சனவரி 29 : நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12a
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————————-
மறையுரைச் சிந்தனை (ஜனவரி 29)
மலைப்பொழிவின் படி வாழ்ந்து, மாமனிதர்கள் ஆவோம்.
அட்ரியன் டீலேமன் (Adrian Dieleman) என்ற பிரபல ஆன்மீக எழுத்தாளர் குறிப்பிடும் நிகழ்ச்சி இது.
ஒருமுறை மிகப் பிரமாண்டமாகக் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நீர்மூழ்கிக் கப்பலானது கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. அந்த நீர்மூழ்கிக் கப்பலை ஓட்டிய மாலுமி கடலின் ஆழம் வரை அந்தக் கப்பலை ஓட்டிச் சென்று பரிசோதித்துப் பார்த்தார். ஒருநாள் முழுவதும் நடந்த இந்த பரிசோதனை முயற்சியானது மிகவும் வெற்றிகரமாக முடிந்தது.
அந்த நீர்மூழ்கிக் கப்பலை ஓட்டிச்சென்ற மாலுமி கப்பலை துறைமுகத்தில் நிறுத்திவிட்டு வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த ஒருசில முக்கியப் பொறுப்பாளர்கள் மாலுமியிடம், “நேற்று இரவு கடலில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டதே, அது கப்பலைப் பாதித்ததா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதா?, எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே. நான் கப்பலை மிகவும் நிம்மதியாகவும் அமைதியாகும்தான் ஒட்டிக்கொண்டிருந்தேன்” என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார், “கடலின் மேல்பக்கம் வேண்டுமானால் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் கடலினுள்ளே பேரமைதிதான் நிலவியது” என்று.
இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுவிட்டுச் அட்ரியன் டீலேமன் சொல்வார், “ ஆண்டவர் இயேசு போதித்த மலைப்பொழிவின்படி வாழ்கின்றபோது வெளிப்புறத்தில் பல்வேறு துன்பங்களும், சவால்களும் ஏற்படுவதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அது நமக்கு பேரமைதியும் மனநிம்மதியும்தான் தரும்” என்று.
ஆண்டவர் இயேசு போதித்த மலைப்பொழிவு, அது நம் அனைவருக்கும் மனநிம்மைதியைத் தருவதோடு மட்டுமல்லாமல், நம்மை மாமனிதர்களாக மாற்றும் ஒரு போதனை என்பதை இந்த நிகழ்வின் வழியாக உணர்ந்துகொள்ளலாம். பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை வாசகங்கள் ‘மலைப்பொழிவின் படி வாழ்ந்து மாமனிதர்கள் ஆவோம்” என்ற சிந்தனையை நமக்கு வழங்குகின்றன. எனவே நாம் எப்படி மாமனிதர்களாக வாழ்வது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மலைமீது ஏறியமர்ந்து போதிக்கத் தொடங்குகின்றார். அவருடைய போதனை இப்படித்தான் தொடங்குகின்றது, “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது” என்று. இயேசுவின் இந்த மலைப்பொழிவில் யாராரெல்லாம் பேறுபெற்றவர்கள் என்ற பட்டியலைப் பார்க்கின்றோம். அவர்களாவன: ஏழையரின் உள்ளத்தோர், துயருறுவோர், கனிவுடையோர், நிதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர், இரக்கமுடையோர், தூய்மையான உள்ளத்தோர், அமைதியை ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர். இவர்களை எல்லாம் தனித்தனியாக சிந்தித்துப் பார்க்காமல், பேறுபெற்றோர் பட்டியலில் முதலிடம் பெறும் ஏழையரின் உள்ளத்தோரைக் குறித்து மட்டும் சிந்தித்துப் பார்த்து, அவர்கள் பேறுபெற்றவர்கள் பட்டியலில் இடம்பெறுவதற்கான காரணங்கள் என்ன, அவர்களைப் போன்று நாம் எப்படி பேறுபெற்றவர்களாக முடியும் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
ஏழையரின் உள்ளத்தோர் எதற்காக பேறுபெற்றோர் பட்டியலில் இடம்பெறுகிறார்கள் என்பதற்கான பதிலை இறைவாக்கினர் செப்பனியா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் படிக்கின்றோம். ஒன்று அவர்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிக்கிறார்கள் (2:3), இரண்டாவதாக அவர்கள் ஆண்டவருடைய பெயரில் நம்பிக்கை வைத்து வாழ்கிறார்கள்(3:12), மூன்றாவதாக அவர்கள் தீமை செய்யமாட்டார்கள், வஞ்சகப் பேச்சு பேசமாட்டார்கள்(3:13). இப்போது ஒவ்வொன்றையும் குறித்து சற்று விரிவாக சிந்தித்துப் பார்ப்போம்.
ஏழைகள் எப்படி கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்கும்போது அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடவுளைத் தவிர வேறு தலைவர்களைக் கொண்டு வாழமாட்டார்கள். கடவுள் தான் அவர்களுக்கு எல்லாம். எனவே ஏழைகள் இப்படி தங்களுடைய வாழ்வின் ஆதார சுருதியாக இருக்கும் கடவுளுக்கு அஞ்சி, அவர் காட்டிய வழியில் நடப்பார்களே ஒழிய, தங்களுடைய மனம்போன போக்கில் வாழமாட்டார்கள். மாறாக செல்வந்தர்கள் அப்படியில்லை. அவர்கள் காசைத்தான் கடவுளாக நினைப்பார்களே ஒழிய, உண்மையான கடவுளாய் கடவுளாக நினைக்கமாட்டார்கள். அதனால் அவர்கள் பணத் திமிரில் வாழ்வார்களே ஒழிய, கடவுளின் கட்டளைக்குப் பணிந்து நடக்கமாட்டார்கள்.

Comments are closed.