பதிலுரைப்பாடல் மறையுரை (டிசம்பர் 06)

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம்
திங்கட்கிழமை
திருப்பாடல் 85: 8ab-9, 10-11, 12-13 (எசா 35:4b)
“இறைவன் உரைப்பதைக் கேட்பேன்”
ஆண்டவர் சொல்வதைக் கேட்போம்:
செய்தியாளர் ஒருவர் ஒரு துறவவையின் தலைமை அருள்சகோதரியை நேர்காணல் செய்தார். அவர் தலைமை அருள்சகோதரியிடம், பலவற்றையும் குறித்துக் கேட்டுவிட்டு, இறுதியாக, “நீங்களும் உங்கள் துறவவை அருள்சகோதரிகளும் ஒன்றிணைந்து வழிபாட்டில் கலந்துகொள்ளும்போது கடவுளிடம் என்ன பேசுவீர்கள்?” என்றார். அதற்குத் தலைமை அருள்சகோதரி, “நாங்கள் எதையும் கேட்பதில்லை. கடவுள் எங்களோடு பேசுவதைக் கேட்போம். அவ்வளவுதான்” என்றார்.
“கடவுள் உங்களோடு பேசுவாரா, அப்படி எனில், அவர் என்ன உங்களிடம் பேசுவார்?” என்று செய்தியாளர் அடுத்த கேள்வியைக் கேட்டபொழுது, தலைமை அருள்சகோதரி மிகவும் அமைந்த குரலில், “கடவுள் எங்களிடம் எதுவும் பேசுவதில்லை. ஆனால் நாங்கள் அவர் பேசுவதை அமைதியாகக் கேட்போம்” என்றார்.
கடவுள் பேசுகிறாரோ இல்லையோ அவர் பேசுவதைக் கேட்கவேண்டும். அதுவே உண்மையான இறைவேண்டலாகவும் வழிபாடாகவும் இருக்கும். அத்தகைய செய்தியை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடல், “ஆண்டவராகிய இறைவன் உரைப்பதைக் கேட்பேன்” என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த பலவிதமான துன்பங்களுக்கும் அவர்கள் கடவுளுடைய வார்த்தைக்குச் செவிமடுக்காததே காரணமாக இருக்கும். இந்நிலையில் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வரும் யூதா நாட்டினர் செருபாபேல் தலைமையில் இரண்டாவது கோயிலைக் கட்டி எழுப்பினர்; நெகேமியாவின் தலைமையில் எருசலேமைச் சுற்றி மதில்சுவரைக் கட்டி எழுப்பினர். இதற்குப் பிறகு கொண்டாடப்பட்ட விழாவில் பாடப்பட்டதுதான் திருப்பாடல் 85.
“ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்” என்று பாடும் திருப்பாடல் ஆசிரியர். ஆண்டவர் உரைப்பதைக் கேட்கின்றபொழுதும், அவருக்கு அஞ்சி நடக்கின்றபோதும் என்ன ஆசிகளை ஆண்டவர் வழங்குவார் என்று பட்டியலிடுகின்றார். ஆம், மக்கள் ஆண்டவர் உரைப்பதைக் கேட்கின்றபோது, அவருடைய குரலுக்குச் செவிமடுத்து வாழ்கின்றபோது, நல் விளைவை நாடு நல்கும், இன்னும் பல்வேறு நன்மைகள் பெருகும்.
ஆதலால், நாம் ஆண்டவரின் குரலுக்குச் செவிமடுத்து, அவர் தருகின்ற ஆசிகளைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனைக்கு:
 கீழ்ப்படிதலைவிடச் சிறந்த பலி இல்லை.
 ஒருவருடைய உயர்வும் தாழ்வும் அவர் ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டு நடப்பதைப் பொறுத்தது.
 ஆண்டவர் நன்மைகளின் ஊற்றானவர். அவரை அணுகிச் செல்வோர் வெறுங்கையராய்த் திரும்புவதில்லை.
இறைவாக்கு:
‘என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்’ (விப 20:6) என்பார் ஆண்டவர். எனவே, நாம் ஆண்டவரின் குரலுக்குச் செவிமடுத்து, அவர் வழி நடந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம் .

Comments are closed.