இரஷ்யா மற்றும் உக்ரைனை அன்னைக்கு அர்ப்பணிக்கும் திருத்தந்தை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை அமல அன்னையின் மாசற்ற திருஇதயத்திற்கு அர்ப்பணித்து இறைவேண்டல் செய்யும் திருச்சடங்கின் அதிகாரப்பூர்வ உரையைத் திருப்பீடச் செய்தி தொடர்பகம் வெளியிட்டுள்ளது.
புனித பேதுரு பெருங்கோவிலில் உரோம் நேரப்படி மாலை 5 மணிக்குத் தொடங்கும் “இறைவனுக்கான 24 மணிநேரம்” என்ற தலைப்பிலான மன்னிப்பு வழிபாட்டின்போது இந்த அர்ப்பணிப்பு நிகழ்வு நடத்தப்படும் என்றும் மாலை 6.30 மணிக்கு இதற்கான இறைவேண்டலை திருத்தந்தை நிகழ்த்துவார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவிக்கிறது.
மரியாவின் களங்கமில்லா திருஇதயத்திற்கு அர்ப்பணிப்பு
ஓ மரியே, இறைவனின் அன்னையும், எம் அன்னையுமானவரே, இக்கொடுந்துன்ப நேரத்தில், நாங்கள் உம்மை நாடிவருகிறோம். நீர் எம் அன்னை. நீர் எம்மை அன்புகூர்கிறீர், எம்மை அறிந்திருக்கிறீர். நாங்கள் எங்கள் இதயத்தில் மறைத்து வைத்திருப்பது எதுவும் உமக்கு மறைவாயில்லை. இரக்கத்தின் அன்னையே, பல நேரங்களில் நாங்கள் உமது கனிவுள்ள பராமரிப்பை அனுபவித்துள்ளோம். உமது பிரசன்னம் எமக்கு அமைதியைக் கொணர்கின்றது. ஏனெனில் நீர் எப்போதும் எம்மை அமைதியின் இளவரசராம் இயேசுவிடம் வழிநடத்திச் செல்கின்றீர்.
ஆயினும் நாங்கள் அமைதியின் பாதையை இழந்து நிற்கிறோம். கடந்த நூற்றாண்டின் கொடுந்துயரங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை, உலகப் போர்களில் உயிரிழந்த இலட்சக்கணக்கான மக்களின் தியாகத்தை நாங்கள் மறந்துவிட்டோம். நாடுகளின் ஒரே குழுமமாக நாங்கள் மேற்கொண்ட அர்ப்பணங்களை புறக்கணித்துவிட்டோம். மக்களின் அமைதிக்கான கனவுகள், மற்றும், இளையோரின் நம்பிக்கைகளுக்குத் துரோகம் செய்துவருகிறோம். பேராசையால் நோயாளிகளாக மாறிவிட்டோம். தேசிய நலன்களுக்குள் எம்மை முடக்கிவைத்துள்ளோம். புறக்கணிப்பு மற்றும், தன்னலத்தால் முடங்கிக்கிடக்க எம்மையே அனுமதித்துள்ளோம். எம் அயலவர், மற்றும், பொதுவான இல்லமாகிய இப்பூமியின் பாதுகாவலர்கள் என்பதை மறந்து, கடவுளை மறக்கவும், எம் தவறுகளோடு வாழவும், பகைமையைப் பேணிவளர்க்கவும், மனித வாழ்வை அழிக்கவும் ஆயுதங்களைச் சேமிக்கவும் நாங்கள் விரும்புகிறோம். இப்பூமியின் தோட்டத்தை போரால் நாசமாக்குகிறோம். சகோதரர், சகோதரிகளாக வாழவேண்டும் என்று விரும்புகின்ற இறைத்தந்தையின் இதயத்தைப் பாவத்தால் காயப்படுத்தியுள்ளோம். ஒவ்வொருவரும் தன்னைத் தவிர மற்ற எல்லாரையும் புறக்கணிப்பவர்களாக மாறிவிட்டோம். ஆண்டவரே, எம்மை மன்னித்தருளும்! என வெட்கத்தோடு கூறுகிறோம்.
பாவத்தின் துயரில், எம் சோர்வு மற்றும் பலவீனத்தில், தீமை மற்றும் போர்க் கொடுமையின் புதிரான நிலையில், கடவுள் எம்மைக் கைவிடவில்லை, அவர் எம்மை தொடர்ந்து அன்போடு நோக்குகிறார், எம்மை மன்னிக்கவும் எம்மைத் தூக்கிவிடவும் ஆவலாக இருக்கிறார் என்பதை, புனித அன்னையே நீர் எமக்கு நினைவூட்டும். அன்னையே, கடவுளே உம்மை எமக்கு அளித்தார். திருஅவை மற்றும், மனித சமுதாயத்தின் புகலிடமாக உமது அமல இதயத்தில் எம்மை அவர் வைத்தார். உமது விண்ணக நன்மைத்தனத்தில் நீர் எம்மோடு இருக்கின்றீர். வரலாற்றின் வேதனையோடு உம்மிடம் வரும்போதுகூட நீர் எம்மை உம் கனிவன்பால் வழிநடத்துகிறீர்.
Comments are closed.