மே 5 : நற்செய்தி வாசகம்

வழியும் உண்மையும் வாழ்வும் நானே

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்.”

தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்றார். இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

———————————————————————-

இயேசுவைப் பற்றியே அறிவித்த பவுல்

பாஸ்கா காலத்தின் நான்காம் வாரம் வெள்ளிக்கிழமை

I திருத்தூதர் பணிகள் 13: 26-33

திருப்பாடல் 2: 6-7, 8-9, 10-11 (7)

II யோவான் 14: 1-6

இயேசுவைப் பற்றியே அறிவித்த பவுல்

இயேசுவே வழி

ஒரு காலத்தின் இயேசுவைப் பின்பற்றியவர்களைப் பிடித்துச் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தவர் பவுல். இப்படிப்பட்டவர் தமஸ்கு நகர் நோக்கிச் செல்லும் வழியில் இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் தொடங்குகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவிற்குச் செல்லும் பவுல், அங்கிருந்தவர்களிடம் இயேசு யூதர்களால் கொல்லப்பட்டதையும், கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிர்த்தெழச் செய்ததையும் எடுத்துரைத்துவிட்டு, “இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி” என்கிறார்.

பவுல் தான் சென்ற இடங்களிலெல்லாம் இயேசுவைத் தவிர, வேறு யாரைப் பற்றியும் பறைசாற்றவில்லை. ஏனெனில், இன்றைய நற்செய்தியில் இயேசு, “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” என்கிறார். இயேசு வழியாகவும் உண்மையாகவும் வாழ்வுமாக இருப்பதால், பவுல் அவரைப் பற்றி மட்டுமே சான்று பகர்ந்து, பலரும் அவர்மீது நம்பிக்கை கொள்ளக் காரணமாக இருந்தார்.

இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 2 ஓர் அரச மாண்புப் பாடல் வகையைச் சார்ந்ததாகும். இப்பாடல் மெசியாவாம் இயேசு கடவுளின் மகன் என்றும், அவர் இயேசுவைப் பெற்றெடுத்தார் என்றும் கூறுகின்றது.

இயேசு கடவுளின் மகனாக இருக்கும்போது, அவரே வழியும் உண்மையும் வாழ்வுமாய் இருக்கும்போது, பவுலைப் போன்று, நாமன் அவரைப் பற்றிச் சான்று மிகவும் இன்றியமையாதது.

இயேசுவின் பாட்டி

ஞாயிறு மறைக்கல்வி வகுப்பு முடிந்து வீட்டிற்குத் திரும்பி வந்த சிறுவன் டோனியிடம் அவனுடைய அம்மா, “உனக்கு யார் மறைக்கல்வி கற்றுத் தருகிறார்?” என்று கேட்டார்.

“எனக்கு மறைக்கல்வி கற்றுத் தருபவரின் பெயர் தெரியாது” என்ற சிறுவன் டோனி, “அவர் வயதானவர். நிச்சயம் அவர் இயேசுவின் பாட்டியாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், அவர் இயேசுவைத் தவிர, வேறு யாரைப் பற்றியும் எங்களுக்குக் கற்றுத் தரவில்லை” என்றான்.

மறைக்கல்வி ஆசிரியை இயேசுவைப் பற்றி மட்டுமே கற்றுத் தந்ததுபோல், நாம் இயேசுவைப் பற்றி மட்டுமே மற்றவருக்கு அறிவிக்கவேண்டும். ஏனெனில், அவரே வழி, உண்மை, வாழ்வு. அவர் வழியாய் அன்றி, எவரும் தந்தையிடம் செல்வதில்லை.

Comments are closed.