வாசக மறையுரை (பிப்ரவரி 08)

பொதுக் காலத்தின் ஐந்தாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I 1அரசர்கள் 8: 22-23, 27-30
II மாற்கு 7: 1-13
கடவுளின் கட்டளைகளும், மனித மரபுகளும்
கண்மூடித்தனமான வழிபாடு:
அது மிகவும் பழமையான ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் இருந்த இறைமக்கள் திருப்பலி தொடங்கியதும், எழுந்து நின்று வலப்பக்கம் உள்ள கோயில் சுவரைப் பார்த்துப் பாடல் பாடுவது உண்டு. இந்த வழக்கம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது.
ஒருநாள் அந்தக் கோயிலுக்குப் புதியவர் ஒருவர் வந்தார். அவர், மக்கள் அனைவரும் திருப்பலி தொடங்கியதும், வலப்பக்கம் உள்ள சுவரைப் பார்த்துப் பாடல் பாடியதையும், எப்போதெல்லாம் பாடல் பாடப்பட்டதோ, அப்போதெல்லாம் அவர்கள் வலப்பக்கம் உள்ள கோயில் சுவரைத் திரும்பிப் பார்த்துப் பாடல் பாடியதையும் கண்டு அதிர்ந்து போனார்.
இது குறித்து அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. கடைசியாக அவர் அங்கிருந்த பெரியவரிடம் கேட்டபோது, பெரியவர் அவரிடம், “முன்பெல்லாம் இந்தக் கோயிலில் பாடல் புத்தகம் கிடையாது. மாறாகத் திருப்பலிப் பாடல்கள் அனைத்தும் கோயிலின் வலப்பக்கம் உள்ள சுவரில் பொறிக்கப்பட்டிருக்கும். அதனால் மக்கள் பாடல் பாடும்போது, கோயிலின் வலப்பக்கம் உள்ள சுவரில் பொறிக்கப்பட்டிருந்த பாடல்களைப் பார்த்துவிட்டுப் பாடி வந்தனர்.
ஆண்டுகள் மெல்ல உருண்டோடியபோது, பாடல் புத்தகங்கள் வந்துவிட்டன. அதைவிடவும், சுவரில் பொறிக்கப்பட்டிருந்த பாடல்கள் அனைத்தும் மங்கிவிட்டதால், அதில் வெள்ளையும் அடிக்கப்பட்டுவிட்டது. சுவரையோ பார்த்துப் பாடல் பாடியதால், பாடல் புத்தகங்கள் வந்தபிறகு, மக்கள் சுவரையே பார்த்துப் பாடல் பாடிக்கொண்டிருக்கின்றனர்” என்றார். இதைக் கேட்டுப் புதியவர் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.
முன்னோர்கள் கோயில் சுவரைப் பார்த்து எதற்காகப் பாடல் பாடினார்கள் என்பதுகூடத் தெரியாமல், அவர்களுடைய வழிவந்தவர்கள் கோயில் சுவரைப் பார்த்துப் பாடல் பாடியது வேடிக்கையானது. நற்செய்தியில், பரிசேயர்கள் மற்றும் கடவுளின் கட்டளையைத் உதறித் தள்ளிவிட்டு, மனித மரபை உயர்த்திப் பிடித்ததைக் குறித்து இயேசு தனது கண்டனத்தைப் பதிவுசெய்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
உணவு உண்பதற்கு முன்பாகக் கைகளைக் கழுவுவது ஆரோக்கியமானதும் நல்லதுகூட; ஆனால், கைகளை இப்படித்தான் கழுவ வேண்டும் என்பது ஒருவரை வற்புறுத்துவது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.
நற்செய்தியில், இயேசுவின் சீடர்கள் உணவு உண்பதற்கு முன்பாகக் கைகளைக் கழுவாமல் உண்டுவிட்டனர் என்று பரிசேயரும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர்களும் அவர்கள்மீது குற்றம் சுமத்துகின்றார்கள். உண்மையில், இயேசுவின் சீடர்கள் கைகளைக் கழுவித்தான் உண்டனர்; அவர்கள் மூதாதையர் மரபுப்படி (மத் 15:2) கைகளைக் கழுவவில்லை என்பதால்தான் பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இயேசுவின் சீடர்கள்மீது குற்றம் காண்கின்றார்கள். அவர்கள் இயேசுவின் சீடர்களைப் பார்த்து இவ்வாறு சொல்வதன் மூலம், இயேசு அவர்களுக்குச் சரியாகக் கற்றுத் தரவில்லை என்று அவர்மீதே குற்றம் காண்கின்றார்கள்.
அப்போதுதான் இயேசு, இறைவாகினர் எசாயா நூலில் இடம்பெறும் வார்த்தைகளை (எசா 29:13) மேற்கோள் காட்டி, அவர்களின் வெளிவேடத்தைச் சாடுகின்றார். கடவுளின் கட்டளை முக்கியமானது. அதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்காமல், மனித மரபுகளை உயர்த்திப் பிடித்தனர். ஆகவேதான் இயேசு அவர்களைச் சாடுகின்றார். எனவே, நம்மிடம் உள்ள வெளிவேடத்தையும் அறிவுக்கு ஒவ்வாத மனித மரபுகளையும் உதறித் தள்ளிவிட்டு, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனைக்கு:
 வெளிவேடம் என்றாவது ஒருநாள் வெட்ட வெளிச்சமாகும். ஆகவே, நாம் ஆவியிலும் உண்மையிலும் இறைவனை வழிபடுவோம்
 அறிவுக்கு ஒவ்வாத மனித மரபுகளை அப்புறப்படுத்தி, ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போம்
 ஆண்டவரின் கட்டளைகள் வாழ்வளிப்பவை. அவற்றை நாம் கடைப்பிடித்து வாழ்வோம்.
இறைவாக்கு:
‘திருச்சட்டத்தை ஆய்ந்தறிவோர் அதனால் நிறைவுபெறுவர்; வெளிவேடக்காரர் அதனால் தடுக்கி விழுவர்’ (சீஞா 32:15) என்கிறது சீராக்கின் ஞான நூல். எனவே, நாம் வெளிவேடத்தை அகற்றி, ஆண்டவரின் திருச்சட்டத்தின் படி வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.