ஒன்றிப்பின் கருவிகளாக மாறுவோம்

இவ்வாண்டு இறுதியில் இடம்பெறவேண்டியிருந்த Taize இளையோர் கூட்டம், கோவிட் பெருந்தொற்று காரணமாக அடுத்த ஜூலைக்குத் தள்ளிபோடப்பட்டுள்ள நிலையில், இணையம் வழி இடம்பெறும் இளையோர் கூட்டத்திற்குத் தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருபீடச்செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வழியாக அனுப்பியுள்ள இந்த வாழ்த்துச் செய்தியில், ஜூலை மாதம் இத்தாலியின் Turin நகரில் இடம்பெறவுள்ள ஐரோப்பிய இளையோர் கூட்டத்திற்குத்   தயாரிப்பாக, மகிழ்வில் உடன் பிறந்த நிலையை அனுபவித்து வாழுமாறு அழைப்புவிடுத்துள்ளார்  திருத்தந்தை.

இவ்வுலகின் வருங்காலம் குறித்தும், பாதுகாப்பு குறித்தும், கேள்விகள் எழுப்பப்பட்டுவரும் ஒரு சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், ஒன்றிப்பின் கருவிகளாக மாறுவது என்ற தலைப்பில் அடுத்த ஆண்டு கூட்டத்தை நடத்த இருப்பது, நம்பிக்கைத் தருவதாக உள்ளது எனவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

மனிதத் துயர்கள் குறித்தும், இக்காலத்தின் தேவைகள் குறித்தும் கவனத்தில் கொண்டு, உண்மை நிலைக்குத் தீர்வுகாண்பதில் தங்களை உட்படுத்தும் இன்றைய இளையோர் குறித்து தன் செய்தியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்  திருத்தந்தை, உடன்பிறந்த நிலை, ஒருமைப்பாடு, ஒன்றிப்பு ஆகியவைகளுடன் செயல்பட தூய ஆவியார் எப்போதும் உதவுகிறார் எனவும் ஊக்கமளித்துள்ளார்.

Comments are closed.