜான் பால் என்பவர் இவரிடம், “உனது கண்டுபிடிப்பிற்குப் காப்புரிமை வாங்கி, நிறையச் சம்பாதிக்கலாமே!” என்றார். இதற்கு ஹம்பிரி டேவி அவரிடம், “மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதுதான் என் நோக்கமே அன்றி, பணம் சம்பாதிப்பது அல்ல” என்றார்.

ஆம், தாம் கண்டுபிடித்த கண்டுபிடிப்பிற்கு ஹம்பிரி டேவி காப்புரிமை வாங்கி நிறையச் சம்பாதிக்க விரும்பாமல், மக்களுக்குச் சேவை செய்வதையே தன் நோக்கம் என்று சொன்னது, அவரது பெருந்தன்மையாய் நமக்குக் காட்டுகின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் பணத்தின்மீது பற்றுக்கொண்டு வாழாமால், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பணத்தையும் செல்வத்தையும் கொண்டு, அவரது பணி உதவ வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

யூதர்களைப் பொறுத்தளவில் செல்வம் என்பது ஒருவருக்குக் கடவுள் கொடுத்த மிகப்பெரிய ஆசியாகப் பார்க்கப்பட்டது (இச 8: 18) செல்வம் கடவுள் கொடுத்த ஆசியாக இருந்தாலும், அதை மிகுதியாகச் சேர்க்க விரும்புவோர் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கின்றார்கள் என்கிறார் பவுல். இக்கூற்று உண்மை என்பதை நிரூபிக்கின்றது இயேசு சொல்லும் அறிவற்ற செல்வன் உவமை (லூக் 12: 13 -21)

செல்வம் சேர்ப்பவர் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கின்றார் எனில், ஒருவர் செல்வம் சேர்க்கக்கூடாதா, சேர்த்து வைத்த செல்வத்தை என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகள் எழலாம்.. இதற்குப் பதிலாக இருப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகம். நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் பெண் சீடர்களைக் குறித்து வாசிக்கின்றோம். பொதுவாக யூத இரபிகள் பெண் சீடர்களை வைத்துக் கொள்வது கிடையாது; ஆனால், இயேசு பெண் சீடர்களைத் தன்னோடு வைத்திருந்ததன் மூலம் இறையாட்சிப் பணியில் அவர்களுக்குச் சம உரிமையளித்து, அவர்களது மாண்பினைப் போற்றினார் என்று புரிந்துகொள்ளலாம். மேலும் இயேசுவின் இந்தப் பெண் சீடர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள் என்று வாசிக்கின்றோம்.

ஆதலால், ஒருவருக்குக் கடவுள் மிகுதியாகச் செல்வம் கொடுத்திருக்கின்றார் எனில், அவர் அச்செல்வத்தைக் கடவுளின் பணிக்காகவும், அவருடைய மக்களான ஏழைகளுக்குக் கொடுக்கவேண்டும். ஏனெனில், ஒருவர் தான் பெற்ற செல்வத்தைக் கடவுளுடைய பணிக்கும், அவருடைய மக்களுக்காகவும் கொடுக்காமல், அவரது அரசில் நுழைய முடியாது.

Comments are closed.