பிப்ரவரி 8 : நற்செய்தி வாசகம்

நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றுகிறீர்கள்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-13
ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர்.
அதற்கு அவர், “வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ‘இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்’ என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
மேலும் அவர், “உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்துவிட்டீர்கள். ‘உன் தந்தையையும் தாயையும் மதித்து நட’ என்றும் ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ‘கொர்பான்’ ஆயிற்று; அதாவது ‘கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————-
கடவுளின் கட்டளைகளும், மனித மரபுகளும்
பொதுக்காலத்தின் ஐந்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I 1 அரசர்கள் 8: 22-23, 27-30
II மாற்கு 7: 1-13
கடவுளின் கட்டளைகளும், மனித மரபுகளும்
கண்மூடித்தனமான வழிபாடு:
அது மிகவும் பழமையான ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் இருந்த இறைமக்கள் திருப்பலி தொடங்கியதும், எழுந்து நின்று வலப்பக்கம் உள்ள கோயில் சுவரைப் பார்த்துப் பாடல் பாடுவது உண்டு. இந்த வழக்கம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது.
ஒருநாள் அந்தக் கோயிலுக்குப் புதியவர் ஒருவர் வந்தார். அவர், மக்கள் அனைவரும் திருப்பலி தொடங்கியதும், வலப்பக்கம் உள்ள சுவரைப் பார்த்துப் பாடல் பாடியதையும், எப்போதெல்லாம் பாடல் பாடப்பட்டதோ, அப்போதெல்லாம் அவர்கள் வலப்பக்கம் உள்ள கோயில் சுவரைத் திரும்பிப் பார்த்துப் பாடல் பாடியதையும் கண்டு அதிர்ந்து போனார்.
இது குறித்து அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. கடைசியாக அவர் அங்கிருந்த பெரியவரிடம் கேட்டபோது, பெரியவர் அவரிடம், “முன்பெல்லாம் இந்தக் கோயிலில் பாடல் புத்தகம் கிடையாது. மாறாகத் திருப்பலிப் பாடல்கள் அனைத்தும் கோயிலின் வலப்பக்கம் உள்ள சுவரில் பொறிக்கப்பட்டிருக்கும். அதனால் மக்கள் பாடல் பாடும்போது, கோயிலின் வலப்பக்கம் உள்ள சுவரில் பொறிக்கப்பட்டிருந்த பாடல்களைப் பார்த்துவிட்டுப் பாடி வந்தனர்.
ஆண்டுகள் மெல்ல உருண்டோடியபோது, பாடல் புத்தகங்கள் வந்துவிட்டன. அதைவிடவும், சுவரில் பொறிக்கப்பட்டிருந்த பாடல்கள் அனைத்தும் மங்கிவிட்டதால், அதில் வெள்ளையும் அடிக்கப்பட்டுவிட்டது.. சுவரையோ பார்த்துப் பாடல் பாடியதால், பாடல் புத்தகங்கள் வந்தபிறகு, மக்கள் சுவரையே பார்த்துப் பாடல் பாடிக்கொண்டிருக்கின்றனர்” என்றார். இதைக் கேட்டுப் புதியவர் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.
முன்னோர்கள் கோயில் சுவரைப் பார்த்து எதற்காகப் பாடல் பாடினார்கள் என்பதுகூடத் தெரியாமல், அவர்களுடைய வழிவந்தவர்கள் கோயில் சுவரைப் பார்த்துப் பாடல் பாடியது வேடிக்கையானது. நற்செய்தியில், பரிசேயர்கள் மற்றும் கடவுளின் கட்டளையைத் உதறித் தள்ளிவிட்டு, மனித மரபை உயர்த்திப் பிடித்ததைக் குறித்து இயேசு தனது கண்டனத்தைப் பதிவுசெய்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
உணவு உண்பதற்கு முன்பாகக் கைகளைக் கழுவுவது ஆரோக்கியமானதும் நல்லதுகூட; ஆனால், கைகளை இப்படித்தான் கழுவ வேண்டும் என்பது ஒருவரை வற்புறுத்துவது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.
நற்செய்தியில், இயேசுவின் சீடர்கள் உணவு உண்பதற்கு முன்பாகக் கைகளைக் கழுவாமல் உண்டுவிட்டனர் என்று பரிசேயரும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர்களும் அவர்கள்மீது குற்றம் சுமத்துகின்றார்கள். உண்மையில், இயேசுவின் சீடர்கள் கைகளைக் கழுவித்தான் உண்டனர்; அவர்கள் மூதாதையர் மரபுப்படி (மத் 15:2) கைகளைக் கழுவவில்லை என்பதால்தான் பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இயேசுவின் சீடர்கள்மீது குற்றம் காண்கின்றார்கள். அவர்கள் இயேசுவின் சீடர்களைப் பார்த்து இவ்வாறு சொல்வதன் மூலம், இயேசு அவர்களுக்குச் சரியாகக் கற்றுத் தரவில்லை என்று அவர்மீதே குற்றம் காண்கின்றார்கள்.
அப்போதுதான் இயேசு, இறைவாகினர் எசாயா நூலில் இடம்பெறும் வார்த்தைகளை (எசா 29:13) மேற்கோள் காட்டி, அவர்களின் வெளிவேடத்தைச் சாடுகின்றார். கடவுளின் கட்டளை முக்கியமானது. அதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்காமல், மனித மரபுகளை உயர்த்திப் பிடித்தனர். ஆகவேதான் இயேசு அவர்களைச் சாடுகின்றார். எனவே, நம்மிடம் உள்ள வெளிவேடத்தையும் அறிவுக்கு ஒவ்வாத மனித மரபுகளையும் உதறித் தள்ளிவிட்டு, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனைக்கு:
 வெளிவேடம் என்றாவது ஒருநாள் வெட்ட வெளிச்சமாகும். ஆகவே, நாம் ஆவியிலும் உண்மையிலும் இறைவனை வழிபடுவோம்
 அறிவுக்கு ஒவ்வாத மனித மரபுகளை அப்புறப்படுத்தி, ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போம்
 ஆண்டவரின் கட்டளைகள் வாழ்வளிப்பவை. அவற்றை நாம் கடைப்பிடித்து வாழ்வோம்

Comments are closed.