புனித பவுலடியார் மனமாற்ற விழா குறித்த திருத்தந்தையின் மறையுரை

ஜனவரி 18 முதல் 25 வரை திருஅவையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்வ ஒன்றிப்பு செப வாரத்தின் இறுதி நாளான ஜனவரி 25, இச்செவ்வாயன்று, அதாவது, புனித பவுலின் மனமாற்ற விழாவன்று மாலை உரோம் நேரம் 5.30 மணிக்கு, இந்திய நேரம் இரவு 10 மணிக்கு ஏனைய கிறிஸ்தவ சபை பிரநிதிநிதிகளுடன் இணைந்து செபவழிபாடு ஒன்றை நடத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனது மறையுரைக்கான மையக்கருத்தாக மூன்று ஞானிகளின் பயணத்தை எடுத்துக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1. கிழக்கில் அவர்களின் தொடக்கம் 2.  ஜெருசலேம் வழியாக அவர்களின் பாதை 3. பெத்லகேமுக்கு அவர்களின் இறுதி வருகை, ஆகிய தலைப்புகளில் தன் சிந்தனையை வழங்கினார்.

முதலாவதாக, சூரியன் உதிக்கும் கிழக்கில் விண்மீனைக் கண்ட ஞானிகள் தங்கள் சொந்த அறிவு மற்றும் மரபுகளில் திருப்தி அடையாமல், அதைவிட மேலான ஒன்றை அடைய விரும்பினர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  சோர்வுறச் செய்யும் நீண்ட பாதையைக் குறித்து கவலைப்படாமல்  விண்மீனான இயேசுவையும், ஒற்றுமைக்கான அவரது அழைப்பையும் பின்பற்றுமாறு அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

இரண்டாவதாக, ஏரோதும் அவருடன் எருசலேம்  மக்களும்  கலக்கம் அடைந்திருந்த வேளையில், ஞானிகள் மூவரும் எருசலேம் திருநகருக்குக் கொண்டுவரப்பட்டார்கள் என்றும், புனித நகரத்தில், ஞானிகள் விண்மீனின் ஒளியை காணவில்லை, ஆனால் இந்த உலகின் இருண்ட சக்திகளின் எதிர்ப்பை அனுபவித்தனர் என்றும் தெரிவித்தார்.

முழு கிறிஸ்தவ ஒற்றுமையை நோக்கிய நமது பயணத்தில், அந்த மக்களை முடக்கிய அதே காரணத்திற்காக நாமும் குழப்பம், மற்றும் பயத்தால் பயணத்தின் இடையே நிறுத்தப்படலாம் என்று கூறிய திருத்தந்தை, நமது பாரம்பரியங்களையும் பழக்கவழக்கங்களையும் சீர்குலைக்கும் நவீனமயங்களுக்குப் பயப்படாமல், ஒருவரையொருவர் நம்பி ஒன்றாகப் பயணிக்க கிறித்தவ மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மூன்றாவதாக, ஞானிகள் மூவரும் பெத்லேகம் சென்று இயேசுவைக் கண்டு வணங்கினார்கள் என்பது  நற்செய்திகளின் இறுதியில் கலிலேயா மலையில் உயிர்த்த ஆண்டவர் முன்பு, சீடர்கள் அனைவரும் அவரை வணங்கினார்கள் என்பதை முன்னுரைக்கிறது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

மேலும், இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒற்றுமையின் முழுமைக்காக ஏங்கும் சமகால கிறிஸ்தவர்களுக்கு இறைவாக்கு நிறைவேறும் அடையாளங்களாக மாறுகின்றன என்றும்,  இந்த ஒற்றுமையை, இறைவனை வணங்குவதன் வழியாக மட்டுமே அடைய முடியும் என்றும் விளக்கிய திருத்தந்தை, முழு ஒற்றுமையை நோக்கிய நமது பயணத்திற்கு, இன்னும் தீவிரமான இறைவேண்டலும், இறைவழிபாடும் தேவை என்று வலியுறுத்தினார்.

ஞானிகள் குழந்தை இயேசுவுக்கு கொடுத்த பரிசுப்பொருள்கள் குறித்துப்  பேசியபோது, இது இறைவன் நம்மிடமிருந்து பெற விரும்பும் பரிசுகளை அடையாளப்படுத்துகிறது என்று கூறிய திருத்தந்தை,  தங்கம், கடவுள் நமது வாழ்வில் முதல் இடத்தில் இருக்கவேண்டும் என்பதையும், தூபம், இறைவேண்டலின் முக்கியத்துவத்தையும், சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட இயேசுவின் உடலை பெருமைப்படுத்த நம்மை அழைக்கும் வெள்ளைப்போளம், ஏழைகளின் காயங்களில் பிரதிபலிக்கும் இயேசுவினுடைய துன்புறும் உடலுக்கான அக்கறை குறித்து நம்மிடம் பேசுகிறது என்றுரைத்தார்.

இறுதியாக, ஞானியரின் வாழ்வை பின்பற்ற அழைத்த திருத்தந்தை, மூன்று ஞானியரும் வேறு வழியாக தங்களின் நாடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள் என்றும், புனித பவுலடியாரும் மனமாற்றம் பெற்ற பிறகு வேறுவழியை அதாவது கிறிஸ்துவின் வழியை தெரிந்துகொண்டார் என்றும் எடுத்துக்காட்டி,  இறைவன் நமக்குச் சுட்டிக்காட்டும் பணிவு, சகோதரத்துவம் மற்றும் இறை வணக்கத்திற்குரிய பாதைகளைத் தெரிந்துகொள்வோம் என்று கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார்.

Comments are closed.