வாசக மறையுரை (ஜனவரி 29)
பொதுக் காலத்தின் மூன்றாம் வாரம்
சனிக்கிழமை
I 2சாமுவேல் 12:1-7a, 10b-17
II மாற்கு 4:35-41
“சாகப் போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?”
பாவமும் சாவும்:
ஒரு சிற்றூரில் இருந்த இளைஞன் ஒருவன் பாம்பு ஒன்றை வளர்த்து வந்தான். அது விஷப் பாம்பாக இருந்தாலும், அவன் அதைத் தன் பிள்ளையை போன்று நினைத்து, அதற்கு உணவூட்டினான்; பரமரித்தான். அதனுடன் நீண்ட நேரம் செலவழித்தான். பாம்பும் அவன் விசில் சத்தம் எழுப்புகின்றபோதெல்லாம் அவனிடம் வந்து, அவன் சொன்னதையெல்லாம் கேட்டு நடந்தது. இதனால் அவன் தான் வளர்த்து வந்த அந்தப் பாம்பைக் குறித்துப் பெரிதும் மகிழ்ந்தான்.
ஒருநாள் அவன் தான் வளர்ந்து வந்த பாம்பைத் தன் நண்பர்களிடம் காட்டுவதற்காக அதை ஒரு சாக்குப் பையில் போட்டுக்கொண்டு, அவர்கள் இருந்த இடத்திற்குச் சென்றான். நண்பர்கள் அவன் வளர்த்து வந்த பாம்பைப் பார்த்துவிட்டு, அது மிகவும் சாதுவாகவும், அவன் சொன்னதையெல்லாம் அது கேட்டு நடந்தது கண்டும் பெரிதும் வியந்து, அவனை மனதாரப் பாராட்டினார்கள்.
இத்தகைய மகிழ்ச்சியுடன் அவன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். வீட்டிற்கு வந்ததும், சாக்குப் பையிலிருந்து அவன் பாம்பை வெளியே எடுத்து விட்டான். அப்போது எதிரிபாராத விதமாக பாம்பு அவனைக் கொத்தி, அங்கிருந்து புதருக்குள் ஒளிந்துகொண்டது. இதனால் விஷம் தலைக்கேறி அவன் இறந்து போனான்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் இளைஞன் விஷப்பாம்பு என்று தெரிந்தும் அதனோடு வாழ்ந்து வந்தான். இதனால் அவன் அந்தப் பாம்பினாலேயே கொத்தப்பட்டு இறந்துபோனான். பலரும் பாவம் என்று தெரிந்தும், அதைச் செய்கின்றார்கள். அதனோடு வாழ்கின்றார்கள். முடிவில் அவர்கள் பெரிய அழிவைச் சந்திக்கின்றார்கள். முதல் வாசகத்தில் தாவீது உரியாவின் மனைவியோடு பாவம் செய்ததால் என்ன நடக்கின்றது என்பது பற்றிக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
முதலில் பத்சேபாவோடு பாவம் செய்யும் தாவீது, அந்தத் தவற்றை மறைக்க உரியாவைக் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்து, அவரைக் கொன்று போடுகின்றார். இவ்வாறு தாவீது விபசாரம், கொலை ஆகிய பாவங்கள் செய்தது மட்டுமல்லாமல், ஆண்டவருடைய கட்டளையை மீறி அவருக்கு எதிராகவும் பாவம் செய்கின்றார்.
இந்நிலையில் இறைவாக்கினர் நாத்தான் தாவீதின் தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றார். இறைவாக்கினர் நாத்தான் தனது தவற்றைச் சுட்டிக்காட்டியதும் தாவீது, நான் பாவமே செய்ய இல்லை என்று தன்னை நியாயப்படுத்தாமல் ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்கின்றார்; ஆண்டவரும் அவரது குற்றத்தை மன்னிக்கின்றார். இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் தாவீது உரியாவின் இறப்புக்குக் காரணமாக இருந்ததால், பத்சேபாவிற்கும் அவருக்கும் பிறந்த குழந்தை இறக்கின்றது. மேலும் அவரது மகன்களான அம்னோன், அப்சலோம், அதோனியா கொடூரமாகக் கொல்லப்படுகின்றார்கள். இவ்வாறு தாவீது செய்த பாவம் இவர்களுடைய கொடிய இறப்புக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.
பாவத்திற்குக் கிடைக்கும் கூலி சாவு (உரோ 6:23) என்பது ஒரு வகையான சாவு என்றால், அச்சத்தினால் இன்னொரு வகையான சாவு ஏற்படுகின்றது. நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் இயேசுவோடு கடலில் போய்க்கொண்டிருக்கும்போது பெரும் புயல் ஏற்படுகின்றது. அதைக் கண்டு அவர்கள், “போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்கிறார்கள். உடனே இயேசு காற்றைக் கடிந்துகொள்ள மிகுந்த அமைதி உண்டாகின்றது. ஆம், இயேசுவுக்கு இயற்கை உட்பட எல்லாவற்றின்மீது அதிகாரம் இருந்தது (மத் 28:18). அதனால்தான் அவர் காற்றைக் கடிந்துகொண்டு அச்சத்தினால் ஏற்பட இருந்த சாவைப் போக்கினார்.
ஆகையால், பாவத்தினால் வரும் சாவிலிருந்தும், அச்சத்தினால் வரும் சாவிலிருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள, நாம் ஆண்டவரைப் பற்றிக்கொண்டு வாழ்வின் வழியில் நடப்போம்.
சிந்தனைக்கு:
பாவம் நம்மேல் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க, நாம் பாவத்தின் பாவக் கவர்ச்சிகளை விட்டுவிடுவோம்.
நம்மை வாட்டும் அச்சம் நிறைந்த சூழலில், நாம் ஆண்டவரைப் பற்றிக் கொள்வோம்
ஆண்டவர் இயேசு பாவத்தினால் வந்த சாவை வென்றவர்
இறைவாக்கு:
‘நீங்களோ உங்கள் உறுப்புகளைத் தீவினையின் கருவிகளாய்ப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்’ (உரோ 6:13) என்பார் புனித பவுல். எனவே, நாம் நம்மை பாவத்திற்கு ஒப்புவிக்காமல், ஆண்டவரிடம் ஒப்புவித்து, அவரது வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.