நவம்பர் 30 திருத்தூதர் புனித அந்திரேயா

வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 18-22
அக்காலத்தில்
இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர்.
இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார்.
உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்.
உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————-
மறையுரைச் சிந்தனை
இன்று திருச்சபையானது திருத்தூதரும், மறைசாட்சியுமான தூய அந்திரேயாவின் விழாவைக் கொண்டாடுகின்றது.
இவர் திருத்தூதர் பேதுருவுக்கு அண்ணன். “வீர மனிதன்” என்று தன்னுடைய பெயருக்கு ஏற்ப வாழ்ந்தவர். தொடக்கத்தில் இவர் திருமுழுக்கு யோவானிடம் சீடராக இருந்தார். அப்போது இயேசு கடந்துசெல்கிறபோது திருமுழுக்கு யோவான் அவரைப் பார்த்து, “இவரே கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று சுட்டிக்காட்டுகிறார். உடனே திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்த அந்திரேயாவும், இன்னொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்கின்றனர்; அவரோடு தங்குகின்றனர்; இயேசுவே மெசியா எனக் கண்டுணர்ந்து கொள்கின்றனர். அந்திரேயாவோ தனது சகோதரன் பேதுருவிடம் சென்று “நாங்கள் மெசியாவைக் கண்டோம்” என்று சொல்லி, அவருக்கு இயேசுவை அறிமுகப்படுத்துகிறார். (யோவான் 1:35 – 41).
அதே போன்று கலிலேயாக் கடலோரமாய் நின்று பேதுருவும், இவரும் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அவ்வழியாய் வரும் இயேசு, “என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள், நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்குவேன்’ என்று சொன்னபோது அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவை பின்தொடர்ந்து செல்கிறார்கள். இவ்வாறு பேதுரு உட்பட அந்திரேயா ஆண்டவர் அழைத்தவுடன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவரைப் பின்தொடர்கிறார்கள்.
இயேசுவின் பணிவாழ்வின்போதும் அந்திரேயா ஒருசில இடங்களில் முக்கியத்துவம் பெறுவதையும் நற்செய்தியிலே வாசிக்கின்றோம். யோவான் நற்செய்தி 6:1-15 ல் ஆண்டவர் இயேசு பாலைவனத்தில் போதித்துக் கொண்டிருக்கும்போது மக்கள் பசியால் வாடுவதை உணர்ந்து, அவர்களுக்கு உணவிட நினைக்கிறார். அப்போது அந்திரேயாவோ, “இங்கே சிறுவனிடத்தில் ஐந்து அப்பங்களும், இரண்டு மீண்டுகளும் இருக்கின்றன” என்று சொல்லி இயேசு அப்பங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றார்.
ஒருமுறை கிரேக்கர்கள் இயேசுவைக் காணவேண்டும் என்று பிலிப்பிடம் வருகிறபோது, பிலிப்பு அவர்களை அந்திரேயாவிடம் அழைத்து வர, அவர் அவர்களை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு போகிறார். இப்படியாக நற்செய்தி முழுவதும் மக்களை இயேசுவிடம் அழைத்துச்செல்லும் பணியை சிறப்பாக செய்கின்றார். பேதுருவையும் இவர் இயேசுவிடம் அழைத்துச் சென்றார் என்று மேலே வாசித்ததை இங்கே நினைவுபடுத்திகொள்வோம்.
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு இவர் சித்தியாவிற்கு (ரஷ்யா) நற்செய்தி அறிவிக்கச் சென்றார்; அங்கே பைசாந்திய நகரின் ஆயராக இருந்தார் என்று திருச்சபையின் தந்தைகளில் ஒருவரான ஆரிஜின் குறிப்பிடுவார். மேலும் இவரைப் பற்றிய செய்தி ‘அந்திரேயாவின் பணி’ என்ற திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத நூலிலிருந்து அதிகமாக படித்தறிய முடிகிறது.
அந்திரேயா பார்வையற்றவருக்கு பார்வையளித்தார் என்றும், இறந்தவரை உயிர்ப்பித்தார் என்றும், பேய்களை ஓட்டினார் என்றும் அந்த நூலிலே படிக்கின்றோம். சித்தியாவில் நற்செய்தி அறிவித்த அந்திரேயா பத்தாரஸ் என்ற இடத்திற்கு நற்செய்தி அறிவிக்கச் செல்கிறார். அங்கே ஆளுநராக இருந்தவன் ஏஜெரஸ். அவருடைய மனைவி மாக்சிமில்லா தீராத நோயினால் படுத்தபடுக்கையாய் கிடைந்தபோது அந்திரேயா அவரைக் குணப்படுத்துகிறார். இதனால் மனமாற்றம் அடைந்த அவர் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றத் தொடங்கினார். இது பிடிக்காத அவருடைய கணவன் அந்திரேயாவை சிலுவையில் அறைந்து கொலை செய்யத் தீர்மானித்தான்.
அந்திரேயாவை X வடிவில் இருந்த சிலுவையில் கொல்லத் திட்டமிட்டான் அந்நகரின் ஆளுநன். இதை அறிந்த அந்திரேயா “ஓ மாட்சிமை மிகுந்த சிலுவையே, உனக்காகத் தான் நான் இத்தனை நாள்கள் ஏங்கிக்கொண்டிருந்தேன்” என்று சொல்லி சிலுவைச் சாவை மிகத் துணிவோடு ஏற்றுக்கொண்டு கி.பி.70 ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி உயிர்துறந்தார்.
அந்திரேயாவின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இவரது வாழ்வு நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம். முதலாவதாக இவர் இயேசுவை மெசியா என அறிந்துகொள்கிறார். அறிந்ததோடு மட்டுமல்லாமல் அதனை தன்னுடைய சகோதரனான பேதுருவுக்கும் எடுத்துரைத்து, அவரை இயேசுவிடம் அழைத்துக் கொண்டுவருகிறார்.
நாமும்கூட இயேசுவை மெசியா என ஏற்று, அதனை பிற மக்களுக்கும் அறிமுகம் செய்ய, அவர்களை நம்பிக்கையில் வளர்க்க அழைக்கப்படுகின்றோம். உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் “இயேசுவே ஆண்டவர் என்று வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரை கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என்று நம்பி ஏற்றுக் கொள்வோர் மீட்கப்படுவார்” என்கிறார் தூய பவுலடியார். ஆக, நாம் ஒவ்வொருவரும் இயேசுவை மெசியா என ஏற்று, அவர் காட்டும் வழியில் நடக்க முயற்சி செய்யவேண்டும்.
அடுத்ததாக அந்திரேயாவை இயேசு அழைத்தபோது அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கிறார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் உலக செல்வங்களைத் துறந்து, உண்மையான செல்வதைப் பற்றிக் கொள்கிறார். நாம் உலக செல்வத்திற்குப் பின்னாலா? அல்லது உண்மைச் செல்வமாகிய இயேசுவுக்கு பின்னாலா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இருபதாம் நூற்றாண்டில் திருச்சபையில் மிகப்பெரிய எழுத்தாளராக அறியப்பட்டவர் ஹென்றி நூவன். ஒருமுறை சிலர் அவருடைய எழுத்தாற்றலையும், திறமையையும் பார்த்துவிட்டு அவரை ஹார்வேட் பல்கலைக்கழகத்திலே பணியாற்றக் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவரோ எனக்கு எந்தப் பொறுப்பும் தேவையில்லை என்று சொல்லி கனடாவில் உள்ள டொராண்டோ என்ற இடத்தில் இருக்கும் ஒரு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அருட்பணியாளராக பணியாற்றினார்.
தனக்கு பேரும், புகழும் வந்தாலும் ஆண்டவருக்காக, அவருடைய மக்களுக்காக மட்டுமே பணிசெய்வேன் என்று சொன்ன ஹென்றி நூவனின் செயல் உண்மையிலே பாராட்டுக்குரியது. அந்திரேயாவும் இயேசுவுக்காக மட்டுமே பணிசெய்வேன் என்று எல்லாவற்றையும் துறந்துவாழ்ந்தார்.
ஆதலால் இவருடைய விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இயேசுவை மெசியா என ஏற்று, அவரை எல்லா மக்களுக்கும் அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர் ஆவோம். இறையருள் பெறுவோம்.

Comments are closed.