இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“நம்பிக்கையினால் அன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்பவேண்டும்.” என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்.
கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை என்னும் நம்பிக்கையை நாம் முழுமையாகக் கொண்டிருக்கின்றோமா? என சிந்திக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில் “மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.” என வாசித்தோம்.
நமதாண்டவர் இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிமடுத்து அதன்படி செயலாற்றிட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
தவக்காலத்தை எதிர் நோக்கியிருக்கும் நாம் அந்நாள்களில் பக்தியோடு கூடிய ஒறுத்தல் முயற்சிகளைக் கடைபிடிக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து
இயேசுவைப் போன்று சிலுவையில் அறையப்பட்டு மறைசாட்சியாக உயிர் நீத்தவரும், ஜெருசலேமின் இரண்டாவது ஆயருமான இன்றைய புனிதர் சிமியோனிடமிருந்து நாம் துணிவினைக் கற்றுக் கொள்ள இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.