சனவரி 14 : நற்செய்தி வாசகம்

நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்.
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-17
இயேசு மீண்டும் கடலோரம் சென்றார். மக்கள் கூட்டத்தினர் எல்லாரும் அவரிடம் வரவே, அவர் அவர்களுக்குக் கற்பித்தார். பின்பு அங்கிருந்து அவர் சென்றபோது அல்பேயுவின் மகன் லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், “இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?” என்று கேட்டனர்.
இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, “நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————————+
நமது வலுவின்மையைக் கண்டு இரங்கும் இயேசு”
பொதுக்காலம் முதல் வாரம் சனிக்கிழமை
I எபிரேயர் 4: 12-16
II மாற்கு 2: 13-17
“நமது வலுவின்மையைக் கண்டு இரங்கும் இயேசு”
தவறு செய்த தன் உதவியாளரிடம் இரக்கம்காட்டிய நிதியமைச்சர்
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் வில்லியம் இவார்ட் கிளாட்ஸ்டன் (William Ewart Gladston 1809-1898). இவர் இங்கிலாந்தின் நிதியமைச்சராக இருந்தபொழுது, நிதியறிக்கையைச் சமர்பிப்பதற்கு ஒருசில நாள்களுக்கு முன்பு, தன் உதவியாளரை அழைத்து, அதைச் சரிபார்க்கச் சொன்னார். அவரும் அதைச் சரிபார்க்கும்பொழுது, அவரை அறியாமலேயே ஒரு மிகப்பெரிய பிழையைச் செய்துவிட்டார். தன்னுடைய உதவியாளர் எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்திருப்பார் என்று நினைத்துக்கொண்டு, வில்லியம் இவார்ட் கிளாட்ஸ்டன் நிதியறிக்கையைப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பின்னர் அது செய்தித்தாளிலும் வெளிவந்தது.
இத்தவற்றை எப்படியோ ஒரு செய்தி நிறுவனம் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வர, அது வில்லியம் இவார்ட் கிளாட்ஸ்டனுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இதற்குப் பின் ஒருநாள் வில்லியம் இவார்ட் கிளாட்ஸ்டன், தன் உதவியாளரை அழைத்தார். ‘தன்னால்தான் தன்னுடைய தலைவருக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. அதற்காக அவர் என்ன செய்யப்போகிறாரோ?’ என்று உதவியாளர் அஞ்சியவாறு, அவரிடம் சென்றபொழுது, வில்லியம் இவார்ட் கிளாட்ஸ்டன் அவரிடம், “இந்த முறை தவறு நடந்ததற்காக வருந்தவேண்டும். இத்தனை முறையும் நீ எனக்கு நல்லவிதமாய்ப் பணிசெய்திருக்கின்றாய். அதற்கு நன்றி செலுத்துவதற்குத்தான் உன்னை அழைத்தேன்” என்று அவரிடம் மிகவும் கனிவோடு பேசினார்.
தன் உதவியாளர் தவறு செய்து, தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தியபொழுது வில்லியம் இவார்ட் கிளாட்ஸ்டன் அவரைத் தண்டியாமல் அவர்மீது இரக்கம் காட்டினார். இன்றைய இறைவார்த்தை இயேசு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்டுகிறவர் என்ற செய்தியைத் தருகின்றது.
திருவிவிலியப் பின்னணி
எபிரேயர் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், தலைமைக் குருவாம் இயேசு, நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்டாதவர் அல்லர்; மாறாக, அவர் நம்மீது இரக்கம் காட்டுபவர் என்கின்றது. இயேசு, மனிதரின் வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்டுபவர் என்பதற்குச் சான்றாக இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கின்றது. நற்செய்தியில் இயேசு, யூதர்கள் பாவி என்றும், நாட்டைக் காட்டிக்கொடுத்த துரோகி என்றும் அழைத்த வரிதண்டுபவரான லேவியை – மத்தேயுவைத் – தன் பணிக்கென அழைக்கின்றார். இவ்வாறு இயேசு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரங்குபவர் ஆகின்றார்.

Comments are closed.