மனித சமுதாயத்தின் வாழ்வுமுறை மாறவேண்டிய காலம் இது

போர், பெருந்தொற்று, ஏழ்மை ஆகியவற்றால் உருவாகியுள்ள பிரச்சனைகள், பொது நலனுக்கு ஒன்றிணைந்து உழைப்பதன் வழியாகத் தீர்க்கப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் இத்தாலிய தினத்தாள் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் இத்தாலி உட்பட உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், போர், சுற்றுச்சூழல் சீர்கேடு, திட்டமிட்ட குற்றக்கும்பல்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியின் மார்க்கே பகுதி என பல்வேறு தலைப்புக்களில், தென் இத்தாலியின் நேப்பிள்ஸ் பகுதியில் பிரசுரமாகும் “Il Mattino” என்ற தினத்தாளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்துள்ள நீண்டதொரு பேட்டி செப்டம்பர் 18, இஞ்ஞாயிறன்று வெளியானது.

“Il Mattino” நாளிதழின் 130ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு திருத்தந்தை வழங்கியுள்ள இப்பேட்டியில், நேப்பிள்ஸ் மற்றும், தென் இத்தாலி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அவர் அதிகம் கவனம் செலுத்தியிருந்தாலும், உலகம் முழுவதன் வருங்காலத்தைப் பாதிக்கின்ற உலகளாவிய விவகாரங்கள் பற்றியும் தன் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்.

சகோதரர், சகோதரிகளாக நம்மையெல்லாம் ஒன்றிணைக்கும் அம்சம் எது என்பதை கண்டுணர்ந்தால்மட்டுமே, நாம் எல்லாரும் எதிர்கொள்கின்ற நெருக்கடியிலிருந்து வெளிவர முடியும் என்று கூறியுள்ள திருத்தந்தை, இந்நெருக்கடி இன்று தொடங்கியது அல்ல என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இப்பூமிக்கோளத்திற்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும், போர்கள் குறித்து நாம் விழிப்புணர்வு கொள்ளவில்லை என்றும், ஏழைகள் மற்றும், மிகக்கடுமையாய் நோய்வாய்பட்டுள்ள பூமிக்கோளத்தின் அழுகுரலுக்கு நாம் செவிமடுக்கவில்லை  என்றும் கவலையோடு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மாறவேண்டிய காலம் 

வாழ்வுமுறையை சீரமைப்பதற்கு, குறிப்பாக, நீடித்த, நிலையான மற்றும், ஒருங்கிணைந்த வளரச்சிக்கும், பொருளாதாரம் மற்றும், முன்னேற்றத்தைப் புரிந்துகொள்வதற்குரிய புதிய வழிகளுக்கும் வாழ்வுப் பாதையை மீள்கட்டமைக்க இதுவே காலம் என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

வளரும் நாடுகளின் வெளிநாட்டுக் கடன் மன்னிக்கப்படவும், இப்பூமி சுரண்டப்படல், ஆயுதப் போட்டி, மக்கள், குறிப்பாக சிறார் முறைகேடாக நடத்தப்படல் போன்றவை முற்றிலும் நிறுத்தப்படவும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இத்தகைய பிரச்சனைகள் களையப்பட பொது நலனில் அக்கறை காட்டப்படவேண்டியது மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.