இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
“அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடன் இருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்.” என உலகின் முதல் பாவம் நடந்த நிகழ்வை தொ.நூலில் வாசிக்கின்றோம்.
ஐம்புலன்களை ஈர்ப்பவை பாவத்திற்கு வழிவகுக்க காரணமாக இருக்கும் என்பதை உணர்ந்து நாம் எச்சரிக்கையுடன் இருக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 32:5-ல்,
“என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்’ என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.” எனக் கூறப்பட்டுள்ளது.
பாவமன்னிப்பு என்னும் ஒப்புரவு அருட்சாதனம் இல்லாத இந்த தருணங்களில் நாம் நமது பாவங்களை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு பாவமன்னிப்பு பெற இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தியில், ‘எப்பத்தா’ என்று சொன்னதன் மூலம் இயேசு காதுகேளாதவரைக் கேட்கச் செய்தார். நாம் இறைவார்த்தைக்கு செவி கொடுத்து அதன்படி வாழ்கின்றோமா? அல்லது செவி இருந்தும் இறைவார்த்தையைக் கேளாதவர் போல இருக்கின்றோமா? என சிந்திக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.