இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்
“செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்;” என நீதிமொழிகள் நூலில் கூறப்பட்டுள்ளது.
வாழ்வில் எல்லாத் தருணங்களிலும் நாம் தாழ்ச்சியைக் கைக்கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றைய நற்செய்தி வாசகத்தில், “எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர்.” என நமதாண்டவார் இயேசு கூறுகிறார்.
நாம் உலகின் ஒளியாய் இருக்கும்போது, எல்லாருக்கும் நன்மை செய்ய முன்வரும்போது இயேசு சந்தித்த எதிர்ப்புகளையும், துன்பங்களையும் நாமும் எதிர்கொள்ள வேண்டியது வரலாம்.
ஆனால் எழுந்து ஒளிவீசுவதுதான் இயேசுவின் சீடர்களுக்கு அழகு என்பதை உணர்ந்தவர்களாய் அதன்படி செயல்பட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும், மறைசாட்சியாக மரித்த ஆயரும், இன்றைய புனிதருமான புனித ஜனுவாரியஸ் இரத்த வங்கிகளின் பாதுகாவலராவார்.
இரத்த தானத்தைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடம் அதிகம் ஏற்பட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
இந்த புதிய வாரம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் திறம்பட செய்யவும், குறித்த காலத்துக்கு முன்னமே நமது வேலைகளை வெற்றிகரமாக முடிக்கவும், தூய ஆவியின் துணையை வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.