கிறிஸ்தவ வாழ்வு, கட்டியெழுப்பப்படவேண்டிய ஓர் இல்லமாகும்

நண்பகலில் வத்திக்கானின் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில், உறுதிபூசுதல் அருளடையாளத்தைப் பெறுகின்ற Spoleto-Norcia மறைமாவட்டத்தின் சிறாரைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ வாழ்வு, கட்டியெழுப்பப்படவேண்டிய ஓர் இல்லமாகும் என்று கூறியுள்ளார்.

நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் சேதமடைந்த பகுதியிலிருந்து வந்திருக்கின்ற நீங்கள், எந்த ஒரு நடுக்கத்திலும் உறுதியாய் நிற்கும் வீட்டிற்கும், சேதமடையும் வீட்டிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறிந்திருக்கிறீர்கள் என்றுரைத்த திருத்தந்தை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, அவரின் வார்த்தைகளுக்குச் செயலுருவம் கொடுப்பவரே அங்குச் செல்வார் (காண்க.மத்.7:24-27) என இயேசு கூறியதையும் அச்சிறாருக்கு நினைவுபடுத்தினார்.

புனித Eutizioன் பழங்காலத் துறவு இல்லத்திலிருந்து இச்சிறார் கொண்டுவந்திருந்த ஒரு கல் குறித்து குறிப்பிட்டு, இச்சிறார், குடும்பம், பங்குத்தளம், நண்பர்கள், விளையாட்டுச் சூழல் என எல்லா இடங்களிலும் கிறிஸ்தவ சமூகத்தைக் கட்டியெழுப்பும் உயிருள்ள கற்களாக மாறுமாறு அவர்கள் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

தூய ஆவியாரின் வல்லமையால் உயிருள்ள கற்களாக வாழ முடியும் எனவும், திருமுழுக்குப் பெற்றுள்ள உங்களை உறுதிபூசுதலில் அவர் உறுதிப்படுத்துவார் எனவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்கு, உயிருள்ள கல் ஆகிய இரு சொல்லாடல்களோடு நீங்கள் சென்று பாறையின் மீது வீட்டைக் கட்டியெழுப்புங்கள் என கூற விழைகிறேன் என்றார்.

உறுதிபூசுதல் அருளடையாளம் ஓர் அழகான பயணம், ஏனெனில் அது, சீமோன், அந்திரேயா, ஜெம்ஸ், ஜான், மரிய மகலதா, பெத்தானியாவின் மார்த்தா, மரியா போன்ற இயேசுவின் முதல் சீடர்களின் அனுபவத்தை மீண்டும் வாழச்செய்கின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை, உங்களுக்கு திருமுழுக்குப் பெற்ற நாள் நினைவில் இருக்கின்றதா என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

கிறிஸ்தவ வாழ்வு, திருமுழுக்கு என்ற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்றும், 11, 20, 40, 80 என எந்த வயதிலும், திருமுழுக்கு என்ற அடித்தளம் எப்போதும் அதுவாகவே இருக்கும் என்றும் அச்சிறாரிடம் கூறிய திருத்தந்தை, இதனாலேயே திருமுழுக்குப் பெற்ற நாளை நினைவில் வையுங்கள் என்று கேட்டுக்கொண்டு, அனைவருக்கும் தன் ஆசிரையும் அளித்தார்.

மறைப்பணி நாடுகளின் புதிய ஆயர்கள் சந்திப்பு

மேலும், செப்டம்பர் 17, இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், உரோம் நகரில் பணிப் பயிற்சி பெற்று வருகின்ற மறைப்பணி நாடுகளின் புதிய ஆயர்களையும் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.