வாசக மறையுரை (ஏப்ரல் 13)

புனித வாரம்
புதன்கிழமை
I எசாயா 50: 4-9a
II மத்தேயு 26: 14-25
“எனக்கு என்ன தருவீர்கள்?”
பெறுபவர்களாக அல்ல, தருபவர்களாவோம்:
ஒரு நகரில் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்ட செல்வந்தர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவரிடம் அவருக்கு அறிமுகமான ஒருவர், “இறைப்பணிக்கும் சரி, மக்கள்பணிக்கும் சரி வாரி வாரி வழங்குகின்றீர்கள்! அப்படியிருந்தும் உங்களிடம் உள்ள செல்வம் குறையாமல், கூடிக்கொண்டே போகிறதே, அது எப்படி?” என்றார்.
செல்வந்தர் தனக்கு அறிமுகமானவரை ஒரு வினாடி கூர்ந்து பார்த்தார். பின்னர் அவர் அவரிடம், “இறைப்பணிக்கும் மக்கள்பணிக்கும் நான் கொடுக்கும்போது என்னுடைய ‘சிறிய’ கையிலிருந்தே கொடுக்கின்றேன். பதிலுக்குக் கடவுள் எனக்குக் கொடுக்கும்போது, அவரது ‘பெரிய’ கையிலிருந்து கொடுக்கின்றார். அதனால்தான் நான் வாரி வாரி வழங்கினாலும், என்னிடமுள்ள செல்வம் குறையாமல், மிகுதியாகிக் கொண்டே செல்கின்றது” என்றார்.
ஆம், கடவுளுக்கு நாம் நம்மிடம் உள்ளதைத் தருகின்றபோது கூடிக்கொண்டே போகிறது. அதே வேளையில் கடவுளுக்கு உரியதை நாம் எடுத்துக்கொள்ளும்போது நம்மிடம் எதுவுமே இல்லாமல் போகின்றது. இன்றைய இறைவார்த்தை நாம் பெறுபவர்களாக அல்லாமல், தருபவர்களாக இருக்க வேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது.
திருவிவிலியப் பின்னணி:
நற்செய்தியில், யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவியிடம் வந்து, இயேசுவைக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? என்று கேட்டு, அவர் கொடுக்கும் முப்பது வெள்ளிக்காசுகளைப் பெற்றுக்கொண்டு போகிறான். இந்த யூதாசிடம் பணப்பை இருந்ததால், அதிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்பவனாகவும் இருந்தான். இப்படிப் பேராசை மிகுதியால், பணத்தை எடுத்துக்கொள்பவனாக அல்லது பணத்தைப் பெற்றுக்கொள்பவனாக இருந்த யூதாசு ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்கின்றான். பேராசை ஒருவரை அழிவுக்குத்தானே இட்டுச் செல்லும்!
இதற்கு முற்றிலும் மாறாக, ஒருவர், இயேசுவும் அவரது சீடர்களும் பாஸ்கா விருந்துண்ண தன் வீட்டின் மேல் மாடியை தருவதைக் குறித்து வாசிக்கின்றோம். கடவுளுக்காகவும் அவரது பணிக்காகவும் நாம் நம்மிடம் உள்ளதைத் தரவேண்டும். அப்படித் தந்தால் நாம் அதற்குரிய கைம்மாறு பெறுவோம் (மாற் 9:41). இதை விடவும், முதல் வாசகம் அடிப்போருக்கு முதுகையும், தாடையைப் பிடுங்குவோருக்குத் தாடையையும் தரும் துன்புறும் ஊழியனைப் பற்றிக் கூறுகின்றது. துன்புறும் ஊழியனாம் இயேசு நாம் அனைவரும் வாழ்வுபெறத் தம்மையே தந்தார்.
ஆகையால், நாம் யூதாசைப் போன்று பெறுபவர்களாக அல்ல, இயேசுவைப் போன்று, இயேசுவும் அவரது சீடரும் பாஸ்கா விருந்துண்ண தன் இல்லத்தைத் தந்தவரைப் போன்று தருபவர்களாக இருப்போம்.
சிந்தனைக்கு:
 தரவேண்டும் என்றால் நல்ல செயல்களாகத் தரவேண்டும், தலைமைக்குருவைப் போன்று தீய செயல்கள் நடப்பதற்குத் தரக்கூடாது.
 பேராசையை விட பெரிய ஆபத்து வேறு எதுவும். அதனால் அதில் நாம் வீழ்ந்திடாது இருப்போம்.
 கொடுப்பவருக்குக் கடவுள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்.
இறைவாக்கு:
‘கொடை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு’ (சீஞா 35:8) என்கிறது சீராக்கின் ஞான நூல். எனவே, நாம் எடுப்பவர்களாக அல்லாமல், முகமலர்ச்சியோடு கொடுப்பவர்களாக இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.