இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்.” என எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் வாசிக்கின்றோம்.
நம்பிக்கையினால் நற்சான்று பெற்ற ஆபிராகம் போன்ற நம் மூதாதையர் போல் நாமும் வாழ்கின்றோமா? என சிந்திக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்
“தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்.” என புனித யோவான் கூறுகிறார்.
மிகப்பெறும் மனித குல மீட்புத் திட்டத்தின் அடித்தளமே அளவிட முடியாத ஆண்டவரின் பேரன்பு ஒன்றே என்பதை என்றும் உணர இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“கடலை நோக்கி, ‘‘இரையாதே, அமைதியாயிரு” என்றார், காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. பின் அவர் அவர்களை நோக்கி, ‘‘ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று இயேசு கேட்டார்.” என வாசிக்கின்றோம்.
நம் அன்றாட வாழ்வில் பலவிதமான துன்ப சூழ்நிலைகளில் இயேசு நம்மோடு இருப்பதை நாம் உணர்கின்றோமா? என சிந்திக்க இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து
“தாமஸ், என்னைப்பற்றின உன்னுடைய எழுத்துக்கள் அருமையாக உள்ளன; நீ என்ன பிரதிபலன் எதிர்பார்க்கிறாய்” என்று கேட்ட ஆண்டவரிடம், “ஆண்டவரே, நீரல்லாது எனக்கு வேறொன்றும் வேண்டாம்” என்று கூறிய இன்றைய புனிதர் தாமஸ் அக்குய்னஸை நம் திருச்சபைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.