இன்றைய திருவிழா † (ஃபெப்ரவரி 11)
தூய லூர்து அன்னை என்ற பெயர், ஃபிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் கி.பி. 1858ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 11ம் நாள் முதல், ஜூலை மாதம், 16ம் நாள் வரை “பெர்னதெத் சூபிரஸ்” (Bernadette Soubirous) என்ற சிறுமிக்கு அன்னை மரியாள் அளித்த திருக்காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும். இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த சிறப்பு வாய்ந்த திருக்காட்சிகளில் ஒன்றாக லூர்து நகர் திருக்காட்சியும் விளங்குகிறது. லூர்து அன்னையின் திருவிழா ஃபெப்ரவரி 11ம் தேதி கொண்டாடப்படுகிறது.
மரியாளின் திருக்காட்சிகள்:
ஃபிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் பிறந்தவர் பெர்னதெத் சூபிரஸ். இவருக்கு 14 வயது நடந்தபோது, கி.பி. 1858ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 11ம் தேதி, இவர் தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்க சென்றார். அவர்கள் மசபியேல் குகை அருகே சென்று கொண்டிருந்த வேளையில், பெர்னதெத் ஒரு காட்சியைக் கண்டார்.
அன்னை மரியாள் ஓர் இளம் பெண்ணாக அந்த குகையில் தோன்றினார். அவர் வெண்ணிற ஆடையும், முக்காடும் அணிந்திருந்தார். அவர் நீல நிறத்தில் இடைக் கச்சையை உடுத்தியிருந்தார். கையில் முத்துகளால் ஆன ஒரு செபமாலை வைத்திருந்தார். அவரது காலடியில் காட்டு ரோஜா செடிகள் காணப்பட்டன. அவர் கைகளைக் கூப்பி வானத்தை நோக்கியவாறு இருந்தார். பெர்னதெத் தன்னுடன் வந்த இருவரிடமும் “அதோ பாருங்கள் மிகவும் அழகான ஓர் இளம்பெண்” என்று கூறினார். இவரது சகோதரிக்கும் தோழிக்கும் எதுவும் தெரியவில்லை.
பெர்னதெத் அன்னையின் முதல் திருக்காட்சியைக் கண்டபோது, மரியாள் அவரை மேலும் சில நாட்கள் அதே இடத்திற்கு வரச் சொன்னார். மரியாளின் வார்த்தைகளை ஏற்று, பெர்னதெத்தும் அங்கு சென்றார். ஃபெப்ரவரி மாதம், 18ம் தேதி, மரியாளைக் கண்டு பெர்னதெத் பரவச நிலையில் இருந்ததை அவரோடு சென்றவர்கள் கண்டனர். ஒரு திருக்காட்சியில் மரியன்னை தனக்கு அங்கு ஓர் ஆலயம் கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெர்னதெத் அதை பங்கு குருவிடம் சொன்ன போது, அவர் அதற்கான காரணத்தை அறிந்து வருமாறு கூறினார்.
ஃபெப்ரவரி 25ம் தேதி திருக்காட்சியின்போது, மரியாளின் கட்டளையை ஏற்று பெர்னதெத் மண்ணைத் தோண்டியபோது, அந்த இடத்தில் நீரூற்று ஒன்று தோன்றியது. அது பின்பு ஓடையாக மாறி, திருப்பயணிகளை கவர்ந்திழுக்கும் அற்புத இடமாக இன்றும் திகழ்கிறது. மார்ச் மாதம், 25ம் தேதி அன்னை மரியாள் பெர்னதெத்திடம், “நாமே அமல உற்பவம்” (“Que Soy Era Immaculada Concepciou”) என்று தம்மைப் பற்றிக் கூறினார். இதற்கு, “பாவம் எதுவுமின்றி பிறந்தவர்” என்பது அர்த்தம்.
மொத்தம் பதினெட்டு முறை பெர்னதெத்துக்கு தரிசனமளித்த மரியன்னை, அவற்றில் 15 திருக்காட்சிகளில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருட்களின் 15 மறையுண்மைகளையும் நாளுக்கு ஒன்று என்ற வகையில் பெர்னதெத்தை ஒவ்வொன்றாக தியானித்து செபிக்கச் செய்தார். பெர்னதெத்தின் பின்னே பக்தியுடன் ஒரு கூட்டமும், கிண்டல் செய்யும் நோக்கத்தில் மற்றொரு கூட்டமும் பின் தொடர்ந்தன.
ஏப்ரல் மாதம், 7ம் தேதி, பெர்னதெத் அன்னையின் 16வது திருக்காட்சியைக் கண்டபோது, மருத்துவ ஆய்வுக்காக 15 நிமிடங்கள் இவர் கையை சிலர் தீயினால் சுட்டனர். பெர்னதெத் அதை உணரவும் இல்லை, இவர் கையில் தீக்காயமும் ஏற்படவில்லை. ஜூலை மாதம், 16ம் தேதி அன்னை மரியாளின் கடைசி திருக்காட்சியைக் கண்ட பெர்னதெத், “இதற்கு முன்பாக நான் அவரை இத்தகைய பேரழகோடு கண்டதே இல்லை” என்று கூறினார்.
Comments are closed.